Published : 13 Aug 2016 10:53 AM
Last Updated : 13 Aug 2016 10:53 AM

தொழில் ரகசியம்: விழிப்புடன் செயல்பட தூக்கமே அத்தியாவசியம்

இந்தப் பகுதி தொடங்கி நான் எழுதும் நூறாவது கட்டுரை இது. விளையாட்டாய் ஆரம்பித்தது இப்படி வினையாகும் என்று எதிர்பார்க்கவில்லை. அதுவும் சதம் எடுத்து, செண்ட்டம் வாங்கி, செஞ்சுரி அடிக்கும் அளவிற்கு விபரீதமாகப் போகும் என்று நினைக்கவே இல்லை. விதி வலியது!

99 கட்டுரைகள் உங்கள் அறிவுக் கண்களைத் திறந்து விழிப்பை ஏற்படுத்தியதா என்று தெரியாது. ஆனால் இந்த கட்டுரை தூக்கத்தை பற்றியது. விழிப்புடன் வேலை செய்ய செழிப்பாய் தூங்குங்கள் என்பதற்கு. அதனால் தூங்காமல் கவனத்துடன் படிக்கவும்!

நம்மூரில் ஒரு கெட்ட எண்ணம் உண்டு. தூங்குபவன் சோம்பேறி, தூக்கத்தை துறந்து வேலை செய்பவனே உழைப்பாளி. இப்படி சொல்லியே தானாய் வரும் தூக்கத்தை கெடுத்து குட்டிச்சுவராக்கி நிம்மதியாய் உறங்குவதையே ஒருவித குற்ற உணர்ச்சியாக்கி சுகமாய் செய்யவேண்டியதை யாருக்கும் தெரியாமல் போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு தூங்கும் அளவிற்கு தள்ளியிருக்கிறது.

உழைக்கிறேன் பேர்வழி என்று சரியாய் தூங்காமல் இருப்பது கற்றுக்கொள்ளும் திறனை குறைத்து, தேவைக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படவைத்து, நெஞ்சில் படபடப்பை அதிகப்படித்தி மொத்தத்தில் மூளையை மழுங்கச் செய்து அதன் புரொடக்டிவிடியை குறைக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இது தெரியாமல் உறங்காமல் உழைப்பதை பெருமைப்படதாக்கி அதுவே அதிக செயல்திறன் என்று தவறாக நினைக்க வைத்து தூக்கமில்லா உழைப்பு ஒரு கார்ப்பரேட் கலாச்சாரம் ஆகிவிட்டது. இதனாலேயே பலர் தினம் 12 கப் காபி குடித்து 18 மணி நேரம் உழைக்கிறேன் என்று மார்தட்டி 3 மணி நேரம் மட்டும் தூங்குகிறார்கள். கச்சா எண்ணெய்க்கு அடுத்து காபி தான் அதிகம் விற்கிறது என்றால் நாம் எப்படி கச்சா எண்ணெய் போல் வாழ பழகிவிட்டோம் என்பதை நினைத்துப் பாருங்கள்.

கம்ப்யூட்டர் ஹாங் ஆனால் அதை ரீபூட் செய்கிறோம் இல்லையா. அதைப் போலத்தான் மனித மூளையும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆயிரம் வேலை தலைக்கு மேல் உட்கார்ந்து மென்னியை முறிக்கும் போது மூளையும் எண்ணங்களும் ஆஃப் ஆகி ஆன் ஆக மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது பாருங்கள், அப்பொழுது ஒரு சின்ன தூக்கம் போட்டால் மூளை ரீபூட் ஆகி ஜரூராய் ஜபர்தஸ்த்தாய் ஜாலியாய் வேலை செய்யுமாம்.

‘Proceedings of the National Academy of Sciences’ என்ற அமைப்பு கனவுடன் கூடிய தூக்கம் மனதில் பதிந்திருக்கும் பல்வேறுபட்ட தகவல்களை ஒருங்கிணைக்க வைத்து புதுமையாய் சிந்தித்து புதிய விடைகளைக் கண்டுபிடிக்க வைக்கும் என்று ஆராய்ந்து கூறியிருக்கிறது. நல்ல தூக்கம் நினைவாற்றலை கூட அதிகரிக்குமாம். தூக்கம் என்றால் இரவில் படுத்து மறுநாள் மதியம் வரை தூங்கி வீட்டில் உள்ளவர்கள் தலைமாட்டில் ஊதுவத்தி ஏற்றி ஊருக்கு தகவல் தரவேண்டுமோ என்று நினைக்கும் அளவிற்கு தூங்கவேண்டும் என்றில்லை. கிடைத்த கேப்பில் ஆறு நிமிட தூக்கம் கூட எதேஷ்டமாம். இதை மைக்ரோ நேப் என்கிறார்கள்.

நான்கு ஐந்து நாட்கள் தொடர்ந்து சராசரி 4 மணி நேரம் மட்டும் தூங்கினால் இருபத்தி நான்கு மணி நேரம் தொடர்ந்து தூங்காமல் இருப்பதற்கு சமம். தூக்கமின்மை சிந்திக்கும் திறனை குறைத்து சரக்கடித்தால் ஏற்படுமே அந்த கிறுகிறுப்பிற்கு சமம். இப்படி பத்து நாள் தொடர்ந்து செய்தால் 48 மணி நேரம் தொடர்ந்து தூங்காமல் இருப்பது போல் இருக்கும். இதனால் மூளை செயல்பாடு பாதிக்கப்பட்டு முடிவெடுக்கும் திறன் முடக்கப்பட்டு, பதிலளிக்கும் நேரம் நீட்டப்பட்டு பிரச்சனை தீர்க்கும் திறன் கெடுக்கப்படுகிறது.

துக்கம் நிறைந்த வாழ்க்கையை கூட வாழலாம், தூக்கமில்லா வாழ்க்கை ரொம்பவே துயரமானது. இனிமேலாவது தூங்காமல் உழைப்பதே சிறந்தது என்று அப்பாவியாய் நினைக்காமல் கொட்டாவி வந்த மாத்திரம் தூக்கத்தோடு மல்லுக்கட்டாமல் மல்லாக்க படுத்து மற்றதை மறந்து சொப்பனத்தோடு சௌக்கியமாய் உறங்குங்கள். அறிவு சார்ந்த இன்றைய பொருளாதாரத்தில் விழிப்புடன் செயல்பட தூக்கமே அத்தியாவசியம் என்பதை உணருங்கள்.

தூக்க மேட்டரில் தலைசிறந்த நிபுணர் ‘ஹாவர்ட் மெடிகல் ஸ்கூலை’ சேர்ந்த டாக்டர் சார்லஸ் செய்ஸ்லெர் நிர்வாகங்கள் தங்கள் மற்றும் நிறுவன ஊழியர்களின் செயல்பாட்டை உயர்த்த நினைத்தால் தூக்கத்தை உதாசீனப் படுத்தாமல் அதன் முக்கியத்தை உணரவேண்டிய தருணம் வந்துவிட்டது என்கிறார்.

விடுமுறை பாலிசி, மெடர்னிடி பாலிசி என்று கம்பெனிகள் வகுத்திருப்பதைப் போல் ‘ஸ்லீப்பிங் பாலிசி’ ஒன்றை வகுத்துக்கொண்டாலும் தப்பில்லை என்கிறார். எந்த காரணம் கொண்டும் யாரும் 12 மணி நேரத்துக்கு மேல் உழைக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் அனைவருக்கும் தொடர்ந்த 11 மணி நேர ஓய்வு கட்டாயம் தரவேண்டும். யாரும் வாரத்திற்கு 60 மணி நேரத்திற்கு மேல் உழைக்கக்கூடாது. எக்காரணம் கொண்டும் கண்டிப்பாக வாரத்திற்கு 80 மணி நேரத்திற்கு மேல் உழைக்கவே கூடாது.

அப்படி ரெகுலராய் உழைத்தால் என்ன ஆகும் என்று தெரிந்துகொள்ள கம்பெனி முதலாளி அல்லது தலைமைச் செயல் அதிகாரி தன் கார் டிரைவரை வாரத்திற்கு 80 மணி நேரம் ஓய்வில்லாமல் வண்டி ஓட்டச் சொல்லலாம். எதற்கும் உயில் எழுதிவிட்டு இதை செய்து பார்ப்பது உசிதம்!

சூப்பர்வைசர்கள் முதல் நிர்வாகம் வரை அனைவருக்கும் தூக்கம் மற்றும் Fatigue Management பயிற்சிகள் கண்டிப்பாய் அளிக்கப்பட்டு அவர்கள் கீழ் வேலை செய்பவர்களை அவர்கள் ஊக்கப்படுத்த அறிவுறுத்த வேண்டும். நிறுவன நிர்வாகமும் ஊழியர்களும் தேவைப்படும் உறக்கத்தை பெற்று துடிப்புடன் ஊழியம் புரிய தேவையான ஓய்வு கிடைக்கும் வகையில் நிறுவன செயல்திட்டங்கள் வகுக்கப்படவேண்டும் என்கிறார் .

பல நிறுவனங்கள் இன்று Pro-napping Policy ஒன்றையே வகுத்து வைத்திருக்கின்றன. ‘கூகுள்’ தன் ஆபீசில் தூங்குவதற்கு தனி ரூம்களை கட்டித் தந்திருக்கிறது. பல நிறுவனங்கள் நெகிழ்வான வேலை நேரத்தை வைத்திருக்கின்றன. கொடுக்கும் வேலையை நேரத்தில் செய்து முடிக்கவேண்டும் என்பது தான் முக்கியமே ஒழிய அதை எப்படி, எவ்வாறு, எங்கு, எப்பொழுது செய்து முடிப்பது என்பதை ஊழியர்கள் சௌகரியத்திற்கு விட்டுவிடுகிறார்கள்.

பல நிறுவனங்கள் ஊழியர்களின் வேலை திறனை அதிகரிக்க கோடிக்கணக்கில் செலவு செய்கின்றன. புரடொக்டிவிடியை அதிகப்படுத்தும் தூக்கத்தை சரியான அளவு கிடைக்கும்படி செய்தால் அதுவே ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதையெல்லாம் செய்ய முடியுமா, பலன் தருமா என்று மலைக்காமல் நிறுவனத்தின் ஒரு பிரிவில் மட்டும் இதை பரிட்சார்த்த முறையில் செயல்படுத்தி பார்க்கலாம்.

நிறுவனத்தின் பாலிசி ஒரு பக்கம் இருக்கட்டும். நமக்கு நாமே ஒரு தூக்க பாலிசி வைத்துக்கொள்வது நல்லது. சரியாய் தூங்காமல் கூட்டத்தில் கொட்டாவி விட்டு நம் செயல்திறனில் பாதியை மட்டும் பிரயோகித்து அதை ஈடுகட்ட இரட்டிப்பு நேரம் செலவழிப்பது எதற்கு. அதற்கு பதில் நன்றாக உறங்கி பிரெஷ்ஷாக வேலை செய்தால் பாதி நேரத்தில் இரட்டிப்பு செயல்திறன் காட்டலாமே.

நீல ஒளியோடு இயங்கும் செல்ஃபோன், லேப்டாப், டேப்லட் போன்ற எல்இடி கருவிகள் மூளையில் கார்டிசால் என்ற சமாச்சாரத்தை அதிகப்படுத்தி தூங்குவதற்கு தேவையான மெலடோனினை கட்டுப்படுத்துகிறதாம். படுக்கும் வரை இவைகளுடனேயே நாம் அதிகம் குடும்பம் நடத்துவதால்தான் தூக்கம் வராமல் அவதிப்படுகிறோமாம். தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு இந்த கன்றாவிகளை அணைத்து தொலையுங்கள் என்கிறது ‘நேஷனல் ஸ்லீப் பவுண்டேசன்’என்ற அமைப்பு.

தூக்கத்தைப் பற்றிப் பேச இன்னமும் கூட நிறைய விஷயம் இருக்கிறது. ஆனால் பாருங்கள், எனக்கு தூக்கம் வருகிறது. ஸோ, பிறகு பார்ப்போமே!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x