ஜிடிபி கணக்கிடும் முறை என்றால் என்ன?

ஜிடிபி கணக்கிடும் முறை என்றால் என்ன?
Updated on
1 min read

ஜிடிபி-யைக் கணக்கிடுவது கடினமான காரியம் என்று கூறியிருந்தேன். இன்று ஜிடிபி எப்படிக் கணக்கிடப்படுகிறது என்று பார்ப்போம்.

ஒரு நாட்டில் ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட எல்லா பொருட்கள் மற்றும் பணிகளின் (சேவைகள்) ரூபாய் மதிப்பு ஜிடிபி என்று தெரியும். ஒவ்வொரு பொருளின் விலையை அப்பொருள் உற்பத்தி அளவுடன் பெருக்கினால் நமக்கு அப்பொருளின் மொத்த உற்பத்தி மதிப்பு தெரிந்துவிடும்.

இது மிக எளிய முறை, இவ்வாறே எல்லா பொருட்கள், பணிகளின் மொத்த உற்பத்தியை கணக்கிட்டு ஜிடிபி-யைக் கணக்கிடலாம். ஆனால், பல பொருட்களின் சந்தை விலைகள் நமக்குத் தெரிவதே இல்லை. எனவே, மூன்று வழிகளில் உற்பத்தி அளவைக் கணக்கிடுகிறோம்.

ஒன்று, ஒரு பொருளை உற்பத்தி செய்யும்போது எவ்வளவு மதிப்பு கூட்டப்பட்டுள்ளது என்று கணக்கிடுவது. உதாரணமாக, ஒரு தச்சன் ஒரு மர நாற்காலி செய்தால், அவர் அம்மரத்திற்கு மதிப்பு கூட்டியுள்ளார் என்று அர்த்தம். எனவே நாற்காலியின் மதிப்பில் மரத்தின் மதிப்பை கழித்தால் தச்சன் கூட்டிய மதிப்பு தெரியும்.

இவ்வாறு உற்பத்தி மதிப்பைக் கணக்கிடலாம். இரண்டு, சில பொருட்களை பெற நாம் செய்யும் செலவின் அடிப்படையில் அப்பொருளின் உற்பத்தி மதிப்பைக் கணக்கிடுவது.

கல்விக்காக நாம் செலுத்தும் கட்டணம் அக்கல்வி பணியின் உற்பத்தி மதிப்பாகக் கொள்ளலாம். மூன்று, ஒரு பொருள் உற்பத்தியினால் அதில் ஈடுபட்ட பலருக்கு வருமானம் போய் சேரும், அந்த வருமானங்களை தொகுத்து உற்பத்தி மதிப்பு கணக்கிடப்படும்.

எல்லா பொருளாதாரங்களிலும் பொருளுக்கு ஏற்றவாறு இந்த மூன்று முறைகளில் ஏதாவது ஒன்று பயன்படுத்தபட்டு ஜிடிபி யை கணக்கிடுகிறோம்.

நம் பொருளாதாரத்தில் பல பொருட்கள் சந்தைக்கு வராமலே உள்ளன. உதாரணமாக, பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகள் சந்தைபடுத்தபடாமல் போவதால் அச்சேவைகள் நம் ஜிடிபி யில் சேருவதே இல்லை. பண்டமாற்று முறையில் பரிவர்த்தனை நடைபெறும் போதும் இதே சிக்கல் தான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in