Published : 29 Oct 2014 10:36 AM
Last Updated : 29 Oct 2014 10:36 AM

ஸ்நாப்டீல் நிறுவனத்தில் ஜப்பானின் சாப்ட்பேங்க் ரூ. 3,847 கோடி முதலீடு

ஜப்பானைச் சேர்ந்த இன்டர்நெட் மற்றும் டெலிகாம் நிறுவனமான சாப்ட்பேங்க், இந்தியாவின் முக்கிய இ-காமர்ஸ் நிறுவனமான ஸ்நாப்டீலில் 62.7 கோடி டாலர் (ரூ. 3,847 கோடி) முதலீடு செய்திருக்கிறது. மேலும் டாக்ஸி சேவை வழங்கும் நிறுவனமான ஓலா (Ola) நிறுவனத்தில் 21 கோடி டாலர்( ரூ. 1,260 கோடி) முதலீடு செய்திருக்கிறது.

வளர்ந்து வரும் நாடான இந்தியா எங்களுக்கு முன்னுரிமை நாடு, அதில் 1,000 கோடி டாலர் முதலீடு செய்யப்படும் என்று சாப்ட்பேங்க் அறிவித்த அடுத்த நாளே இந்த முதலீடுகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய இ-காமர்ஸ் துறையில் ஒரே முதலீட்டாளர் முதலீடு செய்த அதிகபட்ச தொகை இதுதான். மேலும் சாப்ட்பேங்க் செய்துள்ள இந்த முதலீடுகளில் மற்ற நிறுவனங்களின் பங்குகளும் இருக்கின்றன. ஆனால் அதை தெரிவிக்க இந்த நிறுவனம் மறுத்துவிட்டது.

இந்த முதலீடுகளை ஸ்நாப்டீல் தனது விரிவாக்கத்துக்கான பயன் படுத்தபோகிறது. அதாவது தனது நெட்வொர்கை விரிவு படுத்தும் வேலைகளில் ஈடுபடப்போகிறது. மேலும் புதிய நிறுவனங்களை கையகப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறது. குறிப்பாக மொபைல் டெக்னாலஜியில் ஈடுபடும் நிறுவனங்களை கையகப்படுத்தும் திட்டத்தை வைத்திருக்கிறது.

ஸ்நாப்டீல் நிறுவனம் இதுவரை 100 கோடி டாலர் முதலீட்டை திரட்டி இருக்கிறது. மொபைல் டெக்னாலஜியில் செயல்பட்டு வரும் நான்கு நிறுவனங்களை வாங்குவது தொடர்பாக கவனித்து வருகிறது.

இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த ஸ்நாப்டீல் நிறுவனத்தின் நிறுவனர் குனால் பஹல் 10 கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனங்கள் வரை கையகப்படுத்த தயாராகவே இருக்கிறோம் என்றார். தவிர, பெங்களூரில் 500 பொறியாளர்களுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஜப்பான் நிறுவனம் ஸ்நாப்டீல் நிறுவனத்தில் முதலீடு செய்தாலும் அந்த நிறுவனத்தில் எத்தனை சதவீத பங்குகளை வைத்திருக்கிறது என்பதை வெளியிடவில்லை. ஏற்கெனவே சாப்ட்பேங்க் இன்மொபி நிறுவனத்தில் முதலீடும், பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் சேர்ந்து கூட்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறது.

உலகில் இணையம் பயன் படுத்துவோர் எண்ணிகையில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இருந்தாலும் இந்தியவின் சந்தை வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று சாப்ட்பேங்க் நிறுவனத்தின் சி.இ.ஓ. நிகேஷ் அரோரா தெரிவித்தார் அரோரா இதற்கு முன்பு கூகுள் நிறுவனத்தின் முதன்மை பிஸினஸ் அலுவலராக இருந்தார்.

ஸ்நாப்டீல் நிறுவனம் 2010-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு 2.5 கோடி பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஆண்டின் தொடக்கத்தில் இ-பே நிறுவனம் 13.37 கோடி டாலர் முதலீடு செய்தது. மைரியாட், பிளாக்ராக் உள்ளிட்ட சில முதலீட்டு நிறுவனங்கள் சேர்ந்து 10.5 கோடி டாலர் முதலீடு செய்தது.

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா தன்னுடைய சொந்த முதலீட்டை ஸ்நாப்டீல் நிறுவனத்தில் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x