‘ஒவ்வொரு நொடியையும் நான் அனுபவித்து பணியாற்றினேன்’: ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் பேச்சு

‘ஒவ்வொரு நொடியையும் நான் அனுபவித்து பணியாற்றினேன்’: ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் பேச்சு
Updated on
2 min read

தன்னுடைய பணிக்காலத்தில் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து பணியாற்றியதாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார். தனது 3 ஆண்டுக்கால ஆர்பிஐ கவர்னர் பதவிக்காலம் அருமையானது என்று கூறியுள்ள ரகுராம் ராஜன், தனது பணியின் உடன்பாடான விளைவுகள் 5 அல்லது 6 ஆண்டுகளில் வெளிப்படையாகத் தெரியவரும் என்றார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

"விமர்சனமோ, ஆதரவோ எந்த ஒன்றும் பெரிய விஷயமல்ல. இதுவரை ஆர்பிஐ சார்பாக எடுத்த முடிவுகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நீண்ட காலம் எப்படி வினையாற்றப்போகிறது என்பதே விஷயம். அதாவது வேலைவாய்ப்புகள் உருவாக்கம், நடுத்தர வருவாய் நாடாக முன்னேற்றம் அடைவது, வலுவான நீடித்த வளர்ச்சி ஆகியவற்றில் இந்த 3 ஆண்டுக்கால பணி சார்ந்த முடிவுகள் எவ்வகையில் உடன்பாடாக பங்களிப்பு செய்துள்ளது என்பதே முக்கியம்.

அதாவது 5 முதல் 6 ஆண்டுகளில் இதன் பயன்கள் தெரியவரும், அப்போதுதான் எனது பணிக்காலத்தில் எடுக்கப்பட்ட நிதிக்கொள்கைகள் சரியா இல்லையா என்பது வெளிப்படையாக தெரியவரும். எங்களது பார்வையில், நிலைமைகளை கணக்கில் கொள்ளும்போது நாங்கள் எடுத்த முடிவுகள் நியாயப்படுத்தப்படும் என்றே நினைக்கிறேன்.

எனது பணிக்காலம் பற்றி பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துகளை கொண்டிருக்கலாம், ஆனால் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் எப்படிச் செல்கிறது என்பதை பார்ப்போம், அதன் பிறகு இது நன்மையா, தீமையா என்று தீர்ப்பு வழங்குவோம்.

விமர்சகர்கள் எப்போதும் உள்ளனர், அவர்களுக்கு கூறுவதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. முகம் அறியாத நபர்களிடமிருந்தும் எனது பணி குறித்து பாராட்டுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

கடைசியில் நான் பயனுள்ள பங்களிப்பு செய்துள்ளேனா, அதனால் பயனடைந்துள்ளார்களா என்பதே நிற்கப்போகிறது. இந்தப் பார்வையிலிருந்து புரிந்து கொள்ளும்போது இந்த 3 ஆண்டுக்கால பதவிக்காலம் அருமையானது என்றே நான் கருதுகிறேன்.

ஏதோ பயனுள்ள வகையில் பணியாற்றியுள்ளோம், என்ற திருப்தியில் அலுவலகத்தை விட்டுச் செல்ல வேண்டும், ஒரு சில இடங்களில்தான் இத்தகைய திருப்தி ஏற்படும். இந்த வகையில் இது எனக்கு ஒரு அருமையான அனுபவமாக அமைந்துள்ளது, சில கூடுதல் மதிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன்.

நான் எனது முந்தைய பணியான சிகாகோ பல்கலைக் கழகத்திற்குச் செல்கிறேன், மேலும் பலதரப்பட்ட இந்திய பாடத்திட்டங்களிலும் ஈடுபாடு கொண்டிருக்கிறேன்.

ஆனால் இன்னமும் நான் எதையும் திட்டமிடவில்லை.இவ்வாறு கூறிய ரகுராம் ராஜன், ஊடகங்கள் தன் குடும்பத்தினரை அணுக முயற்சிப்பது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

`போலி மின்னஞ்சல்களை நம்பி ஏமாற வேண்டாம்’

பணம் தருவதாக ரிசர்வ் வங்கியின் பெயரில் வரும் மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம் என ரகுராம் ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். பணத்தை அச்சிடுவது ரிசர்வ் வங்கியாக இருந்தாலும் பொதுமக்கள் யாருக்கும் பணத்தினை நேரடியாக தருவதில்லை என்று நகைச்சுவையாக அவர் தெரிவித்தார்.

எனது பெயரிலோ அல்லது எதிர்காலத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநராகக் கூடியவர் பெயரில் இருந்தோ பணம் தருவதாகக் கூறி மின்னஞ்சல்கள் வந்தால் அதனை புறக்கணித்துவிடுமாறு ரகுராம்ராஜன் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ.20,000 செலுத்தினால் ரூ.50 லட்சம் தங்கள் வங்கி கணக்கில் ரிசர்வ் வங்கி சார்பில் செலுத்தப்படும் என்று வரும் மின்னஞ்சல்களை உடனடியாக அழித்து விடுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

”ரூ.20,000 பெற்றுக் கொண்டு ரூ.50 லட்சம் உங்களுக்கு நான் தருவதாக இருந்தால், அதற்கு பதிலாக ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.20,000 எடுத்துக் கொண்டு மீதமுள்ள ரூ.49.80 லட்சத்தை ஏன் நானாக உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்த முடியாது? இதனை ஒருமுறை சிந்தித்தால் இத்தகைய ஏமாற்று பேர்வழிகளிடம் நீங்கள் ஏமாற மாட்டீர்கள்” எனவும் ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in