Published : 28 Feb 2017 10:30 AM
Last Updated : 28 Feb 2017 10:30 AM

தொழில் முன்னோடிகள் : கோனோசுக் மாட்ஸுஹிட்டா (1894 1989)

பிசினஸ் தொடங்கவும், நடத்தவும், சமுதாயத்தின் பணம், ஆட்கள், பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். லாபம் சம்பாதிக்காவிட்டால், சமுதாயத்துக்கு எதிராகக் குற்றம் செய்கிறோம் என்று அர்த்தம்.

- கோனோசுக் மாட்ஸுஹிட்டா

யார் இந்த கோனோசுக் மாட்ஸுஹிட்டா?

`தெரியாது’ என்று சொல்கிறீர்களா?

உங்களுக்கு இவரைத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இவர் தொடங்கிய நிறுவனம் உங்கள் எல்லோருக்கும் பரிச்சயமான நிறுவனம். இவர்கள் தயாரிக்கும் டி.வி, ஹோம் தியேட்டர், ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் அவன்கள், போன்கள் ஆகியவற்றில் ஒரு பொருளையாவது நிச்சயமாக நீங்கள் வாங்கி, பயன்படுத்தி, மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள். அந்த நிறுவனம் உலகப் புகழ் பெற்ற ஜப்பானின் பானசோனிக் கார்ப்பரேஷன்.

மாட்ஸுஹிட்டா குடும்பம் பாரம்பரிய பணக்காரக் குடும்பம். அவர் அப்பா மஸாக்குஸாவுக்கு மாளிகை வீடும், ஏக்கர் கணக்கில் விளைநிலங்களும் இருந்தன. நெல் வியாபாரம். பணம் கொட்டியது. மாட்ஸுஹிட்டா மூன்றாவது குழந்தை. அவரை அடுத்து வருடத்துக்கு ஒன்றாக ஐந்து பேர்.

மாட்ஸுஹிட்டா பிறந்த 1894 முதல் ஜப்பானில் அபரிமித பொருளாதார வளர்ச்சி. கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்கள் ஜப்பானில் வரத் தொடங்கின. குடும்பம் பயிரிட்ட நெல் விலை எகிறியது. குடும்ப வருமானமும். மாட்ஸுஹிட்டாவின் அப்பா, கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் ஏராளமாக முதலீடு செய்தார். 1899-ம் ஆண்டு மார்க்கெட் வீழ்ச்சி கண்டது. அப்பாவுக்குப் பயங்கர நஷ்டம். தங்கிய வீடு, நிலங்கள், சொத்துகள் அத்தனையையும் விற்றுக் கடன்களை அடைத்தார். பட்ட காலில்தானே படும்? மாட்ஸுஹிட்டாவின் மூத்த இரு அண்ணன்களும் நோய்வாய்ப்பட்டார்கள், மரணமடைந்தார்கள்.

மனைவி, ஆறு குழந்தைகள் சாப்பாட்டுக்கே ததிங்கிணத்தோம் போடும் நிலைமை. மாட்ஸு ஹிட்டாவின் ஐந்தாம் வயதில் அப்பா அவன் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மகனை வேலைக்கு அனுப்ப முடிவு செய்தார். ஐந்து வயதுச் சிறுவனுக்கு யார் வேலை தருவார்கள்? அவருடைய நண்பர், அருகிலிருந்த ஒஸாகா நகரில் கரியடுப்பு தயாரித்துக் கொண்டிருந்தார். நாள் முழுக்க வேலை. சம்பளம் கிடையாது. மூன்று வேளையும் வயிறு நிறையச் சாப்பாடு போடுவார்கள். மாட்ஸுஹிட்டாவை அங்கே விட்டுவிட்டு வந்தார். குழந்தை கதறி அழுதான். மனதைக் கல்லாக்கிக்கொண்டு அப்பா வீடு திரும்பினார். பிஞ்சுக்கைகள் கரிக்கு நடுவே உழைக்கவேண்டுமே என்னும் கவலையும், சோகமும் இருந்தாலும், குடும்பத்தில் இவன் ஒருவன் வயிறாரச் சாப்பிடுவானே என்னும் மனத்திருப்தி.

பதினொரு வயதானவுடன், மாட்ஸுஹிட்டா கரியடுப்பு வேலையை விட்டான்: ஒரு சைக்கிள் கடையில் சேர்ந்தான். அப்போது, ரஷ்ய ஜப்பானிய யுத்தம் முடிந்திருந்தது. ஜப்பான் ஜெயித்தது. அதுவரை தெரு விளக்குகள் எண்ணெயால் ஏற்றப்பட்டன. இவை மின்சார விளக்குகளாக மாறின. இதைப் பார்த்துப் பார்த்து அந்தச் சிறுவன் பிரமித்தான். மாயாஜால சக்தியாக மின்சாரம் அவனுக்குத் தோன்றியது. எப்படியாவது மின்சாரம் தொடர்பான துறையில் வேலைக்குச் சேரவேண்டும், நிறையப் பணம் சேர்க்கவேண்டும், குடும்பம் இழந்த வீட்டையும், நிலங்களையும் மீட்டு அப்பாவின் மானத்தை நிலைநாட்ட வேண்டும், அப்பா, அம்மா, தம்பி, தங்கைகளை வசதியாக வாழவைக்கவேண்டும் என்று அவன் மனம் ஆகாசக் கோட்டை கட்டியது .

விரைவில் மாட்ஸுஹிட்டா தன் கனவுப் பாதையில் முதல் அடி எடுத்துவைத்தான். பதினாறாம் வயதில், ஒஸாக்கா எலெக்ட்ரிக் லைட் கம்பெனியில் ஒயரிங் செய்யும் ஒர்க்கராகக் கடைநிலை வேலை. இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்தார். ஐந்தே வருடங்களில் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார்.

மனதில் இருந்த உறுதி உடலில் இருக்கவில்லை. அடிக்கடி உடல்நலம் கெட்டது. விடுமுறை எடுத்து வீட்டில் இருக்கவேண்டிய கட்டாயம். சாதாரணமாக, சும்மா இருப்பவர்களின் மனம் சாத்தானின் தொழிற்சாலை. ஆனால், மாட்ஸுஹிட்டாவுக்கோ, சும்மா இருந்த நேரங்கள், தன்னைப் பட்டை தீட்டிக்கொண்ட தருணங்கள். வேலையில் நீடித்தால், ஓரளவுக்குத்தான் சம்பாதிக்கமுடியும், வேகமாக முன்னேறவேண்டுமானால், சொந்தத் தொழில் தொடங்கவேண்டும் என்னும் முடிவுக்கு வந்தார்.

1917. மாட்ஸுஹிட்டா வயது 23. மின்கருவிகளில் பயன்படும் ஸாக்கெட் (Socket) என்னும் பொருத்துவானைப் புதிய முறையில் வடிவமைத்திருந்தார். அதைத் தயாரித்து விற்பனை செய்தால் நல்ல வியாபாரம் நடக்கும் என்று நம்பினார். மேலதிகாரிகள் அவர் யோசனையை உதறித் தள்ளினார்கள். மாட்ஸுஹிட்டா மனதில் விரக்தி. வேலையை விட்டார். புதிய ஸாக்கெட்டைத் தானே தயாரித்து விற்க முடிவெடுத்தார்.

ஐடியா இருந்தது, ஆசை இருந்தது. ஆனால், படிப்பு இல்லை, உற்பத்தியில் அனுபவம் இல்லை, காசு இல்லை. சேமிப்பு முழுக்க பிசினஸில் கொட்டினார். போதவில்லை. மனைவியின் நகைகள், விலை உயர்ந்த உடைகள் ஆகியவற்றை அடகு வைத்தார். நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கினார். மார்ச் 7, 1918. மாட்ஸுஹிட்டா எலெக்ட்ரிக் அப்ளையன்ஸ் தொழிற்சாலை திறந்தார். அவர், மனைவி, மச்சான் ஆகிய மூவரும் பங்காளிகள். அப்போது, சைக்கிள்களில் மெழுகுவர்த்தி அல்லது எண்ணெய் விளக்குகள் பயன்படுத்தினார்கள். மாட்ஸுஹிட்டா, பாட்டரியால் இயங்கும் சைக்கிள் விளக்கு கண்டுபிடித்தார். கூரையைப் பிய்த்துக்கொண்டு ஆர்டர்கள் கொட்டின. முதல் வருடமே கணிசமான லாபம்!

கண்டுபிடிப்பில் மட்டுமல்ல, தொலைநோக்குத் தொழிற்பார்வையிலும் மாட்ஸுஹிட்டா கில்லாடி. 1918 இல் முதல் உலகப்போர் முடிந்தது. அடுத்த சில வருடங்கள் உலகப் பொருளாதாரம் மிக மந்தமாக இருந்தது. தொழில் அதிபர்கள் முதலீடு செய்யத் தயங்கினார்கள். மாட்ஸுஹிட்டா பெரிய தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டார். ‘இது பைத்தியக்காரத்தனம்’ என்று எல்லோரும் சிரித்தார்கள். நம் ஹீரோ துணிந்து அடியெடுத்து வைத்தார். கட்டுமானப் பொருட்களை விற்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த வியாபாரிகள் அடிமாட்டு விலைக்குத் தங்கள் தயாரிப்புகளைத் தந்தார்கள். நம்பவே முடியாத செலவில் நவீனத் தொழிற்சாலை ரெடி. சில வருடங்களில் பொருளாதாரம் தலை தூக்கியபோது, தயாரிப்புத் திறனில் முன்னணியில் நின்றார் மாட்ஸுஹிட்டா. அவர் தொலைநோக்குப் பார்வைக்கும், ரிஸ்க் எடுக்கும் மனப்பான்மைக்கும் கிடைத்த பரிசு!

புதிய தொழிற்சாலையின் முதல் தயாரிப்பு, பாட்டரி போடும் ஃப்ளாஷ் லைட். அது சூப்பர் ஹிட் ஆகும் என்று மாட்ஸுஹிட்டாவின் உள்ளுணர்வு சொன்னது. அவருடைய மார்க்கெட்டிங் திறமைகள் அட்டகாசமாக அரங்கேறின. அந்தக் காலகட்டத்தில், தயாரிப்புப் பொருட்களுக்குப் பெயர் வைக்கும் ‘பிராண்ட்’ என்னும் முறை ஜப்பானில் பிரபலமாகவில்லை. மாட்ஸுஹிட்டா புதுப்பாதை போட்டார். தன் ஃப்ளாஷ்லைட்டுக்கு நேஷனல் என்று பெயர் வைத்தார். 10,000 விளக்குகளை ஜப்பான் முழுக்க வீடுகளுக்கு இலவசமாக விநியோகம் செய்தார். அதிகமான செலவு! அதே சமயம், வரலாறு காணாத வரவேற்பு. நேஷனல் மக்களுக்குப் பரிச்சயமான பெயரானது. உபயோகித்தார்கள், திருப்தி பெற்றார்கள். நேஷனல் என்னும் பெயரோடு வரும் எந்தப் பொருளையும் முழு நம்பிக்கையோடு வாங்கும் மனநிலைக்கு வந்தார்கள். எல்லா நிறுவனங்களும் ஏங்குவது கஸ்டமர்களின் இந்த நம்பிக்கைக்குத்தானே? இந்த அஸ்திவாரத்தில் மாட்ஸுஹிட்டா வெற்றிக்கோட்டை எழுப்பினார். நிறுவனம் கிடுகிடு வளர்ச்சி கண்டது. ஜப்பான் தாண்டி, உலகின் பல பாகங்களிலும் கால் பதிக்கத் தொடங்கியது.

1932. மாட்ஸுஹிட்டா வயது 38. இன்னும், இன்னும் பணம் சேர்க்கவேண்டும் என்று தொழிலதிபர்கள் துடிக்கும் வயது. நம்மவர் மனம் வித்தியாசமாகச் சிந்தித்தது. ‘கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிதே இளமையில் வறுமை’ என்றார் ஒளவைப் பாட்டி. வறுமைத் தீயின் கொடூரத்தில் பிறந்து வளர்ந்த மாட்ஸுஹிட்டா, தான் பெற்ற துன்பம் யாருக்குமே வரக்கூடாது என்பதில் தெளிவாக, உறுதியாக இருந்தார். தன் சித்தாந்தத்தை விளக்கினார். ‘பிசினஸின் குறிக்கோள் சமுதாயத்தின் ஒட்டுமொத்த வறுமையையும் ஒழித்துச் செல்வத்தை உருவாக்குவதுதான். இதற்கு, பிசினஸ்மேன்களின் உத்வேகமும், செயலாற்றலும் சமுதாயத்துக்குத் தேவை. மாட்ஸுஹிட்டா நிறுவனம் அளவில்லாப் பொருட்களைத் தயாரிப்பதன் மூலமாக, உலகில் அமைதியையும், செல்வச் செழிப்பையும் பரவச் செய்யும்.’

மாட்ஸுஹிட்டா வாய்ச் சொல் வீரரல்ல. தன் கனவை நனவாக்க, பி.எச். பி. இன்ஸ்டிடியூட் (PHP Peace and Happiness through Prosperity என்பதன் சுருக்கம்) என்னும் அமைப்பை உரு வாக்கினார். 95 வயதுவரை பிசினஸிலும், சமூக சேவையிலும் முழுமூச்சுடன் பணியாற்றினார்.

உற்பத்தி, மார்க்கெட்டிங், மனிதவள மேம்பாடு, சமுதாயப் பிரக்ஞை என பிசினஸின் சகல அம்சங்களிலும் தனிப்பாதை போட்ட மாட்ஸுஹிட்டாவை ஜப்பானியர்கள் ‘மேனேஜ்மென்ட் கடவுள்’ என்று மரியாதையோடு அழைக்கிறார்கள். ஒட்டுமொத்த உலகமும் ‘ஆமென்’ என ஆமோதிக்கும் உண்மை இது.

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x