வர்த்தக நிலையங்கள் 24 மணி நேரம் செயல்பட அனுமதி: சில்லரை வர்த்தக வேலைவாய்ப்பு 50% உயரும்- தொழில் துறையினர் கருத்து

வர்த்தக நிலையங்கள் 24 மணி நேரம் செயல்பட அனுமதி: சில்லரை வர்த்தக வேலைவாய்ப்பு 50% உயரும்- தொழில் துறையினர் கருத்து
Updated on
1 min read

வர்த்தக நிலையங்கள் 24 மணி நேர மும் இயங்க அனுமதிக்கும் சட்டத் தின் மூலம் சில்லரை வர்த்தகத் துறையில் வேலைவாய்ப்புகள் 50% உயரும் என்று தொழில்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். வேலை வாய்ப்பை ஊக்குவிக்கும் விதமாக 24 மணி நேரமும் கடைகள், திரை யரங்குகள் இயங்க அனுமதிக்கும் மாதிரி சட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வல்லுநர்கள் இந்த அனுமதியின் மூலம் குறுகிய காலத்தில் சில்லரை வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம், சேவைத் துறைகளில் 10 சதவீத வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று குறிப்பிட்டுள்ளனர். பெண் பணியாளர்கள் இரவு நேரங்களில் வேலை பார்ப்பதற்கு ஏற்ப நிறுவனங்கள் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது. வேலைவாய்ப்புகளில் பாலின பேதத்தை குறைப்பதற்கான அடுத்த கட்ட நகர்வாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சட்டத்தின் மூலம் சில்லரை வர்த்தகம் மற்றும் மருத்துவ துறை கள் உடனடியாக நேரடி பயனடை யும் என்று ராண்ட்ஸ்டாண்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான மூர்த்தி கே.உப்பலூரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டத்தின் மூலம் சில் லரை வர்த்தகத் துறையில் வேலை வாய்ப்புகள் 50% அதிகரிக்கும் என்று இந்திய சில்லரை வர்த்தகர்கள் கூட்டமைப்பின் சிஇஓ குமார் ராஜகோபாலன் கூறியுள்ளார். மேலும் தற்போது இந்த துறையில் 4 கோடியாக உள்ள வேலைவாய்ப்பு 2020 ஆம் ஆண்டுக்குள் 6 கோடியாக உயரும் என்றும், இந்த புதிய மாதிரி சட்டம் விரிவான சில்லரை வர்த்தக கொள்கையை கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டத்தின் மூலம் சில்லரை வர்த்தக துறையில் பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். குறிப்பாக இந்தியாவில் தொழில்துறை 92 சதவீதம் பாரம்பரிய முறையில்தான் இயங்கிறது. இதனால் பாலின பாகுபாகு விகிதமும் அதிகம். இந்திய சில்லரை வர்த்தக துறையில் தற்போது பெண்களின் விகிதாச்சாரம் 20-23 சதவீதம்தான். இந்த மாதிரி சட்டத்தின் மூலம் சர்வதேச அளவிலான விகிதாச்சாரத்தை நோக்கி செல்ல வழி வகுக்கும் என்றும் ராஜகோபாலன் கூறியுள்ளார்.

இந்த சட்டத்தை மாநிலங்கள் அமல்படுத்துவதன் மூலம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான மனித வள கொள்கையும், வேலையை விட்டு நிற்பதற்கான கொள்கையும் நிறுவனங்கள் செயல்படுத்த வழி ஏற்பட்டுள்ளது என்று சட்ட ஆலோசனை நிறுவனமான நிஷித் தேசாய் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் மனித வள தலைவர் விக்ரம் சரோஃப் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு இரவு 9 மணிக்கு பிறகு அல்லது ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் சேவை வழங்க முடியும் என்று டீம்லீஸ் நிறுவனத்தின் உதவி துணைத் தலைவர் சோனல் அரோரா குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in