Published : 02 Feb 2014 12:46 PM
Last Updated : 02 Feb 2014 12:46 PM

நீங்களும் புதுமைப்பித்தன் ஆகலாம்

எட்வர்ட் டி போனோ என்றாலே நினைவுக்கு வருவது லேட்டரல் திங்கிங் (Lateral Thinking) எனும் வார்த்தை தான். இதன் சொல்லாக்கமும் கருத்தாக்கமும் டி போனோ உலகுக்கு தந்தது.

நேராக யோசிக்கும் தர்க்கம் சார்ந்த முறையைவிட இந்த மாற்று சிந்தனை முறை தான் கற்பனையின் ஊற்று. இந்த சிந்தனை திறன்களை ஆராய்ந்து, எழுதி, பேசி, பயிற்சித்து, ஆலோசனை வழங்கிய இவரால் சுபிட்சை அடைந்தவர்கள் பல ஆயிரம் பேர்கள். பல ஆயிரம் அமைப்புகள்.

இவருடைய Serious Creativity புத்தகத்தை பற்றி இப்போது பேசப்போகிறோம். ‘என்ன சார் எல்லா புத்தகத்தையும் பாராட்டுறீங்க?’ என்பவர்களுக்கு என் பதில் இதுதான்:

படிக்க வேண்டிய புத்தகத்தை மட்டுமே பரிந்துரை செய்கிறேன். வாங்க வசதிப்படாதவருக்காக அதன் சாரத்தை வழங்குவதுதான் இந்த பகுதியின் நோக்கம்.

நான் புத்தகங்களை தேர்ந்தெடுத்தேன் என்பதை விட புத்தகங்கள் என்னை தேர்ந்தெடுத்தன என்று சொல்வது தான் நிஜம். சுந்தர ராமசாமி முதல் எட்வர்ட் டி போனோ முதல் அறிமுகமானது இப்படித்தான்.

1993-ல் அந்த கோயமுத்தூர் கம்பெனிக்காக “படைப்புத்திறன் பயிற்சி” அளிக்க சென்றிருந்தேன். உறைந்து போயிருக்கும் மேல் தட்டு மேலாளர்களின் சிந்தனையை உடைத்து புதிய சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் எதிர்பார்த்தது அந்த நிர்வாகம். முன் இரவில் நடந்துக்கொண்டு சில புத்தகங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன். அது வாழ்த்து அட்டை தலைமுறையின் பொற்காலம். அப்போது கண்ணில் பட்டது இந்தப் புத்தகம்.

சீரியஸ் க்ரியேட்டிவிட்டி என்ற தலைப்பே வசீகரமாக இருந்தது. அதனால் இந்த புத்தகத்தை வாங்கி விட்டேன்.

இரவு முழுவதும் படித்ததில் மறுநாள் பயிற்சியின் முழு வடிவமும் வீச்சும் மாறிப்போயிருந்தது. அதுதான் டி போனோவுடன் நான் கைப்பிடித்து நடந்த முதல் அடி.

பின் 2005-ல் அவர் பெங்களூருக்கு பயிற்சி அளிக்க வந்தபோது பெரும் செலவு செய்து அதில் பங்கேற்றேன். என் சிந்தனையையும் தொழிலையும் பல முறை மாற்றி அமைத்த அவர் உத்திகளுக்காக நான் என்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

எழுந்து, குதித்து, ஆக்ரோஷமாய் முஷ்டியை குத்தி, உக்கிரத்துடன் கத்தும் பல பயிற்சியாளர்களைப் பார்த்து சலித்துப் போயிருந்தோருக்கு டி போனோ ஒரு ஆச்சரிய அனுபவம்.

நிகழ்ச்சி முழுவதும் நாற்காலியை விட்டு எழுந்திருக்கவில்லை. மெலிதான பேச்சு. கூர்ந்து கேட்காவிடின் பாதி நகைச்சுவை நழுவிப் போயிருக்கும். கணினி இல்லை. ஓ.ஹெச்.பி.யில் புடவைத்தலைப்பு போல நீ.........ளமான தொடர் ட்ரான்ஸ்பரன்சி ஷீட்டில் வரைந்து கொண்டேபேசுகிறார். ஒவ்வொரு வாக்கியமும் ஒரு கருத்து. ஒரு அனுபவம்.

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி ஆட்டம் அன்று. மதியம் கூட்டம் கலையும் என்று பார்த்தால் கட்டுகோப்புடன் திரும்புகிறது கூட்டம். அந்த 200 சொச்சம் பேரும் பாக்கியவான்கள்!

மூளையின் செயல்பாட்டை உணர்ந்து மிக மிக எளிமையான சிந்தனை உத்திகள். Provacation என்னும் சிறு தூண்டல் இவரின் யுத்திகளில் மிகச் சிறந்தது என்பேன். “விமானங்களுக்கு சதுர சக்கரங்கள் இருந்தால் என்ன?” என்று யோசிக்க ஆரம்பியுங்கள். என்ன லூசுத்தனம் என்று கைவிடாமல் 5 நிமிடங்கள் சங்கிலித் தொடராய் சிந்தித்தால் நிச்சயம் 5 புதிய எண்ணங்களாவது தோன்றும்.

1 முதல் 10 வரை அனைத்து எண்களையும் கூட்டினால் என்ன விடை என்றால் 55 என்பீர்கள். 1 முதல் 100 வரை என்றால்?

50 49 48 .........3 2 1 என எழுதுங்கள். அடுத்த வரிசையில்

51 52 53 ........98 99 100 என எழுதுங்கள்.

மேல் வரிசை எண்ணையும் கீழ் வரிசை எண்ணையும் ஒவ்வொன்றாக கூட்டினால் மொத்தம் 101. மொத்தம் 50 ஜோடி. விடை 101*50=5050.

வெறும் முயற்சியை விட சிந்தனை வடிவத்தை மாற்றினால் புதிய வழிகள் கிடைக்கும் என்பதை புத்தகம் முழுக்க பல வழிகளில் சொல்கிறார்.

ஆறு சிந்தனை தொப்பிகள் கார்பரேட்டுகள் அதிகம் பயன்படுத்தும் யுத்தி. ஒரே மாதிரி ஆண்டுகள் பல யோசித்து இறுகிப்போன மனங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரி செயல் படுகின்றன. ஒரு மீட்டிங்கில் எல்லாவற்றிக்கும் ஆமாம் போடுபவர்கள் இருப்பார்கள். எல்லாவற்றிக்கும் இடக்கு பேசுபவர்கள் இருப்பார்கள். எல்லாவற்றிக்கும் உணர்ச்சி வசப்படுபவர்கள் இருப்பார்கள். எல்லாவற்றிக்கும் புது எண்ணங்களை கொட்டுபவர்கள் இருப்பார்கள்.

ஆனால் எல்லாருமே எல்லா வகை சிந்தனைகளையும் ஒரே நேரத்தில் (தொப்பியை மாற்றுவதைப் போல) மாற்றி பயன்படுத்தினால் எவ்வளவு சீக்கிரம் இசைவு பெற்று புது முடிவுகள் எடுப்போம்? இதை செயல்படுத்தத் தான் இந்த உத்தி.

இன்று பல முன்னணி நிறுவனங்கள் இதை எல்லா குழு நடத்தைகளுக்கும் கட்டாயமாக்கியுள்ளன. ஜப்பானில் ஒரு நிறுவனம் ஆறு சிந்தனை தொப்பிகள் புத்தகத்தை எல்லா பணியாளர்களுக்கும் இலவசமாக வழங்குகிறது.

இந்த உத்திகளின் எளிமை பலருக்கு சந்தேகத்தை தரக் கூடியது. ஆனால் பயன்படுத்தியவர் அனைவரும் இதன் அடிமைகள்.

ஒரு குழுவில் உட்கார்ந்து 10 நிமிடத்தில் 30 புது ஐடியாக்கள் வேண்டுமா? சாதாரணமாகச் செய்யலாம் என்கிறது இந்த புத்தகம்.

லேட்டரல் திங்கிங் புரிய நகைச்சுவை சிறந்த உதாரணம். பன்ச் லைன்களை உருவாக்க விளம்பர நிறுவனங்கள் இயல்பாக இவற்றை பயன்படுத்திகிறார்கள் என்று தெரிகிறது.

ஒரு மொக்கை ஜோக் கூட சிரிப்பை வரவழைக்கிறது. ஏன்? அது தரும் ஆச்சரிய உணர்வு தான். என் பள்ளி காலத்து கடி ஜோக் ஒன்று உண்டு. (அப்போது மொக்கை இல்லை; கடி தான். கோவையில் இவற்றை சொன்னால் “மண்டை காயுது” என்பார்கள் அப்போது!)

“பஸ்ஸ பின்னால குத்தினா என்ன ஆகும்?”

“---”

“ ‘பின்’ வளையும்”

வரிசைப்படுத்தல் தான் லேட்டரல் திங்கிங்கில் முக்கிய அம்சம். ஒரு ஜோக் வரிசைப்படுத்தலில் தான் பிறக்கிறது. கீழ்கண்ட (பழைய) துணுக்கை கால வரிசைப்படி எழுதினால் அது நகைச்சுவை உணர்வை முற்றும் இழந்திருக்கும்.

பெண்ணின் தந்தை: மாப்பிள்ளை நடத்தை எப்படி?

தரகர்: தங்கம் சார். ஒரு குறையுமில்லை. நன்னடத்தைக்காக 5 வருஷம் முன்னாடி ரிலீஸ் பண்ணாங்கன்னா பாருங்களேன்!

gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x