

வட்டி குறைப்புக்கு ஆதரவாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசி இருக்கிறார். செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கட்டுமானத்துறையில் தேவை அதிகரிப்புக்கு வட்டி குறைப்பு தேவை என்று கூறியிருக்கிறார்.
ஆனால் ரிசர்வ் வங்கி பணவீக்கம் கட்டுக்குள் வரும் வரைக்கும் வட்டி விகிதத்தை குறைக்க முடியாது என்பதுபோல சமிக்ஞை தெரிவித்திருக்கிறது.
பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது, வேலை வாய்ப்பு களை உருவாக்குவது ஆகிய வாக்குறுதி அடிப்படையில் மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால் நிதி அமைச்சரின் முதல் பட்ஜெட்டில் பொருளாதார நிபுணர்கள் அதி ருப்தி அடைந்தார்கள்.
இந்த நிலையில், ’வளர்ச்சிக்கு வட்டி விகிதங்கள் தடையாக இருக்கிறது. மேலும், பணவீக்கம் குறைந்து வருகிறது. இந்த நேரத்தில் வட்டி குறைப்பை ஆரம்பிக்கலாம்’ என்று அருண் ஜேட்லி பேட்டியளித்துள்ளார்.
சில்லரை பணவீக்கம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக குறைந்து வருகிறது. இருந்தாலும், பருவ மழை குறைவு உள்ளிட்ட காரணங்களால் விலை ஏற்றம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் உடனடியாக வட்டி குறைப்பு இருக்க வாய்ப்பு இல்லை. கடந்த செப்டம்பரில் நுகர்வோர் பணவீக்கம் 6.46 சதவீதமாக இருந்தது. 2012 ஜனவரிக்கு பிறகு பணவீக்கம் குறைவது இப்போதுதான்.