

வோடபோன் தொலைத் தொடர்பு நிறுவனம் சென்னையில் 4ஜி நெட்வொர்க் சேவையை தொடங்கியுள்ளது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் 4ஜி நெட்வொர்க் அறிமுகத்தைத் தொடர்ந்து, சென்னையில் நேற்று செஸ் விளையாட்டு வீரர் விஸ் நாதன் ஆனந்த் வோடபோன் 4 ஜி சேவையை அறிமுகம் செய்தார். 2017 மார்ச் மாதத்துக்குள் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சேவை விரிவுபடுத்தப்படும் என்று வோடபோன் இந்தியா நிறுவனத்தின் தமிழ்நாடு தலைமை அதிகாரி எஸ். முரளி தெரிவித்தார்.
அறிமுகச் சலுகையாக வோட போன் 4 ஜி நெட்வொர்க்கிற்கு மாறும் வாடிக்கையாளர்களுக்கு 2ஜிபி டேட்டா இலவசமாக அளிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் உலகம் முழுவதும் 19 நாடுகளில் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்தியா 20 வது நாடு என்றும் முரளி கூறினார்.