Last Updated : 01 Feb, 2014 10:54 AM

 

Published : 01 Feb 2014 10:54 AM
Last Updated : 01 Feb 2014 10:54 AM

WPI, CPI கணக்கிடும் முறை - என்றால் என்ன?

WPI என்பது பணவீக்கத்தை அறிய பயன்படும் முக்கியமான விலைக் குறியீட்டு எண்ணாகும். CPI மக்களின் வாழ்க்கை செலவுகளைக் கண்டறிய உதவும் முக்கிய குறியீடு. இவை இரண்டுமே வெவ்வேறான விலைகள், பொருட்களின் சேர்க்கை, மற்றும் weights கொண்டு கணக்கிடப்படுபவை.

உணவு தானியம் போன்ற அடிப்படைப் பொருட்களின் மொத்த விலைகள், பெட்ரோலியப் பொருட்களில் அரசு நிர்ணயித்த விலைகள், உற்பத்தி பொருட்களின் தொழிற்சாலை விலைகள், இடைநிலை பொருட்களின் விலைகள் ஆகியவற்றைக் கொண்டு WPI கணக்கிடப்படுகிறது. மாறாக, CPI என்பது நுகர்வு பொருட்களின் சில்லறை வணிகத்தின் விலைகளைக் (வரி உட்பட) கொண்டு கணக்கிடப்படுகிறது.

WPI கணக்கிடுவதற்கான மொத்த விலைகளை வியாபாரிகளே அரசுக்குத் தாமாகவே முன்வந்து தரவேண்டும், ஆனால், CPIயை கணக்கிட நுகர்வு பொருட்களின் சில்லறை விலைகளை சந்தைகளுக்குச் சென்று புள்ளிவிபரங்களை அரசு புள்ளிவிபரத் துறை அலுவலர்கள் சேகரிக்க வேண்டும். தேசிய வருவாய் கணக்கெடுப்பின்படி WPI weights பயன்படுத்தபடுகிறது. நுகர்வோர் செலவு புள்ளிவிபர கணக்கெடுப்புபடி CPI weights பயன்படுத்தப்படுகிறது.

CPI-யில் பயன்படுத்தப்படும் weights பின்வருமாறு: உணவு, திரவ உணவு, புகையிலை 49.71%, எரிசக்தி மற்றும் மின்சாரம் 9.49%, இருப்பிட வசதி 9.77%, உடை, காலனி 4.73%, மற்றும் மற்றபொருட்கள் 26.31%.

WPI-யில் பயன்படுத்தப்படும் weights பின்வருமாறு: அடிப்படை பொருட்கள் (உணவு, கனிமங்கள்) 20.12%, எரிசக்தி, மின்சாரம் 14.91%, மற்றும் உற்பத்திப் பொருட்கள் 64.97%.

CPI கணக்கிட தேவைப்படும் நூற்றுக்கணக்கான பொருட்களின் விலைகள் 1,181 கிராமங்களிலும், 310 நகரங்களிலும் பெறப்படுகின்றன. அதேபோல் WPI கணக்கிட கிட்டத்தட்ட 5,482 பொருட்களின் விலைகள் பெறப்படுகின்றன. இவ்வாறு மிக நுணுக்கமான புள்ளிவிபர சேகரிப்பும், கணக்கிடும் முறைகளாலும் விலைக் குறியீடுகள் தயாரிக்கப்படுகின்றன.

பொதுவாக WPI குறியீட்டை விட அதிக அளவு விலையேற்றத்தை CPI குறியீடு காண்பிக்கும். இதற்கு முக்கியக் காரணம், மொத்த வியாபாரத்திற்கு பிறகு பல நிலைகளை கடந்து சில்லறை வியாபார விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அடுத்தடுத்த நிலைகளில் ஒரு பொருளுக்கு பல வழிகளில் மதிப்புக் கூட்டப்படுகிறது.

உதாரணமாக, மொத்த வியாபாரத்தில் வாங்கிய பொருட்களை சுத்தம் செய்து, சிறு சிறு அளவுகளில் பையில் அடைத்து, கிடங்குகளுக்கு வாடகைக் கொடுத்து அதில் சேமித்து, நமக்கு வேண்டிய போது பொருட்களைத் தரும் சில்லறை வியாபாரத்தில் விலைகள் அதிகமாக இருப்பதற்கு இந்த மதிப்பு கூட்டல் நடவடிக்கைகள்தான் காரணம். அதே நேரத்தில் பதுக்கல், குறுகியகால விலையேற்றம் என்பதையெல்லாம் தடுத்தல் அவசியம் என்பதையும் CPI, WPI குறியீடுகளுக்கு உள்ள வேறுபாடு உணர்த்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x