

நாட்டின் பொருளாதாரம் வளரவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் கடன் வளர்ச்சி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசியல் மற்றும் பொதுக் கொள் கைக்கான தி இந்து மையம் சென்னையில் நேற்று ஏற்பாடு செய்திருந்த பட்ஜெட் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பொருளாதார நிபுணர்கள் நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதை எளிமைப்படுத்த வேண்டும் என்று கூறினர். ஜவுளித் தொழில் மற்றும் தோல் துறையில் இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பதன் மூலம் வேலை வாய்ப்பை பெருக்க முடியும் என்று ஐடிஎப்சி மையத்தின் மூத்த உறுப்பினர் பிரவீன் சக்ரவர்த்தி வலியுறுத்தினார். அவர் மேலும் கூறியதாவது: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடுக்கி விட, வாராக் கடன் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்து தொழில் நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதை எளிமைப்படுத்த வேண்டும்.
கடந்த மூன்று ஆண்டுகளாக கடன் வழங்குவதில் தொய்வு காணப்படுகிறது. வாராக் கடன் என்ற அளவில் ரூ. 15 லட்சம் கோடி முடங்கியுள்ளது. இதனால் புதிய கடன் கிடைப்பதில் சிரமம் நிலவுகிறது. இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும். வாராக் கடனாக முடங்கியுள்ள சொத்துகளை பொது ஏலம் விடுவதன் மூலம் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கலாம். இதனால் நிறுவனங்களுக்கு புதிதாக கடன் கிடைப்பது எளிதாகும். நிறுவனங்கள் முதலீட்டை அதிகரிக்கும் போது அது வளர்ச்சிக்கு வித்திடும் என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக வேலை வாய்ப்பை பெருக்குவதற்கான முயற்சிகள் காணாமல் போயுள்ளன. கடந்த ஆண்டு பட்ஜெட்டைப் போலவே இந்த ஆண்டும் கட்டமைப்புத் துறைகளான சாலை மற்றும் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்வி, சுகாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.திறன் மேம்பாடு, வேலை வாய்ப்புப் பெருக்கம் ஆகியன மத்திய அரசின் முன்னுள்ள சவாலான விஷயம் என்று அவர் கூறினார்.
பொருளாதார ஆய்வறிக்கையில் ஜவுளி, தோல் மற்றும் காலணித் துறையில் 100 மடங்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்று குறிப்பிடப்பட் டுள்ளது. ஆட்டோமொபைல் மற்றும் உருக்கு தொழில்களைக் காட்டிலும் இத்துறைகளில் வேலை வாய்ப்பை உருவாக்கலாம். இத்துறைகளில் திறன் பயிற்சி அளிப்பதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த விஷயத்தில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தலாம், ஆனால் பட்ஜெட்டில் இதுபற்றி குறிப்பிடப்படவேயில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.
திறன் மேம்பாடு குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை என்றாலும் இவ்விரு தொழில்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் அது செயல்படுத்தப்படுவதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம் என்று தென்னிந்திய தொழில் வர்த்தக சபையின் (எஸ்ஐசிசிஐ) வரி பிரிவு குழு உறுப்பினர் சிவிஎஸ் கிருஷ்ணகுமார் சுட்டிக் காட்டினார். இந்தியா வளர்ந்து வரும் சந்தையைக் கொண்டுள்ள நாடு. முதலீட்டாளர்களது நம்பிக்கையைப் பெறுவதன் மூலமும், தாராளமய கொள்கையை கடைப்பிடிப்பதன் மூலமும் அந்நிய முதலீடுகளை அதிகம் ஈர்க்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆர். சீனுவாசன், (பேராசிரியர், சென்னை பல்கலை) கூறியது: தனியார் பங்கேற்பை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை வளர்க்கலாம் என மத்திய அரசு உறுதியாக நம்புவது இந்த பட்ஜெட்டில் புலனாகியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) செலவு விகிதத்துக்கும், வருவாய் விகிதத்தையும் பார்க்கும் போது இது தெரியும். ஜிடிபிடில் வரி வருவாய் 9.74 சதவீதத்திலிருந்து 9.50 சதவீதமாக சரியும் என குறிப்பிடப் பட்டுள்ளது. வருவாய் குறைந்தாலும் செலவைக் கட்டுப்படுத்த அரசு முயற் சித்து செலவை 13.2 சதவீதத்திலிருந்து 12.7 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்துள்ளது. அத்துடன் பற்றாக் குறையை 3.2 சதவீத அளவுக்குள் கட்டுக்குள் வைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதிலிருந்தே தனியார் முதலீட்டை ஊக்குவித்து பொருளாதாரத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது புரியும். மத்திய அரசின் மொத்த செலவினத்தில் 20 சதவீதம் மாநில அரசுகளுக்கு அளிக்கப்படுகிறது. மாநில அரசு நிதியை திறம்பட செலவிடுவதை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை ஏதும் இதில் இல்லை. ஆனால் இது மிகவும் முக்கியமான விஷயம் என்று அவர் கூறினார்.
நிகழ்ச்சியை தி இந்து பிசினஸ் லைன் ஆசிரியர் ராகவன் ஸ்ரீனிவாசன் தொகுத்து வழங்கினார். கஸ்தூரி அன்ட் சன்ஸ் இயக்குநரும் தி இந்து நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான என். ரவி, கஸ்தூரி அண்ட் சன்ஸ் தலைவர் என். ராம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.