

வால்மார்ட் - பார்தி நிறுவனங்கள் பிரிந்தன. இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தை தனித் தனியாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக கூட்டாக அறிவித்துள்ளன.
சில்லறை வர்த்தகத்தில் ஜாம்பவானான அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனமும், இந்தியாவின் பார்தி நிறுவனமும் இந்தியாவில் சில்லறை வர்த்தகம் மேற்கொள்ள 50க்கு 50 என்ற பங்கு கணக்கில் வியாபார ஒப்பந்தம் செய்திருந்தது. இந்நிலையில் இந்த இரு நிறுவங்களும் தங்கள் இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.
இது குறித்து பார்தி என்டர்பிரைசஸ் துணை தலைவரும், நிர்வாக இயக்குனருமான ராஜன் பார்தி கூறுகையில்: இந்தியா முழுவதும் உலகத்தரம் வாய்ந்த சில்லறை வர்த்தக கூடங்களை அமைப்பது தங்கள் நோக்கம் என்றும், ஏற்கெனவே நாடு முழுவதும் உள்ள பார்தியின் 212 கடைகள் மூலம் இது சாத்தியப்படும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
வால்மார்ட், பார்தியின் செடார் சப்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு முதலீடு செய்தது.சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு தொடர்பான விதிமுறைகளை மீறி, இம்முதலீடு செய்யப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.