

கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் ரூ.30,700 கோடி வரி பாக்கி மற்றும் வட்டித் தொகை செலுத்தக் கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மூலதன ஆதாயத்துக்கான வரித் தொகை ரூ.10,247 கோடியை செலுத்தாதற்கான காரணத்தைத் தெரிவிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரித் தாக்கல் செய்தபோதே இத்தொகையை செலுத்தாதற்கான வட்டித் தொகையாக ரூ.18,800 கோடியை செலுத்த வேண்டும் என்றும், இவ்வளவு காலம் இத்தொகையை செலுத்தாதற்கான காரணத்தை விளக்குமாறு கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்க 10 நாள் அவகாசம் தருமாறு கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளதாக வருமான வரித்துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தின் தாய் நிறுவனமான பிரிட்டனின் கெய்ர்ன் எனர்ஜி மார்ச் 31, 2007-ல் மூலதன ஆதாயம் அடைந்துள்ளது. இந்த காலகட்டத்திற்கான வருமான வரி விவரத்தை மார்ச் 31, 2014-ல்தான் அந்நிறுவனம் தாக்கல் செய்தது. அதுவும் ஜனவரி 24, 2014-ல் வருமான வரித்துறை கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து வருமான வரி கணக்கை இந்நிறுவனம் தாக்கல் செய்துள்ளது.
இதை பரிசீலித்த வருமான வரித்துறை ஜனவரி 2016-ல் கெய்ர்ன் நிறுவனத்துக்கு மூலதன ஆதாயத்துக்கான வரி தொகை ரூ. 10,247 கோடியும், 10 ஆண்டுகளுக்கான வட்டி ரூ. 18,800 கோடியும் செலுத்த வேண்டுமென நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து கெய்ர்ன் நிறுவனம் மேல் முறையீடு செய்தது. கெய்ர்ன் இந்தியா நிறுவனம் உருவாக்கப்படுவதற்கு முன்பாக, அதுவும் பட்டியலிடுவதற்கு முன்பாக தாய் நிறுவனத்துக்கு குறிப்பிட்ட தொகை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் முன் தேதியிட்டு வரி விதிப்பது ஏற்கத்தக்கதல்ல என நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
இதை விசாரித்த தீர்ப்பாயம் அபராதம் விதிப்பதை தடை செய்யவில்லை. ஆனால் புதிதாக நோட்டீஸ் அனுப்புமாறு வரித்துறைக்கு பரிந்துரைத்தது.
வருமான வரி சட்டத்தின்படி வரித் தொகைக்கு அபராதமாக 100 சதவீதம் முதல் 300 சதவீதம் வரை விதிக்க வகை உள்ளது. வருமான வரிச் சட்டம் 271 (1) (சி) பிரிவின் கீழ் மூலதன ஆதாயத்துக்கு வரி விதிக்க வகை செய்கிறது.
தற்போது அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸுக்கு கெய்ர்ன் நிறுவனம் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திடம் இது தொடர்பாக கருத்து கேட்க தொடர்பு கொண்டபோது செய்தித் தொடர்பாளர் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
2011-ம் ஆண்டு கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தை அனில் அகர்வாலுக்குச் சொந்தமான வேதாந்தா குழுமம் வாங்கியுள்ளது.