

பெட்ரோல், டீசல் சில்லரை வர்த்த கத்தில் ஈடுபடுமாறு பிரிட்டிஷ் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங் களுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்துள்ளார்.
பெட்ரோல், டீசல் ஆகியன தினசரி விலை அடிப்படையில் நாடு முழுவதும் நிர்ணயம் செய்து விற்பனையாக உள்ள நிலையில், ஐரோப்பாவில் மிகப் பெரிய பெட்ரோலிய நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
பெட்ரோல் சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தற்போது நாடு முழுவதும் 1,400 பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் உள்ளன.
எண்ணெய் அகழ்வுப் பணியில் பிரிட்டிஷ் பெட்ரோலியமும், ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து கிருஷ்ணா கோதாவரி படுகையில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும் இவை சில்லரை வர்த்தகத்தில் போதிய அளவு கவனம் செலுத்தவில்லை. இதனால் இந்நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் முதலீடு செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்ததாக ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விமானங்களுக்கான எரிபொருள் விநியோகத்துக்கான அனுமதியை பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் பெற்றது. அதேசமயம் ரிலையன்ஸ் நிறுவனமும் விமான எரிபொருள் விநியோகத்தில் தனியாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
சில்லரை வர்த்தகத்தில் பிரிட் டிஷ் பெட்ரோலியம் இறங்கும் பட்சத்தில் அது இந்தியாவில் செயல்படும் 10-வது நிறுவனமாக இருக்கும்.