Published : 08 Nov 2013 12:00 AM
Last Updated : 08 Nov 2013 12:00 AM

ஏற்றுமதியை அதிகரிக்க அரசு புதிய உத்தி

மத்திய அரசு ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக புதிய உத்தியைக் கையாண்டுள்ளது. சிறப்புப் பொருளாதார மண்டலம் (எஸ்இஇஸட்) மூலமான ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு இப்பிராந்தியத்தில் நிலவும் குறைபாடுகளைத் தீர்க்க ஆன்லைன் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் குறைகளை உடனுக்குடன் தீர்த்து ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்ய முடியும் என வர்த்தக அமைச்சகம் உறுதியாக நம்புகிறது.

இதற்காக முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் மண்டலங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றுக்கு இடையே சிறப்பு ஆன்லைன் வசதியை ஏற்படுத்தித் தருமாறு ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தை வர்த்தக அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த ஆன்லைன் வசதி அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தயாராகிவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆன்லைனில் தொழில் நிறுவனங்கள் எந்தப் பகுதியில் செயல்பட்டு வந்தாலும் தங்களது குறைகளைப் பதிவு செய்யமுடியும். அவை உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு குறைகளை விரைவாகப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எந்தெந்த துறைகளில் குறைகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து அவற்றை அத்துறைக்கு அனுப்பி அவர்கள் எத்தகைய நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை தொடர்ந்து கவனித்து அதற்கு விரைவில் தீர்வு காண வழி காண்போம். இதனால் வர்த்தக பரிவர்த்தனை காலம் குறைந்து இந்த மண்டலங்களிலிருந்து ஏற்றுமதி அதிகரிக்கும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இது ஒற்றைச் சாளர குறைதீர் அமைப்பாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியவுடன் அடுத்தகட்டமாக வர்த்தக அமைச்சகத்தின் கொள்கை சார்ந்த முடிவுகள் ஆன்லைனில் விவாதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.

தினசரி வர்த்தக அமைச்சகத்துக்கு ஒரு புகாராவாது வருவதைத் தொடர்ந்தே இத்தகைய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிக ஏற்றுமதி, முதலீடுகளை ஈர்க்கும் மையங்களாகத் திகழ்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (எஸ்இஇஸட்) இப்போது சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக ஏற்றுமதி குறைந்து பொலிவிழந்து காணப்படுகின்றன.

மேலும் குறைந்தபட்ச மாற்று வரி விதிப்பு முறை இவற்றுக்கும் விதிக்கப்பட்டதால் இந்த மண்டலங்களில் புதிதாக தொழில் தொடங்க முன்வருவோரின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்தது. நடப்பு நிதி ஆண்டில் இந்த மண்டலங்களிலிருந்தான ஏற்றுமதி 4.1 சதவீதமாக முதல் காலாண்டில் சரிந்தது.

இதையடுத்து அரசு எஸ்இஇஸட்டில் உள்ள முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய முனைந்துள்ளது. இந்த மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளையும் அரசு சமீபத்தில் அறிவித்ததோடு நில சீர்திருத்தத்தையும் அறிவித்துள்ளது. இதன் மூலம் முதலீடு மீண்டும் பெருகும் என அரசு நம்புகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x