Published : 15 Apr 2017 12:30 PM
Last Updated : 15 Apr 2017 12:30 PM

தொழில் ரகசியம்: `வெளிப்பாடு கோட்பாடு உணர்த்தும் உண்மைகள்’

சரிகிக், ரஜேக்கி, கடிர்கா, நான் சோமோ, செபுலான், வோர்பஸ், ஸஜோன்க். இதென்ன, பாவம் செய்பவர்களுக்கு கருட புராணத்தில் தரப்படும் தண்டனை யின் பெயர்களா, அல்லது செய்யும் பாவங்களுக்கு இங்கேயே கழுவி ஊற்றும் புது வகை விரசமான வசவு வார்த்தைகளா?

இரண்டுமில்லை. இந்த வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தது அமெரிக்க பல்கலைக்கழக வகுப்பு போர்டில். ஒரு நாள் அல்ல. ஒவ்வொரு நாளும். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புரியாத வார்த்தைகள். யார் எழுதினார்கள் என்றும் தெரியவில்லை. என்ன அர்த்தம் என்றும் புரியவில்லை. சில நாள் ஒரு வார்த்தை மட்டும் எழுதப்பட்டிருக்க, மற்ற நாட்களில் இரண்டு, மூன்று வார்த்தைகள் இருந்தன. ‘ஸஜோன்க்’ என்ற வார்த்தை மட்டும் பல நாள் எழுதப்பட்டிருந்தது.

ஒன்பது வாரங்களுக்கு பிறகு மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அனைவரிடமும் ஒரு லிஸ்ட் தரப்பட, அதில் பதினான்கு வார்த்தைகள் எழுதப் பட்டிருந்தன. யாருக்கும் எதுவும் புரியாத வார்த்தைகள். அதில் ஐந்து போர்டில் இருந்த வார்த்தைகள். லிஸ்ட்டில் இருந்த வார்த்தைகளில் எவை பிடித்திருந்தது என்று கேட்ட போது போர்டில் அடிக்கடி பார்த்த வார்த்தைகளை பலர் தங்களுக்கு பிடித்த வார்த்தைகள் என்றனர்.

இந்த ஆய்வை நடத்தியவர் ‘ரிக் க்ராண்டல்’ என்ற உளவியலாளர். அடிக்கடி பார்க்கும் ஒன்று நம்மையறி யாமல் பிடித்துப் போகிறது என்பதே இந்த ஆய்வு நமக்கு சொல்வது. அது என்ன என்று புரியாவிட்டாலும். சில பேரை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும். சில பெயரை கூட பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும் போலிருக்கிறது!

பல காலம் இந்த விஷயத்தை ஆய்வு செய்யும் உளவியலாளர்கள் இதை ‘வெறும் வெளிப்பாடு கோட்பாடு’ (Mere Exposure Principle) என்கின்றனர். ஒன்றை வெறுமனே அடிக்கடி பார்பதன் மூலம் கூட அதை பற்றி நல்ல அபிப் ராயம் வளர்ந்து சமயங்களில் பிடிக்க செய்கிறது என்று விளக்கும் கோட்பாடு. அர்த்தம் இல்லாத வார்த்தைகளை கூட அடிக்கடி பார்த்ததால் மாணவர்களுக்கு அதன் மீது ஒரு ஈர்ப்பு வந்துவிட்டது.

இந்த கோட்பாட்டின் முன்னோடியாக கருதப்படுபவர் ‘ராபர்ட் ஸஜோன்க்’. ‘மிச்சிகன் பல்கலைக்கழகத்தில்’ `பி.எச்டி’ படித்து அதே கல்லூரியில நாற்பது ஆண்டுகள் சமூக உளவியல் துறையில் பேராசிரியராக இருந்தவர். புரியாத வார்த்தைகளை விடுங்கள், சீன மொழியில் முறுக்கு சுற்றியது போல் எழுதப்படும் வார்த்தைகளை அடிக்கடி பார்த்தவர்களுக்கு அது என்ன வார்த்தை, அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியாமலே கூட பிடிப்பதை ஆய்வுகள் மூலம் காட்டினார் ஸஜோன்க்.

படித்த மாத்திரம் `ஸஜோன்க்’ என்ற பெயர் உங்களுக்கு பிடித்திருக்குமே? ஏன் என்று புரிகிறதா? புரியாதவர்கள் கட்டுரையை முதலில் இருந்து மீண்டும் ஒரு முறை படிக்கவும்.

இக்கோட்பாட்டின் ஆச்சரிய மளிக்கும் பரிமாணத்தை விளக்கும் ஆய்வு அமெரிக்க மில்வாக்கி நகரில் நடத்தினார்கள் உளவியலாளர்கள். தொழில் ரகசியம் பகுதியை விடாமல் படிக்கும் நல்ல உள்ளங்களுக்கு இந்த ஆய்வை வேறொரு சமயத்தில் நான் எழுதியது நினைவிருக்கும். ஆய்வில் பங்கு பெற்றவர்கள் ஃபோட்டோ எடுக்கப்பட்டது. ரெகுலர் ஃபோட்டோவும், ரிவர்ஸ் முறையில் ஒரு ஃபோட்டோவும் எடுக்கப்பட்டன. ரிவர்ஸ் ஃபோட்டோ என்பது இடப்புற முகம் வலது புறமும் வலப்புற முகம் இடது புறமும் இடம் மாற்றப்பட்ட வகையில் அமைந்த ஃபோட்டோ.

இரண்டு படங்களும் ஃபோட்டோ வில் இருப்பவருக்கும் அவர் நண்பர் களுக்கும் காட்டப்பட்டு எந்த முகம் பிடித்திருக்கிறது என்று கேட்கப்பட்டது. நண்பர்களுக்கு நார்மல் ஃபோட்டோ பிடிக்க முகத்தின் சொந்தக்காரருக்கு ரிவர்ஸ் ஃபோட்டோ பிடித்திருந்தது.

ஏன் என்று புரிகிறதா?

ரிவர்ஸ் ஃபோட்டோ கண்ணாடியில் முகம் எப்படி தெரியுமோ அது போன்றது. இதைத் தான் நாம் தினம் பார்க்கிறோம். இந்த முகமே நமக்கு பரிச்சயம். அதனால் இது நமக்குப் பிடிக்கிறது. நண்பர்கள் பார்ப்பது நம் முகம் இருக்கும் நார்மல் ஃபோட்டோ போல. அதை அவர்கள் தினம் பார்ப்பதால் அந்த முகம் அவர்களுக்கு பிடிக்கிறது. வெறும் வெளிப்பாடு கோட்பாடு வேலை செய்யும் விதம் புரிகிறதா?

வாழ்க்கையில் வியாபாரத்தில் முக்கிய முடிவெடுக்கவேண்டிய பல தருணங்களில் இக்கோட்பாட்டின் பாதிப்பை பார்க்க முடியும். பங்குச் சந்தையில் விளையாடுபவர்கள் தெரிந்த கம்பெனி பங்குகளை வாங்கவே விரும்புவர். எவ்வளவுதான் சிறந்த கம்பெனியாக இருந்தாலும் தெரியாத பெயருள்ள கம்பெனி பங்குகளை வாங்க தயங்குவார்கள்.

அரசியல்வாதிகள் தினம் செய்திகளில் தங்கள் முகம் அல்லது பெயர் இடம் பெற விரும்புவதும் இந்த கோட்பாட்டின் கைங்கர்யத்தாலேயே. ஏதேனும் ஸ்டண்ட் அடிப்பது, தடாலடியாக அறிக்கை விடுவது ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் அமாவாசை பௌர்ணமிக்கு கூட மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது போன்றவை எல்லாம் எதற்கு என்று நினைக்கிறீர்கள்? தினம் தினம் தன் முகத்தை, பெயரை மக்கள் பார்க்க வைத்து தங்களை பிடிக்கும்படி செய்யலாம் என்ற அல்ப ஆசை தான்!

விளம்பரத்தில் இக்கோட்பாட்டின் தாக்கம் பற்றி ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மாணவர்களிடம் கம்ப்யூட்டரில் ஒரு கட்டுரை படிக்கச் சொல்லப்பட்டது. கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் கட்டுரைக்கு மேலே சின்ன விளம்பரங்கள் ஃப்ளாஷ் ஆகிக்கொண்டே இருந்தன. பிறகு மாணவர்களுக்கு சில விளம்பரங்கள் காட்டப்பட்டு அதில் எது பிடித்திருந்தது என்று கேட்கப்பட்டது. கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் பார்த்த விளம்பரங்களை மாணவர்கள் தங்களுக்கு பிடித்த விளம்பரங்கள் என்று தேர்ந்தெடுத்தனர். வெறும் வெளிப்பாட்டின் இன்னொரு வெளிப்பாடு தான் இதுவும்!

பிராண்டை ஓரிரு தரம் பார்க்கும் போது மனம் அதை முதலில் ஒப்புக்கொள்கிறது. பார்க்க பார்க்க அதன் மீது ஈர்ப்பு வளர்கிறது. அடிக்கடி பார்க்கும் போது அதன் மீது பிரியம் வளர்ந்து அதை பற்றிய நல்ல அபிப்ராயம் தோன்றி அதை வாங்கக் கூட மனம் விழைகிறது. இப்படி சொல்வதால் கோடி கோடியாய் விளம்பரத்திற்கு செலவழித்தால் தான் பிராண்ட் விற்று, பிசினஸ் வளர்ந்து, தொழில் தழைக்கும் என்றில்லை. பிராண்டை வாடிக்கையாளர் அடிக்கடி பார்க்கவைத்து பிராண்ட் பற்றிய செய்தி அவரை அடிக்கடி அடைந்தால் கூட போதுமானது. குறைந்த செலவில் இதை செய்யும் வழிகள் சிலவற்றை இப்பகுதியில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். குறைந்த செலவில் நிறைந்த பயனளிக்கும் வேறு சில முறைகளை சமயம் வரும் போது எழுதுகிறேன்.

விளம்பரத்தை ஆழ அலசி, ஆராய்ந்து அறிவிற்கேற்றதா என்று அறிந்து பார்க்க வேண்டிய அவசிய மில்லை என்பதையும் இக்கோட்பாடு விளக்குகிறது. பிராண்டை அடிக்கடி பார்க்கும் போது நம்மையறியாமல் நம் மனதை ஈர்க்கிறது. அதனால்தான் மார்க்கெட்டிங்கில் எப்பேர்பட்ட பிராண்டாக இருந்தாலும், அது எவ்வளவு திறனுடன் தயாரிக்கப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்கள் கண்களில் பட்டுக்கொண்டு இருந்தால்தான் பயன். அவுட் ஆஃப் சைட் இஸ் அவுட் ஆஃப் மைண்ட் என்பார்கள். கண்ணில் படாதிருந்தால் மனதில் படாமல் போகும்!

அதற்காக வெறுமனே விளம்பரம் எடுத்து ஏதோ விட்டேத்தியாய் வெளியிடாதீர்கள். வெறும் வெளிப்பாடு கோட்பாட்டை அறிந்து புரிந்து விளம்பரம் செய்யுங்கள். வாடிக்கையாளர்கள் கண்ணில் படும் வண்ணம் பிராண்டை வையுங்கள். இதைச் சரியாய் செய்யவில்லை என்றால் பிராண்டுக்கு கும்பிபாகம், தொழிலுக்கு கிருமிபோஜனம், கம்பெனிக்கு அந்தகூபம் விதிக்கப்படும்.

அய்யோ, மீண்டும் புரியாத அயல்நாட்டு பாஷைகளா என்று அலறாதீர்கள். இவை `வெறும் வெளிப்பாடு’ கோட்பாட்டை உணராமல் விளம்பரம் செய்பவர்களுக்கு கருட புராணத்தில் தரப்படும் தண்டனைகள்!

தொடர்புக்கு: satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x