

கடந்த செப்டம்பர் மாதம் இந்திய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ரூ.4,000 கோடி அளவுக்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கின்றன. தொடர்ந்து ஐந்தாவது மாதமாக மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது தொடர்கிறது.
மேலும், இதே காலத்தில் கடன் சந்தையில் ரூ.23,000 கோடிக்கு மேல் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. மே மாதம் ரூ.105 கோடி, ஜூன் மாதம் ரூ.3,340 கோடி, ஜூலை மாதம் ரூ.5,000 கோடி, ஆகஸ்ட் மாதம் ரூ.6,000 கோடி அளவுக்கு மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கின்றன.
பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் தகவல்படி செப்டம்பர் மாதம் ரூ.4,171 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. நடப்பு ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் ரூ.8,000 கோடி முதலீடும், கடன் சந்தையில் ரூ.4.6 லட்சம் கோடி முதலீடும் செய்துள்ளன.
முதல் இடத்தில் ஹெச்.டி.எப்.சி.
செப்டம்பர் மாத முடிவில் சராசரியாக சொத்துகளை கையாளுவதில் ஹெச்.டி.எப்.சி. மியூச்சுவல் பண்ட் முதல் இடத்தில் இருக்கிறது. செப்டம்பர் முடிவில் இந்த நிறுவனம் கையாளும் சொத்து மதிப்பு ரூ.1.41 லட்சம் கோடி. இதற்கடுத்து ஐசிஐசிஐ மியூச்சுவல் பண்ட் ரூ,1.27 லட்சம் கோடி, ரிலையன்ஸ் ரூ.1.22 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை கையாளுகின்றன.
ரூ.1 லட்சம் கோடிக்கும் மேலான சொத்துகளை கையாளும் பட்டி யலில் பிர்லா சன்லைப் மியூச்சுவல் பண்ட் இடம் பிடித்திருக்கிறது. இந்நிறுவனம் கையாளும் சொத்துமதிப்பு ரூ.1.02 லட்சம் கோடியாகும். சந்தையில் இருக்கும் 40-க்கும் மேற்பட்ட மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் மொத்த சொத்துமதிப்பு ரூ.10.58 லட்சம் கோடி. இதில் முதல் நான்கு நிறுவனங்கள் கிட்டத்தட்ட 50 சதவீதம் அதாவது ரூ.4.94 லட்சம் கோடியைக் கையாளுகின்றன.
முதல் நான்கு இடங்களுக்கும் அடுத்த இடத்தில் இருக்கும் நிறுவனத்துக்கும் இடைவெளி மிக அதிகமாக இருக்கிறது. இதற்கடுத்து இருக்கும் யூ.டி.ஐ. மியூச்சுவல் பண்ட் கையாளும் சொத்து மதிப்பு ரூ.83,249 கோடி மட்டுமே ஆகும்.