காலாண்டு முடிவுகள்: ஏசிசி, எக்ஸைட், ராம்கோ சிமென்ட்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப்

காலாண்டு முடிவுகள்: ஏசிசி, எக்ஸைட், ராம்கோ சிமென்ட்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப்
Updated on
2 min read

ஏசிசி லாபம் ரூ. 119 கோடி

ஏசிசி லிமிடெட் நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 119 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 241 கோடியாகும். நிறுவனத்தின் விற்பனை வருமானம் ரூ. 2,508.65 கோடியாகக் குறைந்தது. முந்தைய ஆண்டில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 2,542 கோடியாக இருந்தது.

இந்த காலாண்டில் நிறுவனம் 55 லட்சம் டன் சிமென்ட் விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் விற்பனை 54 லட்சம் டன்னாக இருந்தது.

நிறுவனத்தின் செலவினம் ரூ. 2,430.22 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலாண்டில் செலவு ரூ. 2,263 கோடியாக இருந்தது. மின்சாரம், சரக்கு போக்குவரத்து கட்டண உயர்வால் செலவு அதிகரித்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

வர்த்தகத்தின் முடிவில் 1.79 சதவிகிதம் அதிகரித்து 1157 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.

எக்ஸைட் லாபம் சரிவு

வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள எக்ஸைட் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு லாபம் ரூ. 118 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபத்தைவிட 1.30 சதவீதம் குறைவாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 120 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் விற்பனை வருமானம் ரூ. 1,427.95 கோடியாகும். முந்தைய காலாண்டு விற்பனை வருமானம் ரூ. 1,515 கோடியாகும். இப்போது 5.75 சதவீதம் சரிந்துள்ளது.

நிறுவனத்தின் செலவினம் 7.91 சதவீதம் குறைந்து ரூ. 1,262 கோடியானது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் செலவு ரூ. 1,370 கோடியாகும். பங்குதாரர்களுக்கு இடைக்கால ஈவுத் தொகையாக ஒரு பங்குக்கு ரூ. 1.10 ஈவுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

வர்த்தகத்தின் முடிவில் 2.21 சதவிகிதம் சரிந்து 126.05 ரூபாயில் முடிவடைந்தது.

ராம்கோ சிமென்ட்ஸ் லாபம் 86% சரிவு

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு லாபம் 86 சதவீதம் சரிந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம்ரூ. 18.27 கோடியாகும். தென்னிந்தியாவில் 5 சிமென்ட் ஆலைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம் கடந்த ஆண்டு இதேகாலத்தில் ரூ. 132.89 கோடியை லாபமாக ஈட்டியிருந்தது.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ. 920.71 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ. 994.73 கோடியாகும். இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் செலவு ரூ. 863.70 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் செலவு ரூ. 749.49 கோடியாக இருந்தது. எரிபொருள், சரக்குப் போக்குவரத்து கட்டண செலவால் நிறுவனத்தின் செலவு அதிகரித்துள்ளது.

வர்த்தகத்தின் முடிவில் 3 சதவிகித அளவுக்கு சரிந்து 172.40 ரூபாயில் முடிவடைந்தது.

ஹீரோ மோட்டோ கார்ப் லாபம் 9 % உயர்வு

இரு சக்கர வாகன விற்பனையில் முன்னணியில் இருக்கும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 9.26 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.481.41 கோடியாகும். கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.440.58 கோடியாக இருந்தது.

நிகர விற்பனை 10.58 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. நடந்து முடிந்த செப்டம்பர் காலாண்டின் நிகர விற்பனை ரூ.5,696 கோடியாகும். கடந்த வருடத்தின் இதே காலாண்டில் விற்பனை ரூ.5,151.18 கோடியாக இருந்தது.

வாகனங்களின் எண்ணிக்கையும் 6.26 சதவிகிதம் அதிகரித்து 14.16 லட்சம் வாகனங்கள் விற்பனையானது. வர்த்தகத்தின் முடிவில் 0.87 சதவிகிதம் அதிகரித்து 2,084 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in