Last Updated : 10 Jan, 2017 10:22 AM

 

Published : 10 Jan 2017 10:22 AM
Last Updated : 10 Jan 2017 10:22 AM

தொழில் முன்னோடிகள்: வால்ட் டிஸ்னி (1901 - 1966)

உங்கள் கனவுகளைத் துணிச்சலோடு பின் தொடருங்கள். அவை அத்தனையும் நனவாகும்.

- வால்ட் டிஸ்னி

எலியைப் பார்த்ததும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது பயம், அருவருப்பு.

சமீபத்தில் என் வீட்டில் பேரனுக்குப் பிறந்த நாள். இரண்டு, மூன்று வயதுக் குழந்தைகள் அழுதுகொண்டே இருந்தார்கள். என் மகள் அகிலா மிக்கி மவுஸ் வீடியோ போட்டாள். அத்தனை குழந்தைகளும் கப்சிப். அவர்கள் முகங்களில் ஆனந்தப் பரவசம். ஆமாம், மிக்கி, மினி என்னும் இரு எலிகளின் விளையாட்டுகளில் சுட்டிகள் அத்தனை பேரும் லயித்துப் போனார்கள்.

பயம், அருவருப்புத் தருகிற எலியைக் குழந்தைகளின் செல்லப் பிராணியாக்கியிருப்பது வால்ட் டிஸ்னி மேஜிக்

****

மிக்கி மவுஸ், மினி மவுஸ், டொனால்டு டக், டெய்ஸி டக், கூஃபி, புளூட்டோ கார்ட்டூன் கதாபாத்திரங்கள், உலகின் முதல் கலர் கார்ட்டூன், முதல் பேசும் கார்ட்டூன் படம், ஸ்நோஒயிட்டும் ஏழு குள்ளர்களும், பினாஷியோ, ஸ்லீப்பிங் பியூட்டி போன்ற சினிமாக்கள், டிஸ்னிவேர்ல்ட், டிஸ்னிலான்ட் என்னும் பொழுதுபோக்கு உலகங்கள் - இவை அத்தனையுமே டிஸ்னி படைப்புகள்.

டிஸ்னிக்குக் கிடைத்திருக்கும் ஆஸ்கார் விருதுகள் எத்தனை தெரியுமா? ஒன்று, இரண்டு அல்ல, இருபத்து ஆறு. இரண்டாம் இடத்தில் இருக்கும், ஆடை வடிவமைப்பாளர் எடித் ஹெட் வாங்கியிருக்கும் ஆஸ்கார்கள் எட்டு! இதிலிருந்தே தெரியும், எத்தனை உயரத்தில் இருக்கிறார் டிஸ்னி என்று.

ஏழ்மைக் குடும்பப் பின்புலம், அரைகுறைப் படிப்பு, பங்காளிகளின் துரோகம், பிசினஸ் தோல்விகள் எனப் பல தடைக்கற்களை மீறி, தன் திறமையால் மட்டுமே போராடிப் பெற்றவை, இந்தச் சாதனைகள்.

இவர் முழுப் பெயர் வால்ட் இலியஸ் டிஸ்னி. செல்லமாக வீட்டில் வால்ட் என்று கூப்பிட்டார்கள். 1901 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில், இலியஸ், ஃப்ளோரா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். மூன்று அண்ணன்கள், ஒரு தங்கை. அப்பா கட்டடங்கள் கட்டும் கான்ட்ராக்டர். டிஸ்னியின் நான்காம் வயதில், மாமா வாங்கிய பண்ணை வீட்டுக்குக் குடும்பம் குடிபெயர்ந்த்து. அந்த இயற்கைச் சூழ்நிலை டிஸ்னிக்கு ரொம்பவும் பிடித்தது. யாரும் கற்றுக் கொடுக்காமல், பண்ணையில் இருக்கும் செடிகொடிகள், மரங்கள், மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றை வரையத் தொடங்கினான். கொஞ்ச நாட்களில், ஆர்வம் கார்ட்டூன்கள் பக்கம் திரும்பியது. தினமும் வீட்டுக்குப் பேப்பர் வரும், அதில் வரும் கார்ட்டூன்களை டிஸ்னி வரைவான்.

பக்கத்து வீட்டுக்காரர் பொடியனின் திறமையைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அவருடைய குதிரையை வரைந்து தரச் சொன்னார். கொடுத்தான். கணிசமான சன்மானம் தந்தார். படம் வரைந்தால் பணம் பண்ண முடியும் என்பது குழந்தை மனதில் பதிந்தது. பிசினஸ் புத்தி வளரத் தொடங்கியது. அக்கம் பக்கத்தார் படங்களை வரைந்தான். அவர்களுக்கு விற்றுக் காசு பண்ணினான்.

டிஸ்னியின் எட்டாம் வயதில்தான் அவனை முதலில் ஸ்கூலுக்கு அனுப்பினார்கள். அம்மா தினமும் தூங்கும் முன்னால், மாயாஜாலக் கதைகள் படிப்பார், இவை படிக்கும் பழக்கத்தையும், கற்பனை சக்தியையும் அமோகமாக வளர்த்தன. தன் பத்தாம் வயதில் ஒரு நண்பன் வீட்டில் டிஸ்னி முதன் முதலாக சினிமா பார்த்தான். சொக்கிப் போனான். அடிக்கடி சினிமா பார்க்கத் தொடங்கினான். படம் வரைவதும், சினிமா பார்ப்பதும் முக்கிய வேலைகளாயின.

அப்பாவின் பிசினஸில் நஷ்டம் வந்தது. அவர் உடல்நலம் கெட்டது. குடும்பத்துக்கு உதவி செய்ய, டிஸ்னி, வீடுகளுக்குப் பேப்பர் போடும் ஏஜென்ஸி எடுத்தான். காலை 3.30 மணிக்கு எழுந்திருப்பான். பேப்பர் போட்டுவிட்டு பள்ளிக்கூடம் போவான். மாலையில் மறுபடியும் பேப்பர். உடல் களைப்பால் வகுப்பில் எப்போதும் தூங்கி வழிவான். வீட்டுக்கு வந்தபின் கார்ட்டூன்கள், சினிமா. பள்ளிக்கூடம் போகவே அவனுக்குப் பிடிக்காது. ஆனால், சனி, ஞாயிறுகளில் படம் வரையும் வகுப்பில் சேர்ந்தான். அதற்கு படு உற்சாகத்தோடு போவான். தருகிற ஹோம் ஒர்க்கைவிடப் பல மடங்கு அதிகமாக வரைந்து, டீச்சர்களை அசத்துவான்.

1917. பள்ளியில், மாணவர்களுக்காகப் பேப்பர் நடத்தினார்கள். அப்போது முதலாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தது. இதுதான் வாய்ப்பு என்று டிஸ்னி யுத்தம் பற்றிய கார்ட்டூன்கள் வரைந்து தள்ளினான். எக்கச்சக்கப் படங்கள், அவற்றில் காட்டிய நுணுக்கங்கள், பதினாறு வயதில் இத்தனை மனப்பக்குவமா என்று எல்லோரும் பிரமித்தார்கள். இவன் சாதாரணமானவன் இல்லை. அதிமேதை என்று முடிவு கட்டினார்கள்.

அன்று கார்ட்டூன்கள் வெறும் பொழுதுபோக்குதான். அதை நம்பி வாழ்க்கை நடத்தமுடியாது. அப்போது யுத்தத்துக்காக ராணுவத்துக்கு ஏராளமானவர்களை வேலைக்கு எடுத்துக்கொண்டிருந்தார்கள். டிஸ்னியின் இரண்டு அண்ணன்களும் போர்முனைக்குப் போனார்கள். இவனையும் அனுப்ப அப்பா மறுத்தார். ஆசைப்பட்டதை அடையும் பிடிவாதம் டிஸ்னிக்கு அதிகம். வீட்டுக்குத் தெரியாமல் முயற்சி செய்தான். ராணுவ வேலைக்குப் பதினேழு வயதாகவேண்டும். இவன் வயதோ பதினாறு. நம் ஹீரோ குறுக்குவழி கண்டுபிடித்தான். போலிப் பிறப்புச் சான்றிதழ் தயாரித்தான். மிலிட்டரி ஆம்புலன்ஸ் டிரைவர் வேலை கிடைத்தது. பாடிய வாயும், ஆடிய கால்களும் சும்மா இருக்கமுடியாது. போர்க்கள மும்முர வேலைக்கு நடுவிலும் டிஸ்னியின் கைகள் எப்போதும் துறுதுறுத்தன. ஆம்புலன்ஸ் முழுக்கப் படங்கள் வரைந்தான். ராணுவ வீரர்கள் வீட்டுக்கு அனுப்ப அவர்கள் சீருடையில் இருக்கும் கார்ட்டூன்கள், போர்முனைக் காட்சிகள் ஆகியவை வரைந்து தந்தான். ஒன்றும் ஓசிக்குக் கிடையாது. கையில் காசு, வாயில் தோசைதான்.

1919. போர் முடிந்தது. வேலை போச்சு. தெரிந்த ஒரே தொழில் கார்ட்டூன்தானே? சில விளம்பர நிறுவனங்களில் ஆர்ட்டிஸ்ட் வேலை பார்த்தார். அனிமேஷன் கார்ட்டூன் படங்கள் தயாரிக்கலாம் என்று மேலதிகாரிக்கு ஐடியா கொடுத்தார். அது அன்று புரட்சிகரமான சிந்தனை. அதைப் புரிந்துகொள்ளும் திறன் அந்த மேலாளருக்கு இருக்கவில்லை. தங்கள் அபிமான நடிக, நடிகைகளை வெள்ளித்திரையில் பார்க்க மக்கள் வருகிறார்கள், கார்ட்டூன்களை யார் பார்ப்பார்கள், இது பைத்தியக்கார யோசனை என்று டிஸ்னியைக் கேலி செய்தார்.

ஆனால், டிஸ்னிக்கு தன் ஐடியா ஜெயிக்கும் என்று அபார நம்பிக்கை. 1922 ம் ஆண்டு வேலையை விட்டார். லா-ஓ கிராம் ( Laugh-O-Gram) என்னும் பெயரில் சொந்த நிறுவனம் தொடங்கினார். ஒரு சின்னப் பெண்ணும், கார்ட்டூன் கதாபாத்திரங்களும் கொண்ட அலிஸ் இன் கார்ட்டூன்லான்ட் என்னும் குறும்படம் தயாரித்தார். உள்ளூர் தியேட்டர் திரையிட்டது. மக்களிடையே பயங்கர வரவேற்பு. இந்த வெற்றியைப் பார்த்த பிக்டோரியல் ஃபிலிம்ஸ் என்னும் சினிமா நிறுவனம் அமெரிக்கா முழுவதும் டிஸ்னியின் கார்ட்டூன் படங்களைத் திரையிட ஒப்பந்தம் போட்டது. ஒளிமயமான எதிர்காலம் டிஸ்னி கண்களில் தெரிந்தது. ஆனால், இது நிஜமாகும் முன், பிக்டோரியல் ஃபிலிம்ஸ் திவாலானது. அவர்களை நம்பிக்கொண்டிருந்த லா ஓ கிராமும் மூடும் நிலைக்கு சென்றது.

டிஸ்னியின் மாமா ஹாலிவுட்டில் இருந்தார். டிஸ்னி அங்கே போனார். வயது 21. கையில், சில துணிமணிகள், சில்லறைச் செலவுக்கான பணம், அலிஸ் இன் ஒண்டர்லான்ட் கார்ட்டூன் படம். முதல் பிசினஸ் முயற்சியில் டிஸ்னி தோற்றிருக்கலாம், பணத்தை இழந்திருக்கலாம். ஆனால், நம்பிக்கையை இழக்கவில்லை. முயற்சியைத் தொடர்ந்தார். உதவிக்கு வந்தார் மாமா. அவர் 250 டாலர் தந்தார். அங்குமிங்கும் 500 டாலர் புரட்டிக் கொடுத்தார். டிஸ்னியும், தம்பியும் பங்குதாரர்களாக, டிஸ்னி பிரதர்ஸ் ஸ்டுடியோ பிறந்தது.

கையிருப்புப் பணத்தில், டிஸ்னி நியூயார்க்கில் இருந்த மார்கரெட் வின்க்லர் என்னும் சினிமா விநியோகஸ்தருக்கு அலிஸ் இன் ஒண்டர்லான்ட் கார்ட்டூன் படத்தை அனுப்பினார். வின்க்லர் பிரமித்துப்போனார். அமெரிக்கா முழுவதும் வெளியிடும் ஒப்பந்தம் செய்துகொண்டார். டிஸ்னி உருவாக்கும் பிற கார்ட்டூன் பாத்திரங்களுக்கும் உரிமை வாங்கிக்கொண்டார். ஆஸ்வால்ட் என்னும் பெயரில் டிஸ்னி வரைந்த முயல் படம் நாடு முழுக்கப் பிரபலமானது.

1927. டிஸ்னி வயது 26. இத்தனை இளம் வயதில் பிசினஸ் வெற்றி, பணம், புகழ். ஒளிமயமான ராஜபாட்டை டிஸ்னி கண்கள் முன்னால் தெரிந்தது. அப்போது அவருக்குத் தெரியாது, தான் புதைகுழியில் காலை வைத்திருக்கிறோம் என்று. அந்தப் படுகுழி……….

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x