

ஓரியண்டல் வங்கி லாபம் 16% சரிவு
பொதுத்துறை வங்கியான ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கி செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 251.41 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபத்தை விட 16.8 சதவீதம் குறை வாகும். முந்தைய ஆண்டு இதேகாலத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 302.19 கோடியாகும். வங்கியின் மொத்த வருமானம் காலாண்டில் ரூ. 4,987.71 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு வங்கி ஈட்டிய மொத்த வருமானம் ரூ.. 4,821.37 கோடியாகும். வங்கியின் மூலதனத்தை அதிகரிக்க அரசு சமீபத்தில் ரூ.. 150 கோடி அளித்துள்ளது.
வங்கியின் நிகர வாராக் கடன் 3.77 சதவீதமாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 2.92 சதவீத அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை வர்த்தகத்தின் முடிவில் 4 சதவிகிதத்துக்கு மேல் சரிந்து 153 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
லுபின் லாபம் 40% உயர்வு
மருந்துப் பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள லுபின் நிறுவனம் செப்டம்பரில் முடிவ டைந்த காலாண்டில் ரூ. 406.20 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபத்தைவிட இப்போது 40 சதவீதம் அதிகரித்துள்ளது.முந்தைய ஆண்டு நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 290.50 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் விற்பனை வருமானம் ரூ. 2,631.50 கோடியாகும். முந்தைய ஆண்டைக் காட்டிலும் வருமானம் 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சந்தையில் நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனை வருமானம் ரூ. 1,108.90 கோடியாகும். அமெரிக்கச் சந்தையில் இந்நிறுவனம் 57 தயாரிப்புளை விற்பனை செய்து வருகிறது. ஜப்பானில் இந்நிறுவனத் தயாரிப்பு விற்பனை வருமானம் 12 சதவீதம் அதிகரித்து ரூ. 309 கோடியைத் தொட்டுள்ளது.
பங்குச்சந்தை வர்த்தகத்தின் முடிவில் 1 சதவிகிதம் உயர்ந்து 902 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது.
ஹேவல்ஸ் இந்தியா லாபம் 45% உயர்வு
மின்சாதனப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஹேவல்ஸ் இந்தியாவின் செப்டம்பர் காலாண்டு நிகரலாபம் 45 சதவிகிதம் உயர்ந்து ரூ. 125.72 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் ரூ. 86.97 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் விற்பனையும் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடச் செப்டம்பர் காலாண்டில் ரூ. 958.12 கோடியாக இருந்த நிறுவனத்தின் வருமானம் இந்த வருடம் ரூ..1,166.05 கோடியாக உயர்ந்திருக்கிறது.
புதிய பொருட்கள் வருமானத்தை உயர்த்தியதாக ஹேவல்ஸ் இந்தியாவின் துணை நிர்வாக இயக்குனர் அனில்ராஜ் குப்தா தெரிவித்தார். மேலும் தற்போதைய பொருளாதார நிலையிலும் கூட எங்களுடைய அனைத்துப் பிஸினஸ்களும் நன்றாக இருப்பதாகவும், இந்த நிலையை வருடம் முழுவதும் தொடர இருப்பதாகவும் குப்தா கூறினார். வர்த்தகத்தின் முடிவில் 7 சதவிகிதம் உயர்ந்து 750 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தின் முடிந்தது.
பார்தி ஏர்டெல் நிகரலாபம் 29% சரிவு
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல்லின் செப்டம்பர் காலாண்டு நிகரலாபம் 29 சதவிகிதம் குறைந்து ரூ..512 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் ரூ. 721 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. லாபம் சரிந்ததற்கு ரூபாய் மதிப்பு சரிவினை காரணமாக சொல்லி இருக்கிறது ஏர்டெல் நிர்வாகம்.
அதே சமயத்தில் மொத்த வருமானம் 10% உயர்ந்திருக்கிறது. குறிப்பாக மொபைல் போன்களின் மூலம் இணையம் பயன்படுத்துபவர்களால் கிடைக்கும் வருமானம் 100 சதவிகிதத்துக்கு மேல் அதிகமாக இருக்கிறது.
ஆப்ரிக்க நாடுகளின் வருமானம் அதிகரித்திருக்கிறது. அங்கு நிறுவனம் வளர இன்னும் நிறைய வாய்ப்பு இருப்பதாக நிறுவனத்தின் தலைவர் சுநீல் பார்தி மிட்டல் தெரிவித்தார். வர்த்தகத்தின் முடிவில் 5 சதவிகிதம் உயர்ந்து 360 ரூபாயில் முடிந்தது.
பேட்டா இந்தியா லாபம் 17% உயர்வு
காலணி தயாரிப்பில் ஈடுப்பட்டிருக்கும் முன்னணி நிறுவனமான பேட்டாவின் செப்டம்பர் காலாண்டு நிகரலாபம் 17 சதவிகிதம் உயர்ந்து ரூ 37 கோடியாக இருக்கிறது. கடந்த வருடத்தின் இதே காலாண்டின் லாபம் ரூ 32 கோடி மட்டும். செப்டம்பர் காலாண்டின் நிகர விற்பனையும் 14 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருட செப்டம்பர் காலாண்டில் 423 கோடியாக இருந்த விற்பனை இப்போது ரூ 484 கோடியாக இருக்கிறது.
வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து கொண்ட தால் மட்டுமே, கடந்த சில வருடங்களாக நல்ல வளர்ச்சியை பெற்று வந்திருக்கிறோம் என்று பேட்டாவின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் கோபால கிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் புதுப்புது டிசைன்களும் விற்பனை அதிகரிக்க ஒரு காரணம் என்று சொன்னார். இருந்தாலும் வர்த்தகத்தின் முடிவில் சிறிதளவு சரிந்து 887 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.