

பல வருடங்களுக்கு முன்பு வெளிநாடுகளுக்குச் சென்று நமது இந்தியர் பலர் செட்டிலாகி விட்டார்கள். அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் பொழுது இந்தியாவில் ரியல் எஸ்டேட் மதிப்பு மிகவும் சொற்பமாக இருந்தது. ஆனால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களே பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு இப்போது இந்தியாவில் விலைகள் உயர்ந்துள்ளன.
சம்பந்தபட்ட வெளிநாட்டு இந்தியரோ அல்லது அவர்களின் பெற்றோர்களோ அன்று வாங்கிய சொத்துக்களை விற்று, தாங்கள் வாழும் நாடுகளுக்கு டாலர்களில் எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள். அவ்வாறு எடுத்துச் செல்லும் பொழுது சில சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எடுத்துச் செல்ல வேண்டும்.
என்.ஆர்.ஐ ஒருவர் வெளிநாடுகளுக்கு பணத்தை விற்று எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் கீழ்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
விற்கும் சொத்துக்களை வாங்கிய பொழுது வெளிநாட்டிலிருந்து வங்கிக் கணக்குகள் (என்.ஆர். இ மற்றும் எஃப்.சி.என்.ஆர் கணக்குகள்) மூலமாக வாங்கியதாக இருக்க வேண்டும். சொத்துகளை விற்று வெளிநாட்டிற்கு எடுத்து செல்லப்படும் தொகை, வெளிநாட்டிலிருந்து சொத்துக்களை வாங்க கொண்டுவந்த தொகைக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். அதிகபட்சமாக இரண்டு சொத்துக்களை விற்று அவற்றிலிருந்து வரும் பணத்தைத்தான் வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியும்.
வெளிநாட்டிலிருந்து பணம் கொண்டு வராமல், இந்தியாவில் இந்திய ரூபாயில் வாங்கிய சொத்துக்களை விற்கும் பொழுது (மரபு வழியாக வந்த சொத்துக்கள் உட்பட), என்.ஆர்.ஐ/ பி.ஐ.ஓ ஒருவர் வருடத்திற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வரை வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லலாம். அவ்வாறு எடுத்துச் செல்லும் பொழுது சட்டப்படியான வருமானவரியை கட்டி இருப்பது அவசியம். மேலும் வங்கிகள் அப்பணத்தை வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லும் பொழுது ஆடிட்டர் சான்றிதழ் கேட்பார்கள்.
அதேபோல் வீடு வாங்குவதற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, பிறகு ரத்து ஆகிவிட்டால் அப்பணத்தையும் வட்டி உட்பட (வருமான வரி கழித்து) வெளிநாட்டிற்கு எடுத்து செல்லலாம் - அப்பணம் என்.ஆர்.ஈ எஃப்.சி.என்.ஆர் கணக்குகள் மூலமாக இந்தியாவிற்கு வந்திருந்தால் மட்டுமே!
பொருளாதாரத்தில் அதி வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவில், வேலை தொழில் நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்வதும், பிறகு இந்தியாவில் வந்து செட்டில் ஆவதும் சகஜமாகிவிட்டது. அவ்வாறு ஒருவர் வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் வந்து செட்டில் ஆகும் பொழுது, அவர்களுக்கு என்ன வசதிகள் உள்ளது என்பதைப் பார்ப்போம்.
என்.ஆர்.ஐ/ பி.ஐ.ஓ ஒருவர் வெளிநாட்டில் இருக்கும் பொழுது வெளிநாட்டு சம்பாத்தியத்தில் சேர்த்த சொத்துக்களை அவர் இந்தியாவில் வந்து செட்டிலாகிய பிறகும் தொடர்ந்து வெளிநாட்டிலேயே வைத்துக்கொள்ளலாம். மேலும், அம்முதலீடுகளை மாற்றவோ அதிலிருந்து வரும் வருமானத்தை மறுமுதலீடு செய்யவோ அவர் விருப்பம் போல செய்து கொள்ளலாம்.
வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் மூலம் வரும் வருமானத்தையும், விற்பதினால் வரும் பணவரத்தையும் அவர் வெளிநாட்டிலேயே வைத்துக் கொள்ளலாம். அவர் இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் கிடையாது.
விரும்பும் பொழுது எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இந்தியாவிற்கு கொண்டு வந்து கொள்ளலாம். வெளிநாட்டிலிருந்து என்.ஆர்.ஐ/ பி.ஐ.ஓ ஒருவர் இந்தியாவிற்கு செட்டிலாக வருபவர்கள் ஆர்.எஃப்.சி RFC (RESIDENT FOREIGN CURRENCY ACCOUNT) கணக்கை திறந்து கொள்ளலாம். அவர்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பும் பொழுது தங்களது எஃப்.சி.என்.ஆர் மற்றும் என்.ஆர்.ஈ கணக்குகளில் உள்ள தொகைகளை இக்கணக்கிற்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு.
வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை விற்பதினால் வரும் தொகைகளையும் இக்கணக்கில் செலுத்திக் கொள்ளலாம். ஆர்.எஃப்.சி (RFC) கணக்கில் உள்ள தொகையை வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பம் போல உபயோகித்துக் கொள்ளலாம். இக்கணக்குகளை சேமிப்புக் கணக்காக / நடப்புக் கணக்காக / வைப்பு நிதிக் கணக்காக திறந்து கொள்ளலாம்.
வரும் வாரத்தில் ஆர்.எஃப்.சி கணக்குகளைப் பற்றி இன்னும் விரிவாகக் காண்போம்.
சொக்கலிங்கம் பழனியப்பன் - prakala@gmail.com