

தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் மீது சிபிஐ, மத்திய வர்த்தக நிறுவனங்களுக்கான அமைச்சகம், பார்வர்ட் மார்க்கெட் கமிஷன் ஆகியன உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
என்எஸ்இஎல்-லில் நிகழ்ந்த முறைகேடுகளை சிபிஐ மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளும் விசாரிக்க வேண்டும் என்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் அர்விந்த் மாயாராம் பரிந்துரைத்திருந்தார்.
எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். உரிய நேரத்தில் சரியான நடவடிக்கையை அவர்கள் எடுப்பர் என்று நிதி அமைச்சர் கூறினார்.
என்எஸ்இஎல்-லில் நிகழ்ந்த ரூ. 5,600 கோடி முறைகேடு குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அர்விந்த் மாயாராம் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இத்தகைய நிதிச் சிக்கல் ஏற்பட்டதால் என்எஸ்இஎல் வர்த்தகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
என்எஸ்இஎல் நிறுவனம் ஒரு பதிவு பெற்ற அமைப்பாகச் செயல்படவில்லை. அதேபோல எஃப்எம்சியின் அங்கமாகவும் அது இருக்கவில்லை. இவ்வளவு பிரச்சினைகள் இருந்தபோதிலும் அது தானாகவே வணிகத்தைத் தொடங்கியுள்ளது என்று சிதம்பரம் குறிப்பிட்டார்.
செயல்படத் தொடங்கிய நாள்முதலே அது விதிகளை மீறிச் செயல்பட்டுள்ளது. சில முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் ஒரு பகுதியை மட்டும் இழந்துள்ளனர். சிலர் முற்றிலுமாக இழந்துள்ளனர் என்று சிதம்பரம் குறிப்பிட்டார்.
முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும்போது முதலீடு செய்யும் அமைப்பு எத்தகைய வரம்புக்குள் வருகிறது. அதை நிர்வகிப்பது அல்லது கண்காணிப்பது யார் போன்ற விவரங்களை அறிந்து கொண்டு முதலீடு செய்வது மிகவும் அவசியம் என்றார்.
என்எஸ்இஎல்-லில் ஏற்பட்டுள்ள நிதிச் சிக்கல் பிற சந்தைகளைப் பாதிக்கவில்லை. இருப்பினும் பங்குச் சந்தைகளையும், பொருள் வர்த்தக சந்தைகளையும் அதற்குரிய செபி மற்றும் சந்தை கண்காணிப்பு அமைப்புகள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன என்று அவர் கூறினார்.
என்எஸ்இஎல் அமைப்பானது ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் நிறுவன உரிமையாளர் ஜிக்னேஷ் ஷா வுக்குச் சொந்தமானது. இந்நிறுவனம் கடந்த ஜூலை 31-ம் தேதி தனது வர்த்தக செயல்பாட்டை நிறுத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக முதலீட்டாளர்களுக்கு பணத்தை அளிக்க இந்நிறுவனம் தவறியதால், இந்நிறுவன செயல்பாடுகள் முடக்கப்பட்டன.
ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் நிறுவனம் எம்சிஎக்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு சாஃப்ட்வேரை வடிமைத்துத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எப்எம்சி கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிதம்பரம் கூறினார். இது தவிர, என்எஸ்இஎல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் பற்றிய விவரத்தை வருமான வரித்துறை ஆராய்ந்து வருகிறது. இதில் கறுப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்ற தகவலை வருமான வரித்துறை பெறும்.
தங்களது முதலீடுகளைத் திரும்பப் பெற நிறுவனத்தின் மீது முதலீட்டாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்றும் சிதம்பரம் கூறினார். என்எஸ்இஎல் நிறுவனத்தில் 17 ஆயிரம் முதலீட்டாளர்கள் உள்ளனர். 9 ஆயிரம் வர்த்தகம் முன்னணி 8 தரகர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனந்த் ரதி, மோதிலால் ஆஸ்வால், சிஸ்டமாடிக்ஸ் ஆகியன இதில் குறிப்பிடத்தக்கவையாகும்.