

ஏர்டெல் நிகர லாபம் 54% சரிவு
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 54 சதவீதம் சரிந்து ரூ.504 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.1,108 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருமானமும் சரிந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.24,066 கோடியாக இருந்த வருமானம் இப்போது 3 சதவீதம் சரிந்து ரூ.23,336 கோடியாக இருக்கிறது.
டிஜிட்டல் டிவி பிரிவு வருமானம் 18 சதவீதமும், ஏர்டெல் பிஸினஸ் 12.5 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. மொபைல் டேட்டா வருமானம் 3 சதவீதம் குறைந்து ரூ.3,087 கோடியாக இருக்கிறது. மொத்த வருமானத்தில் மொபைல் டேட்டா வருமானம் 22.8 சதவீதமாக இருக்கிறது. புதிதாக சந்தைக்கு வந்திருக்கும் நிறுவனம் காரணமாக இந்த காலாண்டு பாதிக்கப்பட்டதாக ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கோபால் விட்டல் தெரிவித்தார். நேற்றைய வர்த்தகத்தில் 0.99 சதவீதம் சரிந்து 316.50 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
ஹெச்சிஎல் டெக் நிகர லாபம் 7.8% உயர்வு
ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 7.8 சதவீதம் உயர்ந்து ரூ.2,070 கோடியாக இருக்கிறது. வருமானம் 14.2 சதவீதம் உயர்ந்து ரூ.11,814 கோடியாக இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி 12 முதல் 14 சதவீதம் வரை இருக்கும் என நிறுவனம் கணித்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக 1,000-க்கும் குறைவான எண்ணிக்கையிலே ஹெச்1பி விசாவுக்கு விண்ணப்பிக்கிறோம். அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே அதிக வேலை வாய்ப்புகள் வழங்குகிறோம். தற்போது அமெரிக்க பிரிவில் 55 சதவீதம் அமெரிக்கர்கள் பணியில் இருக்கிறார்கள் என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஜயகுமார் தெரிவித்தார்.
டிசம்பர் மாத இறுதியில் 1,11,092 பணியாளர்கள் இருக்கிறார்கள். நிறுவனத்தில் இருந்து வெளியேறுவோர் விகிதம் 17.9 சதவீதமாக இருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 0.99 சதவீதம் சரிந்து 848.80 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
ஹெச்டிஎப்சி வங்கி நிகர லாபம் 15% உயர்வு
ஹெச்டிஎப்சி வங்கியின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 15 சதவீதம் உயர்ந்து ரூ.3,865 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.3,356 கோடியாக இருக்கிறது.
வங்கியின் மொத்த வருமானம் 13.48 சதவீதம் உயர்ந்து ரூ.20,748 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.18,283 கோடியாக இருக்கிறது. நிகர வட்டி வருமானம் 17.6 சதவீதம் உயர்ந்து ரூ.8,309 கோடியாக இருக்கிறது. வங்கியின் நிகர வட்டி வரம்பு 4.1 சதவீதமாக இருக்கிறது.
நிகர வாராக்கடன் 0.29 சதவீதத்தில் இருந்து 0.32 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகையும் ரூ.653 கோடியில் இருந்து ரூ.715 கோடியாக அதிகரித்திருக்கிறது. நேற்று வர்த்தகத்தின் முடிவில் 1.84 சதவீதம் உயர்ந்து 1,267 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
டிவிஎஸ் மோட்டார் நிகர லாபம் ரூ.132 கோடி
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 10.36 சதவீதம் உயர்ந்து ரூ.132.67 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 120.21 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருமானம் 2.8 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.3,151 கோடியாக இருந்த வருமானம் இப்போது ரூ.3,239 கோடியாக இருக்கிறது. இந்த காலாண்டில் இரு சக்கர வாகன விற்பனை 4 சதவீதம் உயர்ந்து 7.03 லட்சம் வாகனங்கள் விற்பனையானது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 6.76 லட்சம் ஒரு சக்கர வாகனங்கள் விற்பனையானது.
இந்த காலாண்டில் ஏற்றுமதி சிறிதளவு குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 1.08 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு 99,000 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டன. நேற்று வர்த்தகத்தின் முடிவில் 5.09 சதவீதம் உயர்ந்து 400.40 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது.