Published : 22 Jul 2016 09:59 AM
Last Updated : 22 Jul 2016 09:59 AM

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் ரூ.1,500 கோடி வருவாய் குறையும்: நிதித்துறை செயலாளர் கே. சண்முகம் தகவல்

தமிழகத்தில் மதுபான நுகர்வு குறைந்து வருகிறது. இதனால், ரூ.1,500 கோடி அளவுக்கு வருவாய் குறையும் என தமிழக நிதித்துறை செயலர் கே.சண்முகம் தெரிவித்தார்.

தமிழக அரசின் 2016-17ம் நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட், சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நிதித்துறை செயலாளர் கே.சண்முகம் பட்ஜெட்டை விளக்கி கூறியதாவது:

இந்த பட்ஜெட்டில் 5 இயக்கங்கள், 11 பெருந்திட்டங்கள் என்ற முக்கியமான வரையறையை வகுத்துள்ளோம். நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக குடிமராமத்து இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக ரூ.100 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

நபார்டு வங்கியுடன் ஆலோசித்து விரிவான திட்டம் தயாரிக்கப்படும். வருங்காலத்தில் குடிமராமத்துக்காக போதிய நிதி ஒதுக்கப்படும்.

அடுத்ததாக, வறுமை ஒழிப்புத் திட்டங்களை ஒரே அமைப்பின்கீழ் கொண்டுவந்து மாநில இயக்கமாக செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.205 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது குடிசைகளற்ற கிராமம், நகரம் என்ற குறிக்கோளை அடிப்படையாக கொண்டு, இந்த பட்ஜெட்டில் வீட்டு வசதி திட்டத்துக்கு மட்டும் ரூ.4,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, தூய்மை தமிழகம் மற்றும் திறன்மேம்பாட்டு இயக்கம் என முக்கியமான 5 திட்டங்களையும் வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்காக, சமூக பொருளாதார திட்டங்களையும் சேர்த்து 11 பெருந்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்த பட்ஜெட்டின் மொத்த மதிப்பு ரூ.1,99,928 கோடி. இதில் வருவாய் வரவினங்கள் ரூ.1,48,175 கோடியாகும். வருவாய் செலவுகள் ரூ.1,64,029 கோடியாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை ரூ.15,854 கோடி. இடைக்கால பட்ஜெட்டில் ரூ.9,154 கோடியாக தெரிவிக்கப்பட்ட வருவாய் பற்றாக்குறை, தற்போது ரூ.6 ஆயிரம் கோடி கூடுதலாக உள்ளது. வருவாய் வரவில் ரூ.3,200 கோடி குறைந்தது, புதிய திட்டங்களை செயல்படுத்தியதால் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

மாநில வரி வருவாய் இந்தாண்டு 12 சதவீதம் அதிகரிக்கும் என கணித்துள்ளோம். தற்போது வணிகவரித்துறை கணினி மயமாக்கப்பட்டுள்ளதால், வரி வருவாய் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரம் கோடி வரையில் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் பற்றாக்குறை குறைய வாய்ப்புள்ளது. மூலதனச் செலவு ரூ.24,679 கோடியாக இருக்கும் என கணித்துள்ளோம். இதனால், நிதிப் பற்றாக்குறை ரூ.40,533 கோடியாக உள்ளது. கடன்கள் மூலம் இதை சீரமைக்கிறோம்.

இடைக்கால பட்ஜெட்டில் ரூ.2.47 லட்சம் கோடியாக இருந்த கடன் நிலுவை, இந்த ஆண்டு இறுதியில் ரூ.2.52 லட்சம் கோடியாக உயரும். அப்படி உயர்ந்தாலும்கூட மாநில மொத்த உற்பத்தி 18.43 சதவீதமாக மட்டுமே இருக்கும். மாநில மொத்த உற்பத்தியும், நிதிப் பற்றாக்குறையும் வரையறைக்குள் உள்ளது. வருவாய் செலவினங்களில் சமூக நலத்திட்டங்களுக்கு 30 முதல் 35 சதவீதம் வரை அதாவது ரூ.57,207 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மானியங்களுக்காக ரூ.68,211 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களுக்கும் போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது மதுபான நுகர்வு குறைந்து வருகிறது 500 டாஸ்மாக் கடைகளை மூடியதால் விற்பனை வரி, ஆயத்தீர்வை வரி இரண்டையும் சேர்த்து ரூ.1,500 கோடி வரை வருவாய் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நிதியாண்டில் கடனுக்கான வட்டிக்காக ரூ.21,250 கோடியை அரசு செலவழிக்கிறது. மின் வாரியத்துக்காக ரூ.6,500 கோடி அரசு வழங்கியதால் வட்டி பளு அதிகரித்துவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x