

பால் பொருள் உற்பத்தியில் முன்னணியில் திகழும் அமுல் நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.2,500 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 20 சதவீத வளர்ச்சியை எட்டவும் உத்தேசித்துள்ளது. குஜராத் கூட் டுறவு பால் விற்பனை சம்மேளன லிமிடெட் (ஜிசிஎம்எம்எப்) நிறு வனத் தயாரிப்புதான் அமுல் என்ற பிராண்டுப் பெயரில் வெளியாகிறது.
மாநிலத்தில் உள்ள பால் பதனிடும் ஆலையின் திறனை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் 2018-19-ம் நிதி ஆண்டில் ஹிந்துஸ்தான் யுனி லீவர் நிறுவனத்தை விட அதிக சந்தையைக் கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் 20 சதவீத வளர்ச்சியை எட்டவும் இதன் மூலம் 2018-19-ம் நிதி ஆண்டில் ஹிந்துஸ்தான் யுனிலீவரை விட அதிக சந்தையைக் கொண்ட நிறுவனமாக வளரவும் இலக்கு நிர்ணயித்துள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ். சோதி தெரிவித்தார்.
20 சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டுமெனில் குஜராத் மாநிலம் தவிர பிற பகுதிகளில் சந்தையை விரிவுபடுத்தியாக வேண்டும். தற்போது நாளொன்றுக்கு 200 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 15 சதவீதம் குஜராத் மாநிலத்துக்கு வெளியே பிற பகுதிகளிலிருந்து பெறப்படுகிறது. அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய 14 சதவீத அளவுக்கு கூடுதலாக பாலைக்கொள்முதல் செய்ய வேண்டிய தேவை இருப்பதாக சோதி குறிப்பிட்டார்.
ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மேற்குவங்காளம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் பால் கொள்முதல் செய்யப்படு வதாகக் குறிப்பிட்ட அவர், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களி லிருந்தும் பாலைக் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.
விரைவிலேயே தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆண்டுக்கு ரூ.800 கோடி வீதம் பால் பதனிடும் ஆலை அமைக்க முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பிற மாநிலங்களில் ஆலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
2016-17-ம் நிதி ஆண்டில் இந்நிறுவனம் ரூ.27,085 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளது. முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 18 சதவீதம் கூடுதல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் நிறுவனத்தின் வருமானம் ரூ.22,972 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிறுவனம் ஆண்டுதோறும் 19 சதவீத வளர்ச்சியை கடந்த 7 ஆண்டுகளாக எட்டி வருவதாக குறிப்பிட்ட அவர், இதற்கு முக்கியக் காரணமே அதிக அளவில் பால் கொள்முதல் செய்யப்படுவதாகும் என்றார். இது தவிர தொடர்ந்து விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டதும், புதிய சந்தைகளை நோக்கிப் பயணித்ததும், புதிய பொருள்களை அறிமுகம் செய்ததும் நிறுவனத்தின் உற்பத்தித் திறனை அதிகரித்ததும் முக்கியக் காரணங்கள் என்றார்.
2020-21-ம் நிதி ஆண்டில் ரூ.50 ஆயிரம் கோடியை வருமானமாக ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்தகைய நிலையை எட்டுவதற்கு நிறுவனத்தின் கொள்முதல் அளவான தினசரி 300 லட்சம் லிட்டர் என்பதிலிருந்து 380 லட்சம் லிட்டர் என்ற அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
கொல்கத்தாவில் நிறுவனம் விரிவுபடுத்தும் நோக்கில் ஹௌரா மாவட்டத்தில் ரூ.250 கோடி முதலீட்டில் ஒரு ஆலையை நிறுவி வருகிறது. இந்த ஆலை நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டர் பாலை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இது அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என்றார் சோதி.