

வேலை தேடி அலையும் இளைஞர்களுக்கு புத்தாண்டு புதிய நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த ஆண்டில் புதிதாக 8 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் ஊழியர்களின் சம்பளம் 20 சதவீத அளவுக்கு உயரும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பல்வேறு மனிதவள நிபுணர்களிடம் நடத்திய ஆய்வில், 2014-ம் ஆண்டில் புதிய வேலை வாய்ப்புகள் அதிகம் உருவாகும் என்றும், கடந்த 2013-ஐப் போல தொய்வோடு இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர். சர்வதேச பொருளாதாரத்தில் நிலவி வந்த தேக்க நிலை மாறிவரும் சூழலில் இந்தியாவில் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதற்கான சூழல் உருவாகியுள்ளதாக குளோபல் ஹன்ட் நிறுவனத் தலைவர் சுநீல் கோயல் தெரிவித்தார்.
2014-ம் ஆண்டில் 8.5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனியார் நிறுவனங்கள் வங்கிகள் தொடங்குவதற்கான லைசென்ஸ் அளிக்கப்பட விருப்பதும் வேலை வாய்ப்பு பெருக ஒரு காரணமாக அமையும் என்றே தோன்றுகிறது. தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், வேளாண் வர்த்தகம், கட்டமைப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளில் வளர்ச்சி ஏற்படுவதோடு வேலை வாய்ப்பும் பெருகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2013-ம் ஆண்டு வேலை தேடுவோருக்கு உகந்த ஆண்டாக அமையவில்லை. பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை, அரசியலில் ஸ்திரமற்ற நிலை ஆகியனவும் வேலை தேடுவோருக்குச் சாதகமாக அமையவில்லை. 2014-ல் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு உருவாவதற்கான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று மை-ஹயரிங் கிளப் டாட் காம் நிறுவனம் மற்றும் பிளிப் ஜாப் டாட் காம் நிறுவன தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் குமார் தெரிவித்தார்.
ஏற்கெனவே பணியில் உள்ளவர்களுக்கு சராசரியாக ஒற்றை இலக்கத்தில்தான் சம்பள உயர்வு கடந்த ஆண்டு இருந்தது. 2014-ல் சம்பள உயர்வு இரட்டை இலக்கத்தில் இருக்கும். குறைந்தபட்சம் 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதம் வரை இருக்கும். அத்துடன் ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்றியமைத்து பல்வேறு சலுகைகளை நிறுவனங்கள் அளிக்க முன்வரும் என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
சேவைத் துறை, சுரங்கம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் அதிக அளவில் பணியில் ஈடுபடுத்துவதற்கான ஊழியர்கள் தேவைப்படுவர். இத்துறைகளில் 12 சதவீத அளவுக்கு ஊதிய உயர்வு இருக்கும் என்று சேஞ்ச் யுவர் ஜாப் டாட் காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூபேந்திர மேத்தா தெரிவித்தார்.
புதிதாக மத்தியில் பொறுப்பேற்க உள்ள அரசு நிச்யம் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை எட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடும். இதன் விளைவாக அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பு பெருகும். குறைந்த பட்சம் 5 சதவீதமும், சிறப்பாக பணியாற்றுவோருக்கு 10 சதவீதம் முதல் 20 சதவீத அளவுக்கு ஊதிய உயர்வு இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.