

அரசியல் தலைவர்களுக்கும், கடவுள் சிலைகளுக்கும் பணத்தினால் தொடுக்கப்பட்ட பண மாலையைப் போடாதீர்கள் என பொதுமக்களை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
அரசியல் தலைவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது தொண்டர்கள், அவருக்கு கரன்சிகளால் தொடுக்கப்பட்ட மாலையை அளிப்பது நாட்டின் பல பகுதிகளிலும் வழக்கமாக உள்ளது. இதேபோல, கடவுள் சிலைகளுக்கு சில பக்தர்கள் பண மாலை போடுவது மற்றும் பந்தல் முழுவதும் பணத்தினால் ஜோடனை செய்யும் பழக்கம் உள்ளது.
இவ்வாறு செய்வதால் பணத்தின் ஆயுள்காலம் குறைகிறது. எனவே இத்தகைய நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே ஸ்டேப்ளர் போடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. மாலையாகக் கோர்க்கும்போது பணத்தில் துளையிடுவது தவிர்க்க முடியாததாகும். எனவே இதைத் தவிர்க்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
ஒரு நாட்டின் கரன்சி என்பது அது அந்நாட்டின் இறையாண்மையைக் குறிக்கும். பணத்தை இவ்விதம் செய்வதன் மூலம் இறையாண்மைக்கு இழுக்கு ஏற்படும் என்றும் ரிசர்வ் வங்கி சுட்டிக் காட்டியுள்ளது.