

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்த மத்திய அரசு கூடுதல் நேரம் செயல் படுகிறது என்று மத்திய அமைச் சரவைச் செயலர் பி.கே.சின்ஹா தெரிவித்தார். இப்புதிய வரி விதிப்பு முறை அடுத்த நிதி ஆண்டு தொடக்கத்தில் (ஏப்ரல் 1) அமல்படுத்தப்பட உள்ளது.
வரி விதிப்பு முறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக ஜிஎஸ்டி இருக்கும். நாடு சுதந்திரமடைந்த பிறகு வரி விதிப்பில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும். இது ஏப்ரல் 1, 2017 முதல் அமல்படுத்துவதற்காக அரசு அதிகாரிகள் கூடுதல் நேரம் செயலாற்றி வருகின்றனர் என்றார். பஞ்சாப், ஹரியாணா, டெல்லி, சண்டீகர் தொழில் வர்த்தக சபை (பிஹெச்டிசிசிஐ) ஏற்பாடு செய்திருந்த மாநில தலைமைச் செயலாளர்கள் பங்கேற்ற மாநாட்டில் பேசிய அவர் மேலும் கூறியது: புதிய வரி விதிப்பு முறை அமலாக்கத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற்படக் கூடாது என்பதில் அரசு மிகுந்த கவனமுடன் உள்ளது. அடுத்த நிதி ஆண்டின் இடையில் இதில் எவ்வித மாறுதலும் செய்ய வேண்டிய சூழல் உருவாகக் கூடாது என்பதற்காக அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
மத்திய அரசு மக்களுக்கு அளித்த உறுதியின்படி ஜிஎஸ்டி மிகச் சிறந்த வரிச் சீர்திருத்த மாகும். சில ஆரம்பகட்ட பிரச் சினைகள் இருந்தபோதிலும் மிகவும் மவுனமான புரட்சி செயல் பாட்டுக்கு வர உள்ளது. அரசு நிர்ணயித்த வளர்ச்சி இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்துத் துறையிலும் வளர்ச்சி மற்றும் மக்களின் பங்கேற்பு உள்ளிட்டவை சிறந்த நிர்வாகத்தின் அடையாளங்கள் என்று சின்ஹா சுட்டிக் காட்டினார்.