

புத்தம் புதிதாக எதையாவது செய்யும்போது, நான்கு பேர் விமர்சிப்பார்கள் அல்லது கேலி செய்வார்கள். இந்த விமர்சனங்களை, கேலிகளைத் தடைக்கற்களாக நினைக்காமல், நாம் போகும் பாதை சரிதானா என்று சுயமதிப்பீடு செய்யப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். - ஆரன் மாண்ட்கோமரி வார்டின் கொள்கை
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகரத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பீமநகரி கிராமம். இங்கே வசிக்கும் லட்சுமணனுக்கு செல்போன் வாங்கவேண்டும். முன்பெல்லாம் டூ வீலரை எடுத்துக்கொண்டு நகரத்துக்கு பறப்பார். கடை கடையாகத் தேடுவார். இப்போது தன் மொபைலில் உள்ள பிளிப்கார்ட் செயலியில் நுழைகிறார். சில தேடல்கள். பல மாடல்கள். பிடித்த மாடலை வாங்குகிறார். பத்தே நிமிடங்களில் வேலை செம எளிதாக முடிந்துவிட்டது.
அமேசான், பிளிப்கார்ட், ஜபாங், ஸ்நாப்டீல், ஈ பே ஆகிய நிறுவனங்கள் கிராமப் புறங்களிலும் பரிச்சயமான, பிரபலமான விற்பனைத் தளங்களாகிவிட்டன. இந்தியாவில் ஈ காமர்ஸ் எனப்படும் இணையதள விற்பனை 2015 இல் 2,300 கோடி டாலர்களாக இருந்தது. இந்த வருடம் 67 சதவீத வளர்ச்சியடைந்து 3,800 கோடி டாலர்களை தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வளரும் என்று சொல்கிறார்கள்.
ஜூலை 16, 1995 - இல் ஜெஃப் பெஸோஸ் தொடங்கிய அமேசான் இணையதளம்தான் இகாமர்ஸின் ஆரம்பம். அதற்கு முன்னோடியாக இருந்தது தபால் அஞ்சல் முறை பிசினஸ் (Mail Order Business).
நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புப் பொருள்களின் படங்கள், விவரங்கள், விலை ஆகியவற்றை விலாவாரியாகச் சொல்லும் கேட்டலாக்கை இலவசமாக விநியோகிப்பார்கள். அதைப் பார்க்கும் வாடிக்கையாளர்கள் தமக்குத் தேவையான பொருட்களைத் தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்வார்கள். தபால்காரர் பொருட்களை வீட்டுக்குக் கொண்டுவருவார். அப்போது அவரிடம் பணம் தரவேண்டும்.
இந்த மெயில் ஆர்டர் தொழிலை முதன் முதலில் தொடங்கியவர் ஆரன் மாண்ட்கோமரி வார்ட். அந்த நிறுவனம், 1872 இல் அவர் ஆரம்பித்த மாண்ட்கோமரி அன்ட் கம்பெனி.
மாண்ட்கோமரி வார்ட் 1844 இல், அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகருக்கு அருகே இருக்கும் சாத்தம் என்னும் ஊரில் பிறந்தார். நடுத்தர வசதிகள் கொண்ட குடும்பம். 14 வயதுவரை படிப்பு. முதலில், மரப் பீப்பாய்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைக்குப் போனார். அடுத்து, ஒரு சூளையில் செங்கற்களை அடுக்கிவைக்கும் வேலை. இவை இரண்டும் அவருக்குப் பிடிக்கவேயில்லை. ஷூக்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலைக்குச் சேர்ந்தார். ஊர் ஊராகப் போவது, சில்லறைக் கடைக்காரர்களைச் சந்திப்பது, பேசித் திருப்திப்படுத்தி ஆர்டர் வாங்குவது ஆகியவை அவருக்கு மிகவும் பிடித்தன.
21 ஆம் வயதில் சிகாகோ நகரத்துக்குப் போனார். பிரிட்ஜ்கள் 1913 ம் ஆண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டன. ஆகவே, 1865 காலகட்டத்தில் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உலரவைத்து விற்பது முக்கிய தொழிலாக இருந்தது. ஒரு பெரிய பழத்தோட்டத்தில் தனக்குப் பிடித்தமான விற்பனையாளர் வேலையில் சேர்ந்தார். சிகாகோ நகருக்கு அருகாமைக் கிராமங்களுக்குப் போகவேண்டும். சில்லறைக் கடைக்காரர்களிடம் ஆர்டர் வாங்கவேண்டும். போனோம், ஆர்டர் வாங்கினோம், திரும்பி வந்தோம் என்கிற ஆளில்லை மாண்ட்கோமரி வார்ட். புதிய விஷயங்களைத் தெர்ந்துகொள்ளும் ஆர்வம் அதிகம். தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களை உன்னிப்பாகக் கவனிப்பார். கடைக்காரர்களோடும், அங்கே வரும் வாடிக்கையாளர்களோடும் பேசுவார். ஊர் நிலவரங்கள், அவர்களுடைய குறைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுவார்.
கிராமப்புற மக்கள் நகரத்துக்கு அபூர்வமாகத்தான் பயணம் செய்தார்கள். அங்கே கிடைக்கும் ஏராளமான பொருட்களை வாங்க ஆசைப்பட்டார்கள். இந்தப் பொருட்கள் உள்ளூர் கடைகளுக்கு வந்துசேரும் வரை பல இடைத்தரகர்கள், இவர்கள் ஒவ்வொருவரும் எடுத்துக்கொண்ட கமிஷன். சில்லறைக் கடைக்காரர்கள் அடித்த கொள்ளை லாபம். இவற்றால், பொருட்களின் விலை நகரத்தைவிடக் கிராமங்களில் மிக அதிகமாக இருந்தது.
இடைத்தரகர்கள் இல்லாமல் தயாரிப் பாளர்களிடமிருந்து தயாரிப்புப் பொருட்களைக் கிராமத்து வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகக்கொண்டு சேர்த்தால், வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலை தர முடியும். இதை தொழிலாக நடத்தி தான் எப்படி லாபம் பார்க்கலாம் என்று மாண்ட்கோமரி வார்ட் சிந்தித்தார். தன் ஐடியாவைப் பல நண்பர்களோடும், தொழில் சகாக்களோடும் விவாதித்தார். ஒருவர்கூட ஊக்கம் தரவில்லை. எல்லோருடைய ஏகோபித்த கருத்தும் ஒன்றேதான், ``இது பைத்தியக்காரத்தனமான திட்டம். ஒர்க் அவுட் ஆகாது.”
மாண்ட்கோமரி வார்ட் தயங்கவில்லை, பயப்படவில்லை. துணிந்து செயலில் குதித்தார். மாண்ட்கோமரி வார்ட் அண்ட் கம்பெனி என்று தன் பெயரையே நிறுவனத்துக்கு வைத்தார். முதலில், தனக்குப் பரிச்சயமான பொருட்களைத் தேர்ந்தெடுத்தார்.
பழத் தோட்டங்களிலிருந்து உலர்ந்த காய்கள், பழங்களைக் குறைந்த விலைக்கு வாங்கினார். இவற்றின் விவரம், விலை ஆகியவை கொண்ட பட்டியல் போட்டார். இந்தப் பட்டியலைக் கிராமங்களில் விநியோகம் செய்தார். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை முன்பணம் தந்து ஆர்டர் செய்யவேண்டும். பொருட்களை அவர்களின் ஊரில் இருக்கும் ரெயில் நிலையங்களுக்குப் பார்சல் அனுப்புவார்.
தான் தொடங்கியிருப்பது வாடிக்கை யாளர்களுக்குப் பழக்கமில்லாத வாங்குதல் முறை, ஆகவே மக்களுக்கு இந்த தொழில்மேல் நம்பிக்கை வரவேண்டும். அதற்குப் பிறகுதான், மெதுவாக தொழில் சூடு பிடிக்கும் என்று மாண்ட்கோமரி வார்டுக்குத் தெரியும். ஆகவே, பொறுமையாக தொழிலை வளர்த்தார்.
வந்தது முதல் சறுக்கல். அவருடைய சரக்குக் கிடங்கில் தீ பிடித்தது. பொருட்கள் அத்தனையும் சாம்பலாயின. இந்த நெருப்பும், நஷ்டமும், மாண்ட்கோமரி வார்டின் தொழில் கனவுகளை அணைக்கவில்லை, இன்னும் தீவிரமாகக் கொழுந்துவிட்டு எரியச் செய்தன. இனிமேல் மெயில் ஆர்டர்தான் தன் எதிர்காலம் என்னும் தளராத உறுதி. உலர்ந்த காய்கறிகள், பழங்களோடு கிராம மக்கள் விரும்பும் 163 ஐட்டங்கள். இவற்றின் விவரங்கள், விலைகளைப் பட்டியலிட்டு, உலகின் முதல் கேட்டலாக் 1872 ல் தயாரானது.
வியாபாரம் வளரத் தொடங்கியது. கிராமங்களின் கடைக்காரர்களுக்குப் பயம் வந்தது. மாண்ட்கோமரி வார்டின் கேட்லாக்குகள் தங்கள் ஊர்களுக்கு வரும் முன்னால், அவற்றைக் கைப்பற்றினார்கள், கிழித்துப் போட்டார்கள், எரித்தார்கள். ஆனால், இந்தச் சதிகளையும் மீறி, நாளடைவில் மக்கள் ஆதரவு பெருகியது. அடுத்த 30 வருடங்களில், கேட்லாக்கில் பல நூறு பக்கங்கள், 20,000 தயாரிப்புப் பொருட்கள். 30 லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டு விநியோகமாயின. வியாபாரம் எக்கச்செக்கமாக வளர்ந்தது.
ஸீயர்ஸ், ரோபக் போன்ற பெரிய கடை வியாபாரிகள் மெயில் ஆர்டர் தொழிலின் வளர்ச்சியைப் பார்த்தார்கள். தாங்களும் கேட்டலாக் வழியில் தொழிலில் இறங்கினார்கள். ஆனால், 1913 இல், தன் 89 - ஆம் வயதில் மறைவதுவரை உலக மெயில் ஆர்டர் பிசினஸ் கிங் மாண்ட்கோமரி வார்ட்தான்.
மாண்ட்கோமரியின் வாரிசுகள் மெயில் ஆர்டரோடு, கடைகளும் திறந்தார்கள் இவை எடுபடாமல் போனதும், 2000 த்தில் கம்பெனி திவாலானதும், தற்போது புது நிர்வாகத்தில் தொடர்வதும், இன்னொரு பெரிய கதை.
slvmoorthy@gmail.com