

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7 ரக ஸ்மார்ட்போனை கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி வெளியிட்டது. ஆனால் பேட்டரி பிரச்சினை காரணமாக போன் வெடித்து விட்டதாக செய்தி வெளியானதை அடுத்து கேலக்ஸி நோட் 7 உற்பத்தியை நிறுத்தி வைத்திருக்கிறது சாம்சங். மேலும் ஏற்கெனவே இந்த போனை வாங்கியவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வது மற்றும் பேட்டரி பிரச்சினையை சரி செய்வதில் நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்னும் இரு வாரங்களில் மாற்று போன் வழங்கப்படும் என்று சாம்சங் அறிவித்திருக்கிறது. ஆனால் கேலக்ஸி நோட் 7 மீண்டும் விற்பனை செய்யப்படுமா என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை. சோதனை செய்வதற்கு அதிக காலம் எடுத்துக்கொண்டதால் அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டிய போன்கள் காலதாமதம் ஆனது குறிப்பிடத்தக்கது. இதனால் நிறுவன பங்குகள் கடந்த வியாழக்கிழமை 3 சதவீத அளவுக்குச் சரிந்தன.