

’பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன.’ இந்த வாக்கியமே சலிக்கும் அளவுக்கு தினமும் புதிய உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது இந்திய பங்குச்சந்தைகள். வியாழன் வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 119 புள்ளிகள் உயர்ந்து 22214 புள்ளியிலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 40 புள்ளிகள் உயர்ந்து 6641 புள்ளிகளிலும் முடிவடைந்தன.
வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் அதிகபட்சமாக 22308 புள்ளியையும், நிஃப்டி 6674 புள்ளியையும் தொட்டன.
பி.எஸ்.இ. மிட்கேப் குறியீடு மற்றும் ஸ்மால்கேப் குறியீடும் உயர்ந்தே முடிவடைந்தன. மார்ச் மாத எக்ஸைபரி முடிவதனால், முதலீட்டாளர்கள் தங்களுடைய பொசிஷன்கள் முடித்துக் கொள்வதாலும் பங்குச்சந்தைகள் உயர்ந்தன. ரியால்டி, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறை பங்குகள் 1 முதல் 1.5 சதவீதம் வரை ஏற்றத்தில் முடிவடைந்தன.
கோல்ட்மேன் சாக்ஸ் தரமதிப்பீட்டு நிறுவனம் பொதுத்துறை பங்குகளை தகுதி ஏற்றம் செய்ததால் அந்த வங்கி பங்குகளின் குறியீடும் உயர்ந்து முடிவடைந்தன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை 3 முதல் 5 சதவீதம் வரை உயர்ந்தன. சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஐ.டி.பி.ஐ. அலஹாபாத் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை 1.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை உயர்ந்தன.
மாறாக ஐ.டி. மற்றும் ஹெல்த்கேர் குறியீடு சரிந்தே முடிவடைந்தன. மொத்தம் 1673 பங்குகள் உயர்ந்தும், 1127 பங்குகள் சரிந்தும் முடிவடைந்தன.
அந்நிய முதலீடு
மார்ச் மாதத்தில் மட்டும் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருக்கிறது. மத்தியில் நிலையான அரசு அமையும் என்ற நம்பிக்கையால் அந்நிய நிறுவன முதலீட்டாளரகள் தொடர்ந்து இந்திய சந்தையில் முதலீடு செய்து வருகிறார்கள்.
2014-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.17,000 கோடிக்கும் மேலான அந்நிய முதலீடு இந்தியாவுக்கு வந்திருக்கிறது. சந்தை வல்லுநர்களின் கணிப்பு படி இன்னும் 5 முதல் 6 சதவீதம் வரை சந்தை உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பது போல கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
கிரெடிட் சூஸ் நிறுவனமும் இந்தியாவின் தரமதிப்பீட்டை உயர்த்தி இருப்பது குறிப்பிடத் க்கது. சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. ஜப்பானின் நிக்கி ஒரு சதவீத ஏற்றத்துடனும், ஷாங்காய் காம்போசிட் 0.8 சதவீதமும் சரிந்தன. ஐரோப்பிய சந்தைகள் சரிவுடனே வர்த்தகத்தை ஆரம்பித்தன.
மும்பை பங்குச் சந்தையில் எஸ்பிஐ பங்குகள் அதிகபட்சமாக 4.04 சதவீதம் ஏற்றம் பெற்றன. இதற்கு அடுத்தபடியாக பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்கு விலை 4 சதவீதமும், ஹீரோ மோட்டோகார்ப் 3.11 சதவீதமும், கெயில் இந்தியா 1.75 சதவீதமும், என்டிபிசி 1.74%, ஆட்டோ 1.62%, ஹெச்யுஎல் 1.37%, ரிலையன்ஸ் 1.34%, ஓஎன்ஜிசி 1.34%, டாடா பவர் 1.29%, பிஹெச்இஎல் 1.23%, விப்ரோ 1.14% அளவுக்கு உயர்ந்தன.
ரெட்டீஸ் லேபரட்டரீஸ் 1.80%, எஸ்எஸ்எல்டி 1.26%, டாடா மோட்டார்ஸ் 1.10%, பார்மா 1% அளவுக்கு சரிவைச் சந்தித்தன.