

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை தொழில் நிறுவனங்கள் எவ்வளவு தொகையை டெபாசிட் செய்தன என்ற விவரத்தை தாக்கல் செய்யுமாறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தவிர நிறுவனங்களுக்கான நிதி நிலை அறிக்கையை தயார் செய்யும் தணிக்கையாளர்கள் தங்களது அறிக்கையில் இந்த விவரத்தைப் பதிவு செய்யுமாறுகேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ள டிசம்பர் 30 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.
நிறுவன சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற நிறுவனங்கள் இந்த கால கட்டத்தில் எவ்வளவு தொகையை மாற்றின என்ற விவரத்தைத் தாக்கல் செய்யுமாறு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகமும் கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கென கொடுக்கப்பட்ட படிவத்தில் விவரத்தைத் தாக்கல் செய்யுமாறு அறிவிக்கை மூலம் நிறுவனங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
நவம்பர் 8-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை தங்கள் நிறுவனத்தின் வசம் இருந்த பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட தொகையின் மதிப்பை தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பட்டய தணிக்கையாளர்களின் (சிஏ) கூட்டமைப்பான ஐசிஏஐ தங்களது உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் நிறுவன சட்டம் விதித்துள்ள புதிய விதிமுறையை நன்றாக கவனித்து அதன்படி அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட தொகைகளை அப்படியே பயன்படுத்த சில துறைகளில் அனுமதிக்கப்பட்டது. இதன்படி சொத்து வரி உள்ளிட்டவையும், நெடுஞ்சாலை சுங்க கட்டணம், பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் மற்றும் விமான டிக்கெட்டுகளுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் அனுமதிக்கப்பட்டன.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) மட்டும் சில குறிப்பிட்ட ஆர்பிஐ கிளைகளில் ஜூன் இறுதி வரை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.