

அரசின் கொள்கை முடிவுகளால் ரியல் எஸ்டேட் தேக்க நிலையைச் சந்தித்துள்ளது. அதிக முதலீடு தேவைப்படும் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு நிதி மிகவும் அவசியம். குறைந்த வட்டியில் கடன் அளிக்கும் வங்கிகள் இத்தொழிலுக்குக் கடன் அளிப்பதற்குத் தயக்கம் காட்டுகின்றன. நிதிப் பற்றாக்குறையால் இத்துறை முடங்கியுள்ளது. மேலும் வங்கிகள் இடம் வாங்குவதற்கு கடன் அளிப்பதில்லை. மாறாக திட்டப் பணிகளுக்குக் கடன் அளிக்கிறது. மேலும் குறிப்பிட்ட கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பிரபல நிறுவனங்களுக்கு மட்டுமே கடன் கிடைக்கிறது.
வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள் கடன் அளித்தாலும் அதிக வட்டி வசூலிக்கின்றன. மேலும் கடன் அளிக்கும் தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற ரியல் எஸ்டேட் தொழிலுக்கு கடன் அளிப்பதில்லை. பல்வேறு துறைகளில் நேரடி அன்னிய முதலீடு இருந்தாலும் ரியல் எஸ்டேட் துறையில் அன்னிய முதலீடு இல்லவே இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 8 சதவீத அளவுக்கு ரியல் எஸ்டேட் பங்களிப்பு இருந்தது. ஆனால் இப்போது இத்துறை பங்களிப்பு 3 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது.
மத்திய அரசு டவுன்ஷிப், வீடுகள், கட்டுமானம் உள்ளிட்டவற்றில் 100 சதவீத அளவுக்கு அன்னிய முதலீடுகளை அனுமதிக்கிறது. ஆனால் இங்கு இருக்கும் விதிமுறைகள்தான் முதலீடுகளைத் தடுப்பதாக இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி குறைந்தபட்சம் 1 கோடி டாலர் முதலீடு செய்யப்படும். குறைந்தது 50 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு வரை கட்ட வேண்டும். குறைந்தபட்ச திட்ட காலம் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளாகும். மொத்த திட்டத்தில் 50 சதவீதப் பணிகள் 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனைகள் முதலீடுகளைத் தடுக்கின்றன.
நிறுவனங்கள் விரும்பும்போது வெளியேறும் வசதி இருக்க வேண்டும். குறைந்தபட்ச முதலீட்டுக்கான வரம்பு நிர்ணயிக்கப்படக்கூடாது. ஏற்கெ னவே 50 ஆயிரம் சதுர மீட்டர் என இருந்த அளவு 20 ஆயிரம் சதுர மீட்டராகக் குறைக்க நகர்ப்புற வீட்டு வசதி மற்றும் ஏழ்மை ஒழிப்பு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை எனும் அமைப்பை ஏற்படுத்துவது தாமதமாவதால், ஏற்கெனவே நிதிச் சிக்கலில் அவதிப்படும் இத்துறை மேலும் சிரமத்துக்குள்ளாகியுள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் பணப் புழக்கம் முற்றிலுமாகக் குறைந்துவிட்டது. ஓராண்டுக்கு முன்பு வட்டி விகிதம் 12 சதவீதமாக இருந்தது. இப்போது 18 சதவீதமாக அதிகரித்துவிட்டது. வீடுகள் விற்பனையும் குறைந்துள்ளதால், கடனை திரும்பச் செலுத்துவதில் நிறுவனங்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
நிதி அமைச்சகத்தின் பரிந்துரையின்படி ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வங்கிகள் அளித்த கடனை சீரமைப்பு, கடன் திரும்ப செலுத்தும் காலத்தை மாற்றியமைப்பது, உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது இத்தொழிலை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
ரியல் எஸ்டேட் தொழிலுக்கு கட்டமைப்புத் தொழில் அந்தஸ்தை தருவதற்கு அரசு ஏன் தயங்குகிறது என்பது புரியவில்லை. அவ்விதம் அந்தஸ்து அளிக்கப்பட்டால் குறைந்த வட்டிக்குக் கடன் கிடைக்கும். மேலும் இதில் கடனை திரும்ப செலுத்தாதவர்கள் எண்ணிக்கை குறையும். மேலும் கட்டுமானத்துக்காக ஒவ்வொரு துறையிலும் அனுமதி வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. இத்துறை தேக்க நிலையிலிருந்து மீட்சி பெற உடனடியாக செய்ய வேண்டியது கட்டட அனுமதிக்கான விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும். அது வெளிப்படையானதாக இருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக ரியல் எஸ்டேட் கட்டுப்பாட்டு மசோதா இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதாக இல்லை.
ரியல் எஸ்டேட் துறைக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இத்துறையின் பங்களிப்பு 13 சதவீத அளவுக்கு உயரும் என்று சர்வதேச அளவிலான கட்டுமானத்துறை ஆலோசகரான சிபி ரிச்சர்ட் எல்லிஸ் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
இத்துறையில் நிலவும் சிரமங்கள் போக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.