கூட்டுறவு வங்கியிடம் இருந்த பழைய ரூ. 500, ரூ 1,000 நோட்டுகள் ரூ.371 கோடியை மாற்றித் தரக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கூட்டுறவு வங்கியிடம் இருந்த பழைய ரூ. 500, ரூ 1,000 நோட்டுகள் ரூ.371 கோடியை மாற்றித் தரக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Updated on
1 min read

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.371 கோடியை ரிசர்வ் வங்கி மாற்றித்தர உத்தரவிட வேண்டும் என கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நாசிக் மாவட்ட கூட்டுறவு வங்கி, பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி மாற்றித்தர உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதிக்கும் நவம்பர் 14ம் தேதிக்கும் இடையில் பொதுமக்களிடமிருந்து டெபாசிட்டாக திரட்டிய ரூ.371 கோடி ரிசர்வ் வங்கி உத்தரவால் மாற்ற முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஆனால் மார்ச் 31ம் தேதிக்குள் இந்த தொகையை மாற்றவில்லை எனில் நாசிக் மாவட்டத்தில் உள்ள 281 வங்கி கிளைகளை மூட வேண்டியிருக்கும் என்று வங்கி அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.

திங்கள்கிழமை இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே. எஸ். கெஹர் தலைமையிலான அமர்வு, இந்த மனுவை தள்ளுபடி செய்தது.

நாங்கள் பண புழக்கத்தை காட்டவில்லை எனில் வங்கியை மூட வேண்டியிருக்கும், இதற்காக பணப்புழக்க விகிதத்தை பராமரிக்க வேண்டியுள்ளது. எனவே ரூ.371 கோடியை மாற்ற வேண்டிய தேவை உள்ளது என்று கூட்டுறவு வங்கி சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் கூறினார்.

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு பொதுமக்களிடருந்து பழைய ரூபாய் நோட்டுகளை பெற ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் கூட்டுறவு வங்கிகளுக்கும் பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. ரிசர்வ் வங்கி தடை செய்த நாட்களில் டெபாசிட் பெறப்பட்ட தொகையை ரிசர்வ் வங்கி மாற்றித் தரவில்லை.

இந்த நோட்டுகள் தடை செய்யப்பட்ட 2016-ம் ஆண்டு நவம்பர் 08-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரையில் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்துள்ளனர் என்றும் தவான் கூறினார். கூட்டுறவு வங்கியின் டெபாசிட் விவரங்கள் மற்றும் பணபுழக்க விகிதத்தை நபார்டு வங்கி ஆய்வு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளை மாற்றித்தர வில்லை எனில் வங்கியின் கிளைகளை மூட வேண்டிய சூழல் உருவாகும். இதனால் விவசாயிகளுக்கு கடன் வழங்க முடியாத நிலை ஏற்படும் என்றும் வழக்கறிஞர் கூறினார்.

அதேநேரத்தில் பணமதிப்பு நீக்க ரூபாய் தொடர்பான மற்றொரு வழக்கையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ராணு எண்டர்பிரைஸஸ் நிறுவனம் தங்களது வாராக்கடனுக்காக ரூ.10 கோடியை பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளாக டெபாசிட் செய்ய அனுமதிக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in