Last Updated : 28 Sep, 2013 03:47 PM

 

Published : 28 Sep 2013 03:47 PM
Last Updated : 28 Sep 2013 03:47 PM

தவணை மனை: எச்சரிக்கை தேவை

டி.வி., ஃபிரிட்ஜ் போன்ற பொருட்களைத் தவணை முறையில் வாங்கிய காலம் போய், இப்போது மனைகளைத் தவணை முறையில் வாங்கும் காலமாகிவிட்டது. இன்றைய நிலையில் பெரும்பாலானோர் முதலீடு அடிப்படையிலேயே மனைகளைத் தவணையில் வாங்குகின்றனர். நகரங்கள் நாளுக்கு நாள் விரிவடைந்துவருவதால், ஊருக்கு வெளியே அல்லது ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக எங்கேயாவது மனை வாங்கிவிட வேண்டும் என்றும் மக்கள் எண்ணுகிறார்கள். அதற்குத் தகுந்தாற்போல் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களும் அதிக அளவில் பெருகியுள்ளனர்.

தவணை முறையில் மனை கிடைப்பது மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது என்றே கூறலாம். மொத்தமாக ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் கொடுத்து மனை வாங்க முடியாத மக்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும். தவணை முறையில் மனை வாங்குவது என்பது டி.வி., மிக்ஸி வாங்குவது போன்றது அல்ல.

சுலப தவணைத் திட்டத்தில் விற்கப்படும் மனைகள் பெரும்பாலும் சாதாரணமாக சென்று வர முடியாத ஊருக்கு வெளியேவோ அல்லது தொலைதூரத்திலோ அமைக்கப்படுகின்றன. இப்படி விற்கப்படும் மனைகளைத் தேர்வு செய்வதற்கு முன்பு பல அம்சங்களையும் ஆராய வேண்டும்.

மனைகளை வாங்கி முதலீடு செய்யும் முன், மனைக்கான லே-அவுட் உள்ளாட்சி அமைப்பிடம் சமர்பிக்கப்பட்டு அங்கீகாரம் வாங்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிக்கவும்.

அங்கீகாரம் பெற்ற மனை என்று தெரிந்தால் மட்டுமே வாங்க வேண்டும்.

வில்லங்கச் சான்றிதழைக் கேட்கத் தவறக் கூடாது.

மூல ஆதார ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும்

புரமோட்டர் யார் என்பதை முக்கியமாகத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அவர் எப்படிப்பட்டவர்? எத்தனை ஆண்டுகளாக இந்த தொழிலில் இருக்கிறார்? அவரது பின்னணி என்ன? ஆகியவற்றை விசாரித்து அறிவது அவசியம்.

லே-அவுட் போடப்பட்டிருக்கும் மனை புரமோட்டருக்குச் சொந்தமானதா? அல்லது வேறொருவர் நிலத்துக்கு இவர் பவர் ஆஃப் அட்டர்னி பெற்று விற்பனை செய்கிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும். புரமோட்டரின் சொந்த நிலமாக இருந்தால் சிக்கல்கள் வர வாய்ப்பில்லை. இதுவே பவர் ஆஃப் அட்டர்னியாக இருந்து நிலத்தின் உரிமையாளர் பவரை ரத்து செய்திருந்தால் மனை வாங்கியவர்களுக்கு பிரச்சினைதான்.

தவணையில் மனை வாங்குவோரில் பலர், புரமோட்டருடன் கிரய ஒப்பந்தம் போட்டுக்கொள்வதில்லை. தெளிவாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

எப்போது நாம் தவணைப் பணத்தைச் செலுத்த தொடங்குகிறோமோ, அப்போதே அந்த நிலத்தில் உரிமை பெற்றுவிடுகிறோம். அதனால் தவணைக் காலத்தில் நிலத்தை அடிக்கடி பார்வையிட வேண்டும். அப்போதுதான் ஏதேனும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டால் தடுக்க முடியும்.

மனை வாங்குபவருக்கு வங்கிக் கடன் கிடைக்கும் தகுதி இருந்து, வாங்கும் மனையும் அப்ரூவல் மனையாக இருந்தால், தொகையை மொத்தமாகக் கொடுத்து முடித்துவிடுவது லாபமாக இருக்கும். தவணையை விட மொத்தத் தொகை கொடுத்து வாங்கும்போது விலையைக் குறைத்து வாங்க வாய்ப்பு இருக்கும்.

தவணை முறையில் மனை வாங்குவதில் இவ்வளவு விஷயங்கள் உள்ளன. இவற்றை முறையாகச் செய்தால், மனை வாங்குவதில் உள்ள வில்லங்கங்களையும் தடுக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x