

2,000 சிசி திறனுக்கு மேலான டீசல் கார்கள் மற்றும் எஸ்யுவி கார்களுக்கான பதிவை தொடங்குமாறு டெல்லி அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. புதிதாக விற்பனை செய்யப்படும் கார்கள் அதன் விற்பனை விலையில் ஒரு சதவீதத்தை சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரியாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் 2,000 சிசி திறனுக்கு மேலான டீசல் கார்கள் மற்றும் எஸ்யுவி ரக கார்கள் விற்பனை மீதிருந்த தடையை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 12-ம் தேதி நீக்கியது. மேலும் புதிதாக விற்பனை செய்யப்படும் கார்கள் அதன் விற்பனை விலையில் ஒரு சதவீதத்தை சுற்றுச்சூழல் பாது காப்பு வரியாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் டெல்லி அரசினுடைய போக்குவரத்து துறை இந்த உத்தரவை அனைத்து பிராந்திய போக்குவரத்து அதிகாரிகளுக்கும் அனுப்பியது. 2,000 சிசி திறனுக்கு மேலான டீசல் கார்களைப் பதிவு செய்யுமாறும், ஒரு சதவீத சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரி செலுத்தப்பட்டதை உறுதி செய்த பின்னரே பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் மெர்சிடஸ் பென்ஸ், டொயோடா, பிஎம்டபிள்யூ, ஆடி மற்றும் பிற சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் 2,000 சிசி திறனுக்கு மேலான டீசல் கார்களை விற்பதற்காக சூழல் உருவாகி உள்ளதாக இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.