Published : 20 Dec 2013 12:00 AM
Last Updated : 20 Dec 2013 12:00 AM

ஊக்க நடவடிக்கைகளைக் குறைத்தது அமெரிக்க மத்திய வங்கி

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் கொடுத்து வரும் 85 பில்லியன் டாலர்கள் ஊக்க நடவடிக்கையை வரும் ஜனவரி மாதம் முதல் சிறிதளவு குறைக்கப்போவதாக புதன் கிழமை அறிவிக்கப்பட்டது. இதன்படி 10 பில்லியன் டாலர்கள் குறைக்கப்பட்டு 75 பில்லியன் டாலர் அளவுக்கு மட்டுமே ஊக்க நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதேசமயம் வட்டி விகிதத்தை அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் உயர்த்தவில்லை. எதிர்பார்க்கப்பட்ட காலத்தை தாண்டியும் இதே வட்டி விகிதம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை நவம்பர் மாதத்தில் 7 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. இதன் காரணமாகவே 85 பில்லியன் டாலர் ஊக்க நடவடிக்கையை சிறிதளவு குறைக்க முடிவெடுத்திருக்கிறது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்.

தற்போது 7 சதவிகித அளவில் இருக்கும் வேலையின்மை விகிதம் 2014-ம் ஆண்டு முடிவுக்குள் 6.3 முதல் 6.6 சதவிகிதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு 6.4 முதல் 6.8 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2008-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போது முதலீட்டாளர்களுக்கு ஊக்கம் கொடுக்கவும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் முதன் முதலாக ஊக்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இப்போது கொடுத்து வரும் ஊக்க நடவடிக்கைகள் (Quantitative Easing 3) 15 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 4 டிரில்லியன் டாலர் அளவுக்கு ஊக்க நடவடிக்கைகள் வழங்கப்பட்டிருக்கலாம்.

வட்டி உயர்வு 2016-ல்?

2008-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு, பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த அமெரிக்காவில் வட்டி விகிதம் 0 சதவிகித நிலைக்கு குறைக்கப்பட்டது. இருந்தபோதும் பணவீக்கம் எதிர்ப்பார்க்கப்பட்ட 2 சதவிகிதம் என்ற நிலைக்கு உயரவில்லை. நவம்பர் மாதம் 1.2 சதவிகிதம் என்ற நிலையில் இருப்பதால் 2016-ம் ஆண்டு ஆரம்பத்தில்தான் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று தெரிகிறது.

பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கைகள் அளிக்கப்பட்டிருந்தாலும் சில பக்கவிளைவுகள் இருப்பதாகவும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் கவலைப்படுகிறது. அதிகளவு பணம் அச்சடிப்பட்டதால் அமெரிக்க பங்குச்சந்தைகள் உச்சத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. கரன்சி சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதாகவும் ஃபெடரல் கவலைப்படுகிறது.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் அடுத்த நிதிக் கொள்கை கூட்டம் வரும் ஜனவரி 28-29ம் தேதிகளில் நடக்க இருக்கிறது. அதே சமயத்தில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் தலைவர் பென் பெர்னான்கியின் பதவிக் காலம் 2014-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.

பங்குச்சந்தைகள் சரிவு

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் முடிவுகள் புதன் கிழமை இரவு வெளியாகி இருந்தாலும், வியாழக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடனே ஆரம்பித்தன. இருந்தாலும் வர்த்தகம் முடியும்போது சரிவுடன் முடிந்தது. வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 151 புள்ளிகள் சரிந்து 20708 புள்ளியில் முடிவடைந்தது. அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50 புள்ளிகள் சரிந்து 6166 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்துக்கொண்டது.

வங்கித்துறை பங்குகள் கடுமையான சரிவை (-2.43%) சந்தித்தன. இதற்கடுத்து கேபிடல் குட்ஸ், ஆயில் மற்றும் கேஸ், மின் துறை பங்குகளும் சரிவை சந்தித்தன. 30 பங்குகள் இருக்கும் சென்செக்ஸ் குறியீட்டில் 19 பங்குகள் சரிவுடன் முடிவடைந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x