

இந்தியாவின் பல்வேறு வங்கிகளுக்கு உருக்கு நிறுவனங்கள் ரூ.3 லட்சம் கோடி கடன் நிலுவை வைத்துள்ளன. இந்திய வங்கிகளின் வாராக்கடன் அளவில் உருக்குத்துறை நிறுவனங்களின் கடன் நிலுவை மிக அதிக அளவாக உள்ளது.
இதுதொடர்பாக நேற்று மக்க ளைவையில் பேசிய மத்திய உருக்குத்துறை அமைச்சர் பீரேந்தர் சிங், சம்பந்தப்பட்ட வங்கிகள், ரிசர்வ் வங்கியும் உருக்கு துறையின் கடனை மறு சீரமைக்கவும், கடன் நிலுவையை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா, உருக்கு துறை நிறுவனங்களின் கடன் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் இதைக் குறிப்பிட்டார்.
கேள்வி நேரத்தின் போது இதைக் குறிப்பிட்ட அமைச்சர், சீனா தனது உள்நாட்டு தேவையை விடவும் 25 முதல் 30 சதவீதம் கூடுதலாக உருக்கு உற்பத்தி செய்கிறது. அதிகரித்துவரும் இந்திய உருக்கு தேவையை உணர்ந்து ஏற்றுமதி முயற்சிகளிலும் சீனா ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிட்டார். சீனாவின் உருக்கு வரவால் விலை சரிவு ஏற்படுகிறது. இதன் காரணமாக உள்நாட்டு உருக்கு உற்பத்தி மிகப் பெரிய நஷ்டத்தை சந்திக்கிறது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு இறக்குமதி செய்யப்படும் உருக்குக்கு குறைந்தபட்ச இறக்குமதி விலையை கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கொண்டு வந்தது.