வங்கிக் கடன் மோசடி செய்த 7,000 பெரிய நிறுவனங்களின் பெயர்களை அம்பலப்படுத்துவோம்: ஏஐபிஇஏ எச்சரிக்கை

வங்கிக் கடன் மோசடி செய்த 7,000 பெரிய நிறுவனங்களின் பெயர்களை அம்பலப்படுத்துவோம்: ஏஐபிஇஏ எச்சரிக்கை
Updated on
1 min read

வங்கிக் கடன் மோசடி செய்துள்ள 7,000 பெரிய நிறுவனங்களின் பெயர்களை அம்பலப்படுத்துவோம் என்று அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

சுமார் 7,000 நிறுவனங்கள் சுமார் ரூ.70,000 கோடி வங்கிக் கடன் மோசடி செய்துள்ளனர். இந்த மோசடி மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலர் வெங்கடாச்சலம் தெரிவிக்கையில் ஜூலை 29-ம் தேதி 10 லட்சம் ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர் என்றார். அதாவது ‘மக்கள் விரோத’ வங்கி சீர்த்திருத்தங்களை எதிர்த்து ஸ்ட்ரைக் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

“வேண்டுமென்றே வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத மோசடியாளர்கள் ஏதோ ஒரு நோக்கத்திற்காக கடன் பெற்று பிறகு அதனை வேறொரு விதமாக துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இவ்வகையில் கடனைத் திருப்பிச் செலுத்தாத 7,000 பெரிய நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் வேண்டுமென்றே கொடுக்கக் கூடாது என்று இருப்பவர்கள். இவர்கள் மூலம் ரூ.70,000 கோடி நிலுவையில் உள்ளது. இன்னும் சில நாட்களில் அவர்கள் பெயர்களை வெளியிடுவோம்” என்றார் வெங்கடாச்சலம்.

மேலும், “அரசாங்கம் இவர்களிடம் மென்மையான போக்கைக் கடைபிடித்து வருகிறது. ஏன் இவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். இவர்கள் மீது சிவில் வழக்குகளே தொடரப்படுகின்றன. எனவே வேண்டுமென்றே வங்கிக் கடன் மோசடியில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம் என்று அரசு அறிவித்து அவர்களிடமிருந்து பணத்தை வசூலிக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களது சொத்துக்களை முடக்க வேண்டும்.

கடன் மோசடியை வாராக்கடன் என்பதன் கீழ் கொண்டு வருவது மக்களை ஏமாற்றும் ஒரு மோசடி வேலையாகும்.

வங்கித் துறையில் தனியார் வங்கிகளை நுழைய விடுதல் பொதுத்துறை வங்கிகளை முடக்கும் பலவீனமடையச் செய்யும் ஒரு முயற்சியாகும்” என்றார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in