Last Updated : 02 Feb, 2014 01:04 PM

 

Published : 02 Feb 2014 01:04 PM
Last Updated : 02 Feb 2014 01:04 PM

தொழில் வாய்ப்புகளை அள்ளித்தரும் 3-டி பிரிண்டர்கள்- ஆர். பார்த்தசாரதி சிறப்புப் பேட்டி

1980-களில் வெளியான மை டியர் குட்டிச்சாத்தான் முப்பரிமாண (3-டி) திரைப்படம் முதல் இப்போது வெளியாகும் முப்பரிமாண படங்கள் வரை அனைத்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. கால மாற்றத்தில் இப்போது 3-டி டி.வி.களும் வந்துவிட்டன.

உற்பத்தித் துறையில் சீனாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி, அதிக அளவில் உற்பத்தி பெருக்கத்துக்குக் காரணமாக உள்ள 3டி பிரிண்டர் எனப்படும் முப்பரிமாண தொழில்நுட்பம் இந்தியாவில் இப்போதுதான் பிரபலமாகி வருகிறது.

இந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுத் தந்து தொழில் வாய்ப்புகளை உருவாக்கி பல இளம் தொழில்முனைவோரை உருவாக்கும் நிறுவனம் சென்னையில் அமைந்துள்ளது என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.

சென்னையில் உருவாகி இன்று 18 நாடுகளில் 800 மையங்களில் பல முதல் தலைமுறை தொழில்முனைவோரை உருவாக்கியுள்ள காட் (சிஏடிடி) மையத்தின் அங்கமான ஐ-கிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆர். பார்த்தசாரதியை சந்தித்தபோது இத்தொழிலில் பொதிந்துள்ள வாய்ப்புகளும் வளங்களும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தின.

ஜெராக்ஸ் இயந்திரத்தைப் போல மிகச் சிறிய இடத்தில் வீடுகளுக்கான 230 வோல்ட் மின்சாரத்தில் செயல்படுத்தக் கூடிய இந்த தொழிலில் வளமான சுய தொழில் வாய்ப்புகள் பொதிந்துள்ளன என்று அவர் பட்டியலிட்டபோது நமது வியப்பு பலமடங்காகியது. அவரிடம் உரையாடியதிலிருந்து…

உங்களது ஆரம்ப காலம் மற்றும் இத்தொழிலில் தடம்பதிக்கத் தூண்டியது எது?

அப்பாவுக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை. இதனால் பிறந்தது திருவனந்தபுரம், படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிட்ஸ்பிலானியில் ஒருங்கிணைந்த பொறியியல் படிப்பு. அதாவது பி.இ. சிவில் என்ஜினீயரிங் மற்றும் எம்எஸ்சி ரசாயன படிப்பு. தொடர்ந்து வேலை தேடும் படலத்தில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் கிடைத்த வேலை வாய்ப்பு. அதைத் தொடர்ந்து தொழில்துறை சார்ந்தவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் வடிவமைப்பு உருவாக்க முடியும் என்பதால் உருவானதுதான் காட் மையம்.

ஐ-கிக்ஸ் நிறுவனம் உருவானது எப்படி?

ஒரு சமயம் ஜெர்மனிக்கு சென்றிருந்தபோது அங்கு மாநாட்டில் 3-டி பிரிண்டரின் செயல்பாடுகள் வியக்க வைத்தன. இதை இந்தியாவில் செயல்படுத்தினால் என்ன என்ற கேள்வி எழுந்தது. இதன் விளைவாக தோன்றியதுதான் ஐ-கிக்ஸ்.

ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த சாதனத்தை காட் பிராண்டில் விற்பனை செய்கிறோம். விற்பனைக்குப் பிறகு பயிற்சி அளிப்பது, அதை பராமரிப்பது உள்ளிடவற்றை ஐ-கிக்ஸ் கவனித்துக் கொள்ளும்.

முப்பரிமாண பிரிண்டர் எந்த அளவுக்கு பயன் தரும்?

ஜெராக்ஸ் இயந்திரம் புழக்கத்துக்கு வந்தபோது கார்பன் மூலம் நகலெடுக்கும் பணி முற்றிலுமாக நின்று போனது. அச்சுத் துறையில் கம்ப்யூட்டர் செயல்பாட்டுக்கு வந்தபிறகு லைனோ, மோனோ மற்றும் கைகளால் அச்சுக் கோர்ப்பது ஒழிந்து போனது.

அதுமாதிரி, எந்த ஒரு பொருளைத் தயாரிப்பதற்கும் டை எனப்படும் மோல்ட் அவசியம். இந்த டை தயாரிப்பதற்கு பாரம்பரிய முறையிலான தொழிலாளர்கள் அவசியம். மேலும் இதில் அடிக்கடி மாற்றம் செய்ய முடியாது. ஒரு டை செய்வதற்கு சில நாள்களாகும். இந்த டை இயந்திரம் வாங்குவதற்கு சில கோடி ரூபாய்களை முதலீடு செய்ய வேண்டும்.

ஆனால் அத்தகைய பிரச்சினைகள் எதுவும் 3-டி பிரிண்டரில் கிடையாது. ஒரு பொருளின் உண்மை வடிவம் எப்படி இருக்குமோ, அதற்கான டை-யை 3-டி பிரிண்டரில் உருவாக்க முடியும். இதில் எந்த சந்தர்ப்பத்திலும் மாறுதல்கள் செய்ய முடியும். வேண்டிய நிறத்திலும் செய்ய முடியும்.

பிளாஸ்டிக், செராமிக் என தேவைக்கு தகுந்தார்போல டை-களை உருவாக்கும் பிரிண்டர்கள் இப்போது புழக்கத்துக்கு வந்துள்ளன.

இது எப்படி மாற்றாக இருக்கும்?

நிச்சயமாக, எந்த ஒரு பொருள் தயாரிப்புக்கும் மூலப் பொருளைப் போல அந்த பொருளின் வடிவம் பிரதானம். அந்த பிரதானமான டை-யை இதில் உருவாக்க முடியும். இதனால் பாரம்பரியமாக டை தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இதில் மாற வாய்ப்புண்டு. அவர்கள் மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கும்.

அண்மையில் முடிவடைந்த டாவோஸ் உலக பொருளாதார பேரவை மாநாட்டில் கூட அடுத்தகட்ட புரட்சியை ஏற்படுத்த வல்லது 3-டி பிரிண்டர் என கணித்துள்ளனர்.

இதை எந்தத் துறையில் பயன்படுத்த முடியும்?

ஒரு குறிப்பிட்ட துறை என்று இதற்கான எல்லையை வரையறுக்க முடியாது. அன்றாடம் அனுப்பும் பிளாஸ்டிக் பொருள்களிலிருந்து விண்ணுக்குச் செல்லும் ராக்கெட் வரை அனைத்து துறைகளிலும் இதன் பயன்பாடு நீக்கமற நிறைந்துள்ளது.

இது யுபிஎஸ்-ஸிலும் செயல்படக்கூடியது. இதனால் மின்சாரம் தடைப்பட்டாலும் இதை செயல்படுத்தலாம். மின்வெட்டு இத்தொழிலுக்கு பெரும் பிரச்சினையாக இருக்காது.

இயந்திரங்களை மட்டும் விற்பனை செய்வதோடு நின்றுவிடாமல் குறிப்பிட்ட துறையினரின் தேவைகளுக்கேற்ற மாடல்களை உருவாக்கியும் தருகிறோம்.

நாங்களே இஸ்ரோவுக்கும், ஸ்ரீ ஹரிகோட்டா வுக்கும் சில மாடல்களை தயாரித்து அளித்துள்ளோம்.

இப்போது எந்தத் துறையில் அதிகம் பயன்படுத்துகின்றனர்?

கட்டுமானத் துறையில் இதன் பயன்பாடு அதிகம் உள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் நிறுவனங்கள் தங்களது குடியிருப்புகளின் மாதிரிகளை 3-டி பிரிண்டர் உதவியோடு உருவாக்கி வாடிக்கையாளர்களுக்குக் காட்டி விற்பனை செய்கின்றனர்.

வெறுமனே புகைப்படத்தில் வீடுகளைத் தேர்வு செய்வதைவிட, 3-டி பிரிண்டர் மூலமான கட்டிடத்தைப் பார்த்து மக்கள் தேர்வு செய்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் உடனடியாக முடிவு செய்ய முடிகிறது என்று பல கட்டுமான நிறுவனங்கள் கூறுகின்றன.

ஜெர்மனியில் உள்ள ரபோ வங்கி கட்டிடத்தின் வரைபடத்தை 3-டி பிரிண்டரில் உருவாக்கித் தந்தோம். இப்போது அந்தக் கட்டிடம் அங்கு உருவாகியுள்ளது. விண்வெளித்துறை, விமானம், ஆட்டோமொபைல், மருத்துவ கருவிகள், மின்சார கருவிகள், சாதனங்கள், ஆராய்ச்சி மையங்கள், பல்கலைக் கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், வடிவமைப்பு கல்வி மையங்கள் ஆகிய அனைத்திலுமே இது மிகவும் பயனுள்ளது.

விண்வெளியில் நாசா அமைத்துவரும் மையத்தில் ஏற்படும் பழுதுகளை நீக்க 3-டி பிரிண்டரை எடுத்துச் செல்லலாமா என்று கூட நாசா ஆராய்ந்து வருகிறது.

மருத்துவத் துறையில் நுரையீரல் குழாய், மிகச் சிறிய காது கேட்புக் கருவி, பல் உருவாக்கம் உள்ளிட்டவற்றிலும் இதைப் பயன்படுத்த முடியும். பயன்படுத்தியும் வருகின்றனர்.

எந்தெந்த பொருள்களில் டை உருவாக்க முடியும்?

பெரும்பாலும் பிளாஸ்டிக் அடிப்படையிலான பொருள்களைக் கொண்டு டை தயாரிக்க முடியும். இதற்கான இயந்திரத்தின் விலை ரூ. 4 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையாகும். இதில் 8 அங்குலம் உயரம் வரை பொருள்களை தயாரிக்க முடியும்.

இது தவிர, செராமிக் பவுடர் மூலம் பொருள்களை வடிவமைக்க முடியும். இதற்கான இயந்திரத்தின் விலை ரூ. 10 லட்சத்துக்கு மேல்.

தொழில் முனைவோருக்கு இது எந்த வகையில் பயனளிக்கும்?

இதைக் கற்பது எளிது. மேலும் இந்த இயந்திரத்தில் ஒரே ஒரு டை கூட தயாரித்து தர முடியும். செலவு குறைவானது. சிலர் ஒரே ஒரு பொருள் மட்டும் போதும் என்பார்கள். அத்தகையோருக்கு ஒன்றை மட்டும் தயாரிக்க முடியும்.

தொழிலாளிகளை நம்பியிருக்க வேண்டாம். ஒருவரே இதைச் செயல்படுத்த முடியும். ஒரு டை தயாரிக்க நான்கு நாள் ஆகலாம். ஆனால் இதில் ஒரு சில மணி நேரங்களில் உருவாக்க முடியும்.

வேறெந்த வகையில் இது பயனுள்ளது?

இப்போது காலம் பொன் போன்றது. எந்தத் தொழிலிலும் காத்திருக்கும் பொறுமை கிடையாது. அதற்கான நேரமும் இல்லை. அப்படி இருக்கும்போது ஒரு பொருளுக்கு ஒருவாரம் காத்திருக்க வேண்டியிராமல் ஒரு நாளில் கிடைக்கிறதென்றால் அதை வரவேற்காமலிருக்க முடியுமா?

எந்த வடிவத்திலும் பொருளைத் தயாரிக்க முடியும். உடனடியாக அந்த இடத்திலேயே தயாரிக்க முடிவது இன்னமும் சிறப்பானது.

டை இயந்திரத்துக்குத் தேவையான அதிகபட்ச முதலீடு, அதை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகிய செலவுகள் குறையும்.

மேலும், மும்பையில் தீவிரவாதிகள் ஹோட்டலை முற்றுகையிட்டபோது, அந்த ஹோட்டலுக்குள் எப்பகுதியில் நுழைந்து பிணைக் கைதிகளை மீட்பது என்பதை தெரியாமல் பல மணி நேரம் கமாண்டோக்கள் தவித்தனர். அவர்களிடம் கட்டடத்தின் வரைபடம் கூட சரிவர கிடைக்கவில்லை.

இதுபோன்ற சமயங்களில் கட்டிடத்தின் மாதிரியாக இதுபோன்ற 3 டி பிரிண்டர்கள் இருந்தால் மிகவும் வசதியாக இருக்கும் என்று புலனாய்வுத் துறை அதிகாரிகளே கருத்து தெரிவித்திருந்தனர். இதேபோல பல மாடிக் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்ளை மீட்கவும், கட்டிடத்திற்குள் செல்லவும் தீயணைப்புப் படையினருக்கு இதுபோன்ற 3-டி மாதிரிகள் மிகவும் உதவியாக இருக்கும் என்று காவல்துறை தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

டாவோஸ் மாநாட்டில் கணித்துள்ளபடி 3-டி பிரிண்டர்கள் புரட்சியை ஏற்படுத்துமா?

அதில் சந்தேகமேயில்லை. கம்ப்யூட்டர்கள் எப்படி மாற்றத்தைக் கொண்டு வந்ததோ அதைப் போல 3-டி பிரிண்டர்கள் உற்பத்தித் துறையில் பெரும் புரட்சியை மேலை நாடுகளில் ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் இத்தகைய மாற்றம் வருவது நிச்சயம்.

கனவுத் தொழிற்சாலையான சினிமா தொழிலிலும் இதைப் பயன்படுத்த முடியும். மிக பிரமாண்டமான செட் அமைப்பதற்கு இந்த நுட்பத்தைப் பயன்படுத்தலாம். கலை இயக்குநர்களுக்கு இந்த டெக்னாலஜி மிகவும் தேவைப்படும் ஒன்றாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x