

உலக அளவில் அலுவலகம் அமைக்க அதிக செலவாகும் பகுதிகளில் புதுடெல்லியின் கன்னாட் பிளேஸ் 7-வது இடத்தில் உள்ளது. ரியல் எஸ்டேட் துறை ஆலோசனை நிறுவனமான சிபிஆர்இ வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் இது தெரிய வந்துள்ளது. மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் 19-வது இடத்திலும், நரிமன் பாயிண்ட் 34-வது இடத்திலும் உள்ளன.
சர்வதேச அளவில் முக்கிய இடங்களில் அலுவலகத்துக்கு செலவாகும் தொகையின் அடிப் படையில், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சிபிஆர்இ இந்த பட்டியலை வெளியிடுகிறது.
புதுடெல்லியின் மையமான பகுதியில் வர்த்தக கேந்திரமாக இருக்கும் கன்னாட் பிளேசில் ஒரு ஆண்டுக்கு செலவிடப்படும் தொகை ஒரு சதுர அடிக்கு 149.71 டாலர் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது, இதன்படி அதிக செலவாகும் அலுவலகப் பகுதிகள் என பட்டியலிடப்பட்டுள்ள இடங்களில் கன்னாட் பிளேஸ் 7-வது இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் ஹாங்காங் மத்திய பகுதியில் அதிக செலவாகிறது. இங்கு சதுர அடிக்கு ஆண்டுக்கு 290 டாலர் செலவாகிறது. இதற்கடுத்து லண்டனின் மத்திய பகுதியில் ஆண்டு செலவு விகிதம் 262.29 டாலராக உள்ளது. சீனாவின் பெய்ஜிங் (பைனான்ஸ் ஸ்ட்ரீட்) பெய்ஜிங் (மத்திய தொழில் மாவட்டம்) மற்றும் ஹாங்காங் (மேற்கு பகுதி) பகுதிகள் முறையே மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளன. மேலும் டோக்கியோ (ஒடேமச்சி) மத்திய லண்டன் (மேற்கு பகுதி) நியூயார்க் (மிட் டவுன் மன்ஹாட்டன்) மற்றும் ஷாங்காய் (புடாங்) போன்ற பகுதிகளும் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட தரவரிசையில் மத்திய லண்டன் (மேற்கு பகுதி) முதலிடத்திலும், புதுடெல்லி கன் னாட் பிளேஸ் ஆறாவது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வு நிறுவனத்தின் தெற்காசிய தலைவரும், நிர்வாக இயக்குநருமான அன்ஷுமான் மேகசின் பேசியபோது:
கடந்த ஆண்டை காட்டிலும் வர்த்தக ரீதியான ரியல் எஸ்டேட் துறை வளர்ந்து வருகிறது என்பதற்காக அறிகுறியாக இதைப் பார்க்கலாம். கன்னாட் பிளேஸ் ஏழாவது இடத்தில் உள்ளதை குறிப்பிடும்போது, அலுவலக இடம் அமைப்பதற்கு ஏற்ப ஈர்க்கும் வகையில் தொடர்ந்து கன்னாட் பிளேஸ் உள்ளது.
அனைத்து போக்குவரத்து களுக்கும் ஏற்ற இடமாக உள்ளதால் கார்ப்பரேட் நிறுவனங்களின் தேர்வாக உள்ளது. குறிப்பாக வங்கிகள், நிதிச் சேவை நிறுவனங்கள் மற்றும் பொறியியல் நிறுவனங்களின் கென்னட் பிளேஸ் பகுதியில் அலுவலகம் அமைக்க விரும்புகின்றன என்றார்.
பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்வது மற்றும் செயல்பாடுகளை தொடங்குவது உள்ளிட்ட காரணங் களால் இந்தியாவில் அலுவலகம் அமைப்பதற்கு தேவையான, போதுமான அளவில் இடங்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டார்.
இந்த ஆய்வுக்கு சர்வதேச அளவில் 126 அலுவலகப் பகுதிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. முதல் 50 பகுதிகள் பட்டியலில் ஆசிய பசிபிக் நாடுகளில் 20 பகுதிகளும், ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் 20 பகுதிகளும் அமெரிக்காவில் 10 பகுதிகளும் இடம் பிடித்துள்ளன.