

மருந்துப் பொருள் (பார்மா) தயாரிப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீடுகளை (எப்டிஐ) 100 சதவீதம் அனுமதிக்கும் முடிவை திரும்பப் பெறப் போவதில்லை என்று அரசு முடிவுசெய்துள்ளது.
சில குறிப்பிட்ட துறைகளில் 100 சதவீத அளவுக்கு அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிக்க அரசு முடிவு செய்தது.
ஆனால் இத்துறையில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதால், மருந்துப் பொருள்களின் விலை உயரும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து புதன்கிழமை பரிசீலித்த அரசு, நூறு சதவீத முதலீட்டு வரம்பை பார்மா துறையில் தொடர அனுமதிப்பதென முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் உள்ளூர் நிறுவனங்களுடன் போட்டியயிட முடியாத நிலை என்ற பிரிவு, குறித்து அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி) பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளது.
பார்மா துறையில் அன்னிய நேரடி முதலீடு குறித்து அரசு பரிசீலனை செய்தது. போட்டியிட முடியாத சூழல் என்ற பிரிவின் கீழான துறைகளில் சிறப்பு சூழலின் அடிப்படையில் எப்ஐபிபி அனுமதித்தபிறகே ஒப்புதல் அளிக்கப்படும் என டிஐபிபி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக பார்மா துறையில் உள்நாட்டு நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்குவது குறித்து கவலை தெரிவித்துவந்த டிஐபிபி, பார்மா துறையில் நேரடி அன்னிய முதலீட்டுக்கான கொள்கையை கடுமையாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
இந்திய நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் கையகப்படுத்துவதால், இந்தியாவில் மூலப் பொருள் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும் இப்போதுள்ள 49 சதவீத வரம்பை 100 சதவீதமாக உயர்த்த வேண்டாம் என டிஐபிபி முன்னர் அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. ஆனால் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் டிஐபிபி-யின் பரிந்துரை முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவைச் சேர்ந்த மைலான் இன்கார்ப்பரேஷன் நிறுவனம் பெங்களூரைச் சேர்ந்த அஜிலா ஸ்பெஷாலிட்டிஸ் நிறுவனத்தை ரூ. 5,168 கோடிக்குக் கையகப்படுத்துவற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அஜிலா ஸ்பெஷாலிட்டிஸ் நிறுவனம், ஸ்டிரைட்ஸ் அக்ரோலேபின் துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த டைசி சான்க்யோ நிறுவனம் ரான்பாக்ஸி நிறுவனத்தை 460 கோடி டாலருக்கு வாங்கியது. அமெரிக்காவைச் சேர்ந்த அபோட் லேபரட்டரீஸ் நிறுவனம் 370 கோடி டாலருக்கு பிரமிள் ஹெல்த்கேரின் உள்நாட்டு வர்த்தகத்தைக் கையகப்படுத்தியது.
2012 முதல் 2013-ம் ஆண்டுவரையான காலத்தில் அன்னிய நேரடி முதலீட்டில் 96 சதவீதம் பார்மா துறையில் போடப்பட்டதாக டிஐபிபி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு கிரீன்பீல்ட் முறையில் நேரடி அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.