

பிரிட்டனின் எண்ணெய் அகழ்வு நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் ரூ. 37,587 கோடி (560 கோடி டாலர்) நஷ்ட ஈடு கேட்டு மத்திய அரசு மீது சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
சர்வதேச தீர்ப்பாயத்தில் 160 பக்க இழப்பீட்டு மனுவை கடந்த ஜூன் 28-ம் தேதி தாக்கல் செய்தது. இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ர்ன் இந்தியா நிறுவனம் மீது விதிக்கப்பட்ட வரி விதிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா மீறிவிட்டது என்று அறிவிக்குமாறும் தனது மனுவில் கெய்ர்ன் எனர்ஜி சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த வழக்கை ஜெனீவாவைச் சேர்ந்த நடுவர் லாரென் லெவி தலைமையிலான மூவர் குழு விசாரிக்கிறது
கெய்ர்ன் இந்தியா நிறுவனம் மீது வருமான வரித்துறையினர் 2014-ம் ஆண்டு முன் தேதியிட்டு வரி விதிப்பு நோட்டீஸ் அனுப்பியதால் சர்வதேச சந்தையில் பட்டியலிட்டிருந்த தாய் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜியின் பங்குகள் கடுமையாக சரிந்தன. பங்குச் சந்தை மதிப்பீல் 9.8 சதவீதம் சரிந்தது. இதற்காக 105 கோடி டாலர் இழப்பீடு அளிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
முதலீட்டு ஒப்பந்தத்தை மீறியதற்காக கெய்ர்ன் இந்தியா நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பீடு உள்ளிட்டவற்றை சேர்த்து மொத்தம் ரூ. 37,400 கோடி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
மொத்த இழப்பீட்டுத் தொகையானது கெய்ர்ன் இந்தியா நிறுவனம் மீது விதிக்கப்பட்ட வரித் தொகைக்கு இணையானது. இதே அளவு மதிப்புள்ள 9.8 சதவீத பங்குகளை கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தில் கெய்ர்ன் எனர்ஜி வைத்துள்ளது.
இந்த மனுவுக்கு விளக்கமளிக்கும் பதில் மனுவை மத்திய அரசு நவம்பர் மாதத்தில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான விவாதம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என தெரிகிறது.
2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறை ரூ. 10,247 கோடி வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியது. கெய்ர்ன் இந்தியா பங்குகளை மாற்றியதன் மூலம் மூலதன ஆதாயம் அடைந்ததாக கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
2011-ம் ஆண்டு கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தின் பெரும் பாலான பங்குகளை வேதாந்தா குழும நிறுவனத்திடம் கெய்ர்ன் எனர்ஜி விற்றுவிட்டது. இருப்பினும் தற்போது அந்நிறுவனம் வசம் 9.8 சதவீத பங்குகள் உள்ளன. இந்த பங்குகளை வருமான வரித்துறை முடக்கி வைத்துள்ளது.
இந்த ஆண்டு மீண்டும் வரித்துறை அனுப்பிய நோட்டீஸில் ரூ. 18,800 கோடி தொகையை வட்டியுடன் செலுத்துமாறு கூறப் பட்டிருந்தது.