Last Updated : 05 Sep, 2016 12:09 PM

 

Published : 05 Sep 2016 12:09 PM
Last Updated : 05 Sep 2016 12:09 PM

அக்டோபரில் வங்கி இணைப்பு பணிகள் தொடங்கப்படும்: எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா நம்பிக்கை

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் அதன் துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கி ஆகியவற்றை இணைக்கும் பணிகள் அக்டோபரில் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிவடையும் என எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: வங்கிகள் இணைப்பு குறித்து குறைகேட்பு கமிட்டி ஒன்றினை அமைத்திருந்தோம். அந்த கமிட்டி இம்மாத இறுதிக்குள் தன்னுடைய அறிக்கையை தாக்கல் செய்யும். வங்கிகள் இணைப்பு மற்றும் பங்குகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. பங்குதாரர்கள் தங்களுடைய கோரிக்கைகளை 21 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். அதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த குழு. இந்த குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் இரு பட்டய கணக்காளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த குழுவின் பரிந்துரைகளை இயக்குநர் குழு பரிசீலிக்கும். அதன் பிறகு இணைப்புக்காக மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் இறுதி அனுமதிக்கு அனுப்புவோம். துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கி இணைப்புக்குப் பிறகு புதிய வங்கிகளில் மத்திய அரசின் பங்கு 59.70 சதவீதமாக இருக்கும். கடந்த ஜூன் காலாண்டில் 61.30 சதவீதமாக மத்திய அரசின் பங்கு இருந்தது.

நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் வங்கி இணைப்பை முழுமையாக முடிக்க வேண்டும் என்பதுதான் எங்களது திட்டம். ஆனால் பல விஷயங்கள் சாதகமாக நடக்க வேண்டி இருக்கிறது. சட்ட ரீதியாக பலவிதமான சவால்கள் இருக்கின்றன. ஏற்கெனவே கேரளா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. முடிந்தவரை நடப்பு நிதி ஆண்டின் இறுதியில் இணைப்பு முழுமை பெறுவதற்கான பணிகள் நடக்கும் என்று அருந்ததி பட்டாச்சார்யா கூறினார்.

முன்னதாக கடந்த மாதத்தில் வங்கிகள் இணைப்புக்கு எஸ்பிஐ இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியது. இணைப்புக்குப் பிறகு சர்வதேச அளவில் 45-வது பெரிய வங்கியாக எஸ்பிஐ இருக்கும். புதிய வங்கி கையாளும் சொத்து மதிப்பு ரூ.37 லட்சம் கோடியாகும்.

புதிய வங்கிகள் 22,500 வங்கி கிளைகளும் 58,000 ஏடிஎம்கள் மற்றும் 50 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். தற்போது எஸ்பிஐ-க்கு 16,500 கிளைகள் உள்ளன. ஸ்டேட் பேங்க் ஆப் சௌராஷ்ட்ரா வங்கியை 2008-ம் ஆண்டும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தூரை 2010-ம் ஆண்டு எஸ்பிஐ தன்னுடன் இணைத்துக்கொண்டது.

ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய மூன்று பட்டியலிடப்பட்ட வங்கிகள் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் ஆகிய பட்டியல் செய்யப்படாத வங்கி மற்றும் பாரதிய மகிளா வங்கியையும் இணைத்துக் கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x