

ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்த இருக்கும் சூழ்நிலை யில், ஜிஎஸ்டி கவுன்சிலின் இறுதி கூட்டம் இன்று நடக்க இருக்கிறது. இதில் சில பொருட்கள் மற்றும் சேவைகளின் வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும் என தெரிகிறது. ஏற்கெனவே அறிவிக்கப் பட்ட ஜிஎஸ்டி விகிதங்களில், சம்பந்தப்பட்ட துறைகளின் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் முதல் கூட்டம் கூடியது. இன்று நடைபெற இருப்பது ஜிஎஸ்டி கவுன்சிலின் 16-வது கூட்டமாகும். அநேகமாக ஜிஎஸ்டி கவுன்சிலின் கடைசி கூட்டமாக இது இருக்கக் கூடும்.
தற்போதைய வரி விகிதத்தை விட ஜிஎஸ்டியில் அதிக வரி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக பல துறைகளின் தலைவர்கள் புகார் தெரிவித்திருக்கின்றனர். ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை ஹைபிரிட் கார்களுக்கு தற்போது 30.30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ஆனால் ஜிஎஸ்டியில் 43 சதவீத வரி பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோல தொலைத் தொடர்புத் துறைக்கு ஜிஎஸ்டியில் 18 சதவீத வரிக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இந்த விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கைகள் எழுந்திருக் கின்றன. இந்த விகிதத்தை குறைக்க வேண்டும் என வருவாய் துறை செயலாளருக்கு சிஓஏஐ கடிதம் எழுதி இருக்கிறது.
அனைத்து வகையான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 5,12,18 மற்றும் 28 சதவீத வரி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் தங்கத்துக்கு 3 சதவீத வரி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.