

டிசிஎஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 9.9% உயர்ந்து ரூ.6,317 கோடியாக இருக் கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.5,747 கோடியாக நிகர லாபம் இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருமானம் 14.2% உயர்ந்து ரூ.29,305 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.25,668 கோடியாக இருந்தது.
கிளவுட், பிக் டேட்டா மற்றும் அனல்டிக்ஸ் ஆகிய துறைகளில் எங்களுடைய செயல்பாடுகள் சிறப் பாக இருந்தது. இதுவரை நாங்கள் செய்த முதலீடுகள் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளன என நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி என். சந்திரசேகரன் தெரிவித்தார்.
நிறுவனத்தின் மொத்த வருமா னத்தில் டிஜிட்டல் பிரிவு வருமானம் 15.9 சதவீதமாக இருக்கிறது. புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப 1.65 லட்சம் பணியாளர்களுக்கு டிசிஎஸ் பயிற்சி அளித்துள்ளது. பணியாளர்கள் வெளியேறும் விகிதம் 12.5 சதவீதமாக இருக்கிறது. பல காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த விகிதம் குறைந்திருக்கிறது.
டிசிஎஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு லாப வரம்பு 25.1 சதவீதமாக உள்ளது. ஒரு பங்குக்கு 6.5 ரூபாய் டிவிடெண்ட் வழங்கப்பட்டுள்ளது.