

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைண்ட்ட்ரீயின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ரஸ்தோ ராவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி கிருஷ்ணகுமார் நடராஜன் செயல் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது செயல் தலைவராக இருக்கும் சுப்ரதோ பக்ஷி அந்த பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால் இயக்குநர் (அன்றாட அலுவல் அல்லாத இயக்குநர்) குழுவில் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த புதிய மாற்றங்கள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. புதிய தலைமைச் செயல் அதிகாரியை தேடும் பணி நீண்ட காலமாக நடந்து வந்தது. நிறுவனத்துக்கு உள்ளே மற்றும் நிறுவனத்துக்கு வெளியேயும் புதிய தலைவரை தேடினோம். நீண்ட பரிசீலனைக்கு பிறகு புதிய சிஇஓ நியமிக்கப்பட்டார் என்று கிருஷ்ணகுமார் நடராஜன் தெரிவித்தார்.
44-வயதாகும் ராவணன் தற்போது ஐரோப்பா பகுதியின் தலைவராக இருக்கிறார். முன்ன தாக நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகவும் இவர் இருந் தார்.
மேக்நட் கையகப்படுத்தல்
அமெரிக்காவை சேர்ந்த மேக்நட் 360 நிறுவனத்தை 338 கோடி ரூபாய்க்கு மைண்ட்ட்ரீ வாங்கியது. இன்னும் சில மாதங்களில் இந்த இணைப்பு முழுமை அடையும். இந்த நிறுவனத்தில் இருக்கும் 150 பணியாளர்களும் மைண்ட்ட்ரீயில் இணைவார்கள்.
மினியோபொலிஸ் நகரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்துக்கு நியூயார்க், லாஸ் ஏஞ்சலீஸ் மற்றும் சிகாகோ ஆகிய நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன.
இந்த நிறுவனத்தின் வருமானம் ஆண்டுக்கு 20 முதல் 25 சதவீதம் உயர்ந்து வருகிறது. தற்போதைய வருமானம் 2.5 கோடி டாலர்கள் ஆகும்.
நிறுவனங்களை கையகப்படுத் துதலில் மைண்ட்ட்ரீ வேகமாக செயல்பட்டு வருகிறது. கடந்த வருடம் மட்டும் மூன்று நிறுவனங் களை வாங்கியுள்ளது.