

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் ஊக்க நடவடிக்கைகளை குறைத்ததால் வியாழக்கிழமை இந்திய சந்தைகள் சரிந்தது. இருந்தாலும் வெள்ளிக்கிழமை இந்திய சந்தைகள் உயர்ந்து. குறிப்பாக சந்தையின் வர்த்தகம் முடிகிற நேரத்தில் ஏற்றம் அதிகமாக இருந்தது.
ஃபெடரல் ரிசர்வ் 10 பில்லியன் டாலர்கள் அளவுக்கு ஊக்க நடவடிக்கைகளை குறைத்தாலும் வியாழக்கிழமை ரூ.2,000 கோடிக்கு மேல் அன்னிய முதலீடு இந்திய சந்தைக்குள் வந்தது. அதாவது ஊக்க நடவடிக்கைகளை குறைப்பதற்கும், அன்னிய முதலீட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல முதலீட்டாளர்கள் முடிவு செய்ததால் சந்தை உயர்ந்தது.
மேலும் ஐக்கிய நாடுகள் சபை உலகப்பொருளாதாரத்தை விட இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று சொன்னது, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக எரிவாயு விலையை மத்திய அமைச்சரவை உயர்த்தியது உள்ளிட்டவை சந்தையின் ஏற்றத்துக்கு காரணமாக இருந்தது.
கூடவே ஐ.டி. துறை பங்குகளும் உயர்ந்ததால் ஒட்டுமொத்த குறியீடும் அதிகரித்தது.
வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 371 புள்ளிகள் உயர்ந்து 21079 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 107 புள்ளிகள் உயர்ந்து 6274 புள்ளிகளில் முடிவடைந்தது.
கன்ஸ்யூமர் டியூரபிள் துறையை தவிர மற்ற அனைத்து துறை பங்குகள் ஏற்றத்தில் முடிவடைந்தன. குறிப்பாக ஆயில் அண்ட் கேஸ், ரியால்டி, ஆட்டோ மற்றும் வங்கித்துறை பங்குகள் பங்குச்சந்தையின் ஏற்றத்துக்கு காரணமாக இருந்தன.
ரிலையன்ஸ், ஓ.என்.ஜி.சி., விப்ரோ, எம் அண்ட் எம் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. ஆகிய பங்குகள் சென்செக்ஸ் பங்குகளில் அதிகம் உயர்ந்தவையாகும். சேசா ஸ்டெர்லைட், சன்பார்மா, ஜிண்டால் ஸ்டீல் ஆகிய பங்குகள் மட்டும்தான் சென்செக்ஸ் குறியீட்டில் வெள்ளிக்கிழமை சரிவடைந்த பங்குகள் ஆகும்.
இன்ஃபோஸிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா ஆகிய ஐ.டி. துறை பங்குகள் 52 வார உச்சபட்ச விலையை வெள்ளிக்கிழமை தொட்டன.