

மின்னணு பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முக்கிய பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்சிஐ மின்னணு பரிவர்த்தனை முறையில் பிரீமியம் தொகைகளை வசூலிக்க உள்ளது. காப்பீடு பிரீமியத்தை வசூலிப்பதற்கு ஏற்ப ஏஜெண்டுகளுக்கு பிஓஎஸ் இயந்திரங்களை வழங்க திட்டமிட்டுள்ளது.
பணம் கையாளுவதை குறைக்கும் நோக்கில் எல்ஐசி இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் கோடி பிரீமியம் தொகைகளை வசூலிக்க உள்ளது. இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக ஏற்கெனவே சில லட்சம் ஏஜெண்டுகளுக்கு பிஓஎஸ் இயந்திரங்களை வழங்கி சோதனை செய்துள்ளது. இதனால் பிரீமியம் வசூலிக்க மின்னணு இயந்திரங்களை பயன்படுத்துவது சிரமமாக இருக்காது என்று மூத்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தவிர ஆதார் இணைப்பிலான மின்னணு பரிவர்த்தனையின் மூலமும் பிரீமியம் வசூலிக்க எல்ஐசி திட்டமிட்டுள்ளது. கிராமப்புற பாலிசிதாரர்கள் பிரீமியத்தை பணமாக கட்டாமல், மின்னணு முறையில் செலுத்த இது வசதியாக இருக்கும். தவிர ஏஜெண்டுகள் பணம் கையாளும் சிரமங்களும் குறைக்கும்.
முதற்கட்டமாக 1.5 லட்சம் ஏஜெண்டுகளுக்கு இந்த இயந்திரங்களை வழங்க உள்ளது. மேலும் அதிகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. மார்ச் 2016 நிலவரப்படி எல்ஐசி நிறுவனத்தில் 20.16 லட்சம் ஏஜெண்டுகள் உள்ளனர்.
எல்ஐசி நிறுவனத்தில் மின்னணு குற்றங்கள் நடக்காத வண்ணம் சைபர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு நிதியமைச்சகம் வலியுறுத்தி இருந்தது. தவிர மின்னனு பரிவர்த்தனையில் காப்பீடு பாலிசிகள், ரயில் டிக்கெட், நெடுஞ்சாலை டோல் கட்டணங்கள் செலுத்தினால் சலுகைகள் தருவது குறித்து நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியிருந்தார்.
பொதுத்துறை நிறுவனங்களின் ஆயுள் காப்பீடு, பொதுகாப்பீடு பாலிசிகளை ஆன்லைன் மூலம் வாங்கினால் பிரீமியத்தில் 10 சதவீதம் முதல் 8 சதவீத வரை சலுகை அனுமதிக்கப்படுகிறது.
எல்ஐசி நிறுவனம் 2016 டிசம்பருடன் முடிவடைந்த முதல் 9 மாதங்களில் 12.91 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. ரூ.24.42 லட்சம் கோடி சொத்து மதிப்பைக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.21.64 லட்சம் கோடியாகும். நடப்பு நிதியாண்டில் முதல் 9 மாதங்களில் பிரீமியம் மூலமான வருமானம் 12.43 சதவீதம் அதிகரித்து ரூ.1,45,031 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதங்களில் ரூ.1,29,001 கோடியாக இருந்தது.