

எஸ்.பி.ஐ. நிகர லாபம் சரிவு
இந்தியாவின் முக்கியமான பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 35% சரிந்திருக்கிறது. கடந்த வருட செப்டம்பர் காலாண்டில் ரூ 3,658 கோடி அளவுக்கு இருந்த வங்கியின் நிகர லாபம் இப்போது ரூ 2,375 கோடியாக குறைந்து விட்டது.
அதே சமயத்தில் வங்கியின் நிகர வட்டி வருமானம் 11.6 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருட செப்டம்பர் காலாண்டில் ரூ 10,974 கோடியாக இருந்த வட்டி வருமானம், இப்போது ரூ 12,251 கோடியாக அதிகரித்திருக்கிறது. செப்டம்பர் காலாண்டின் நிகர வட்டி வரம்பு 3.51 சதவிகிதமாக இருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் சிறிதளவு உயர்ந்து 5.64 சதவிகிதமாக இருக்கிறது. நிகர வாராக்கடன் 2.91 சதவிகிதமாக இருக்கிறது. வங்கியின் மூலதன தன்னிறைவு விகிதம் 11.69 சதவிகிதமாக இருக்கிறது.
புதன்கிழமை வர்த்தகத்தின் முடிவில் வங்கியின் 1 பங்கு விலை ஒரு சதவிகிதம் உயர்ந்து 1,697 ரூபாயில் முடிந்தது.
ஆந்திரா வங்கியின் நிகர லாபம் 78% சரிவு
ஆந்திரா வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 78 சதவிகிதம் சரிந்து ரூ.70.65 கோடியாக இருக்கிறது. கடந்த வருட இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ. 325.63 கோடியாக இருந்தது.
ஆனால் அதே சமயத்தில் வங்கியின் மொத்த வருமானம் 11.73 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.3,416.55 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வருமானம், இப்போது ரூ.3,817.57 கோடியாக உயர்ந்திருக்கிறது.
வாராக்கடன் மற்றும் இதர தேவைகளுக்காக ரூ 502 கோடியை இந்த வங்கி ஒதுக்கி இருக்கிறது.
வங்கியின் நிகர வாராக்கடனும் கடந்த வருடத்தை விட இப்போது அதிகரித்திருக்கிறது. கடந்த வருட செப்டம்பரில் 2.16 சதவிகிதமாக இருந்த நிகர வாராக்கடன், இப்போது 3.54 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.
புதன்கிழமை பங்கு வர்த்தகத்தின் முடிவில் நான்கு சதவிகிதம் சரிந்து, 59.60 ரூபாயில் இந்த பங்கியின் வர்த்தகம் முடிந்தது.
ஓ.என்.ஜி.சி. நிகர லாபம் 3% உயர்வு
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ஓ.என்.ஜி.சி.யின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 3 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருட செப்டம்பர் காலாண்டில் ரூ 5,896.57 கோடியாக இருந்த நிகரலாபம் இப்போது ரூ.6,063.86 கோடியாக உயர்ந்திருக்கிறது.
இத்தனைக்கும் நடந்து முடிந்த செப்டம்பர் காலாண்டில் 13,796 கோடி ரூபாய் அளவுக்கு மானியத்துக்காக (டீசல், எல்.பி.ஜி, மண்ணெண்ணெய்) ஒதுக்கியது.
ஒரு வேளை மானியத்துக்கு ஒதுக்காமல் இருந்திருந்தால் ரூ 7,621 கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்கும் என்று நிறுவனம் சொல்லி இருக்கிறது.
நிறுவனத்தின் விற்பனையும் சிறிதளவு அதிகரித்திருக்கிறது. கடந்த செப்டம்பரில் ரூ 19,885.09 கோடியாக இருந்த விற்பனை இப்போது ரூ 22,414.67 கோடியாக இருக்கிறது.
வர்த்தகத்தின் முடிவில் 1 சதவிகிதம் உயர்ந்து 268.85 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
மஹிந்திரா & மஹிந்திரா லாபம் 9.72% உயர்வு
எம் அண்ட் எம் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 9.72 சதவிகிதம் உயர்ந்து 989.50 கோடியாக இருக்கிறது. கடந்த வருடத்தின் இதே காலாண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் ரூ. 901.80 கோடி.
ஆனால் அதே சமயத்தில் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு வருமானம் 8 சதவிகிதம் சரிந்திருக்கிறது. கடந்த செப்டம்பரில் ரூ 9,659.20 கோடியாக இருந்த வருமானம், இப்போது ரூ 8,814.33 கோடியாக சரிந்திருக்கிறது.
வருமானம் குறைந்து லாபம் அதிகரித்ததற்கு நிறுவனத்தின் செலவுகள் குறைந்ததுதான் காரணம்.
செப்டம்பர் காலாண்டின் செலவுகள் 10 சதவிகிதம் வரைக்கும் குறைந்திருக்கிறது.
கடந்த வருடம் ரூ 8,872.43 கோடியாக இருந்த செலவுகள் இப்போது ரூ 7,981.64 கோடியாக சரிந்திருக்கிறது.
வர்த்தகத்தின் முடிவில் 1.76 சதவிகிதம் உயர்ந்து 895 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
ஜி.எம்.ஆர். நஷ்டம் அதிகரிப்பு
கட்டுமானத் துறையில் செயல்பட்டு வரும் ஜி.எம்.ஆர். இன்ஃப்ரா நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நஷ்டம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருட செப்டம்பர் காலாண்டில் ரூ 179 கோடியாக இருந்த நஷ்டம், இப்போது ரூ 393 கோடியாக அதிகரித்திருக்கிறது. எரிசக்தி துறையில் ஏற்பட்ட நஷ்டமும் வட்டி விகித உயர்வும் நஷ்டம் ஏற்பட காரணம் என்று நிறுவனம் சொல்லி இருக்கிறது.
அதே சமயத்தில் வருமானம் சிறிதளவு அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.2,399 கோடியாக இருந்த வருமானம் இப்போது ரூ 2,419 கோடியாக அதிகரித்திருக்கிறது. மேலும் கடந்த செப்டம்பரில் 485 கோடி ரூபாயை இந்த நிறுவனம் வட்டிக்காக செலவிட்டது. இப்போது 684 கோடி ரூபாயை செலவிட்டிருக்கிறது.
ஹைதராபாத் மற்றும் டெல்லி விமான நிலையங்களின் வருமானம் நிலையாகவும் அதே சமயத்தில் சீரான வளர்ச்சியும் இருப்பதாக நிறுவனம் சொல்லி இருக்கிறது. வர்த்தகத்தின் முடிவில் 5 சதவிகிதம் சரிந்து 20.85 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.